நாம் வௌவேறு அரசியல் கோணத்தில் பயணித்தாலும் கொள்கை ரீதியிலான வேறுபாடுகளுக்கு அப்பால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துணிச்சில்மிக்க செயற்பாடுகள் பலரின் புருவத்தை உயர்த்த செய்திருக்கின்றது. மக்கள் பிரச்சினைகளின் போது துணிந்து களத்தில் நிற்கும் ஆற்றலும் ஆளுமையுமிக்க ஒரு சமூக தலைவரை மலையகம் இழந்துவிட்டது என ஈரோஸ் அமைப்பின் கொள்கைப்பரப்புச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையொட்டி அவர் விடுத்திருக்கும் இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு மலையக வாழ்வாதாரச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அமரர் ஆறுமுகம் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு முறையான திட்டங்கள் தீட்டியவர். 1994 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்த அவர், தனது பாட்டனார் சௌமிய மூர்த்தி தொண்டமானால் வழிநின்று செயற்பட்டவர். மலையக மக்களின் அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் ஒரு வலுவான ஆளுமையும், தொண்டமான் பரம்பரையில் வந்த மலையக மக்களின் தவிர்க்கமுடியாத அடையாளமுமான விளங்கியவர் ஆறுமுகன் தொண்டமான். 1999 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை பதவியை ஏற்றதிலிருந்து, சுமார் இருபது வருடங்கள் மலையக சமூகத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் அவரின் ஆளுமைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. எமது சிறுபான்மை மக்களின் தலைவரான அவர்,ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுக்காகவும் குரல் கொடுத்தவர் என்றார்.
