கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தர்மசேன எச்சரிக்கை.
அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் இயங்கும் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள், கடைகள் உள்ளிட்ட வியாபாரஸ்தலங்களில் கொரோனா தடுப்புக்கான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமல் உதாசீனம் செய்யப்படுவதாக கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தர்மசேன கடும் விசனம் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை (08) கல்முனை மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்திலேயே கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தர்மசேன இவ்விடயத்தை கடும் தொனியில் முன்வைத்து கருத்துரைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
"இப்பிரதேசங்களில் இயங்கும் வியாபாரஸ்தலங்கள் அனைத்திலும் பொருள் கொள்வனவுக்கு வருகின்ற நுகர்வோரிடையே கட்டாயம் ஒரு மீட்டர் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும். இதற்காக ஒவ்வொரு மீட்டருக்குமான இடத்திற்கு அடையாளம் இடப்படுவது சிறந்த ஏற்பாடாக இருக்கும்.
கை கழுவுவதற்கான ஏற்பாடு அல்லது Sanitize Spray ஏற்பாடு கட்டாயம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
வியாபாரிகள் கையுறை, முகக்கவசம் என்பன கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
நுகர்வோர் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கான இத்தகைய சுகாதார நடைமுறைகள் அனைத்து வியாபாரஸ்தலங்களிலும் அவசியம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதனை அவற்றின் உரிமையாளர்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.
இல்லையேல் விசாரணையோ, அறிவித்தலோ எதுவுமின்றி குறித்த வியாபாரஸ்தலங்கள் இராணுவத்தினரால் இழுத்து மூடப்படும்.
இன்று வியாழக்கிழமை (09) தொடக்கம் இராணுவத்தினரால் இவை கடுமையாக கண்காணிக்கப்பட்டு, உதாசீனமாக செயற்படும் வியாபாரஸ்தலங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டார்.
