பாறுக் ஷிஹான்-
கல்முனையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களுக்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்பு கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை, பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் இடம்பெற்றன. வழமையைவிட பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பொதுமக்களின் விகிதம் மிக்கக்குறைந்து காணப்பட்டது.
இந் நிலையில் கல்முனை பிராந்திய பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் பஸ் வண்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு முகக்கவசம் அணியுமாறும், பஸ்சில் சமூக இடைவெளியை பேணுமாறும் கூறி விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன். முகக்கவசம் அணியாது பஸ்சில் பயணிக்கவேண்டாம் எனவும்அறிவுறுத்தப்பட்டனர்.
கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து இன்று திருகோணமலைக்கு அரச உத்தியோகத்தர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் வண்டி பயணித்ததாகவும், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள கிராமங்களைத் தவிர ஏனைய கிராமங்களுக்கு இடையில் பயணிகள் சேவை இடம்பெற்றதாகவும் கல்முனை பஸ் நிலையத்தின் நேரமுகாமையாளர் மு.கருணாநிதி தெரிவித்தார்.