லைபீரியாவைச் சேர்ந்த கொள்கலன் கப்பலான MSC TARANTO என்ற கப்பலுக்கு சேவைகளை வழங்கும் உள்ளூர் நிறுவனமான MSC லங்காவால் சந்தேகத்திற்குரிய கோவிட் -19 நோயாளி ஒருவர் குறித்த கப்பலில் இருப்பதாகவும் அவரை இலங்கையில் இறக்கிவிடுமாறும் கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்திடம் கோரியுள்ளது. அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன், 36 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சோலிஸ் ரியான் என்ற நபரை நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர இலங்கை கடற்படை உடனடி நடவடிக்கை எடுத்தது.
கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை பதிலளிப்பு பிரிவு கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 05 கடல் மைல் தொலைவில் இருந்த கப்பலை அணுகி, சுகாதார நிபுணர்களால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நோய்வாய்ப்பட்ட நபரை கரைக்கு கொண்டு வந்தது. இதனையடுத்து, 'சுவாசரிய' ஆம்புலன்ஸ் சேவையால் நோயாளியை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு அவர் துறைமுக வளாகத்திலேயே கிருமி நீக்கம் செய்யப்பட்டார்.