-கல்முனை மாநகர முதல்வர் றகீப் உறுதி-
அஸ்லம் எஸ்.மௌலானா-
எத்தகைய விமர்சனங்கள், சவால்கள் எழுந்தாலும் கல்முனையில் கொரோனா தடுப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்முனையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவிக்கையில்;
"கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எமது மக்களை பாதுகாக்கும் நோக்கிலேயே சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களை மையப்படுத்தி, எமது கல்முனை மாநகர கொரோனா தடுப்பு செயலணியினால் அவ்வப்போது பல்வேறுபட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகின்றபோது சில குறைபாடுகளும் மக்களுக்கு அசௌகரியமான சூழல்களும் ஏற்பட்டு விடுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மேயர் என்ற வகையில் நான் மாத்திரம் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றேன்.
இவ்வாறான ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் என்று அனைத்து தரப்பினரும் கலந்துரையாடி, ஏகமானதாகவே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. எந்தவொரு தீர்மானத்தையும் நான் எனது விருப்பப்படி, தன்னிச்சையாக மேற்கொள்வதில்லை. சில சந்தர்ப்பங்களில் எனக்கு உடன்பாடில்லாத விடயங்களில் கூட, மக்கள் பாதுகாப்புக் கருதி, சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுடன் ஒத்துப்போக வேண்டிய நிலையில் இருக்கிறேன். எவ்வாறாயினும் வர்த்தகர் சங்கங்களினதும் சிவில் சமூக பிரதிநிதிகளினதும் முழுமையான இணக்கப்பாட்டுடனேயே இங்கு தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.
அவ்வாறிருந்தும் சில அசௌகரியங்கள் ஏற்படுகின்றபோது அரசியல் நோக்கம் கொண்ட சிலர், சந்தர்ப்பங்களை இலாபகமாக பயன்படுத்திக் கொண்டு முகநூல்கள் வாயிலாக என்னை மட்டும் கடுமையாக விமர்சிக்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட தமது வங்குரோத்து அரசியலை சிலர் மேற்கொள்ளவே செய்கின்றனர். எமது சமூகத்தில் இத்தகைய நபர்கள் இருப்பது வெட்கக்கேடாகும். பெரும்பான்மை சமூகத்தினரால் முஸ்லிம்கள் வித்தியாசமாக விமர்சிக்கப்படுவதற்கு இவர்களது செயற்பாடுகளே காரணமாக அமைந்திருக்கின்றன.
மாநகர சபைகள் கட்டளைகள் சட்டத்தின் பிரகாரம் தொற்று நோய்த்தடுப்பு சம்மந்தமான நடவடிக்கைகளை கையாளும் அதிகாரம் மாநகர மேயருக்கு உரித்தாக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டே நான் அப்பொறுப்பை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றி வருகின்றேன். இதற்கு மேலதிகமாக சுகாதார அமைச்சரினால் கடந்த மார்ச்-25 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி மூலம் ஒரு மாநகர சபை எல்லைக்குள் கொரோனா தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் விவகாரங்களை கையாளுகின்ற தத்துவம் மாநகர மேயருக்கே பொறுப்பளிக்கப்பட்டிருக்கிறது.
அதனால் எத்தகைய விமர்சனங்கள், சவால்கள் எழுந்தாலும் கல்முனையில் கொரோனா தடுப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இருந்து நான் பின்வாங்கப்போவதில்லை. ஏனெனில் என் மீது உரித்தாக்கப்பட்டுள்ள கடமையை நான் செய்தாக வேண்டிய கட்டுப்பாட்டில் இருக்கின்றேன். இல்லையேல் நான் கடமையை நிறைவேற்றத் தவறிய குற்றச்சாட்டுக்குள்ளாக நேரிடும்.
இன்று வரை கல்முனை மாநகர எல்லைக்குள் கொரோனா தொற்றுடைய எவரும் இனம் காணப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற பெறுபேறே கிடைக்கப்பெற்றுள்ளதாக எமது பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
ஆகையினால் எமது பிரதேசம் தொடர்ந்தும் கொரோனா அற்ற பாதுகாப்பான வலயமாக இருப்பதன் மூலமே எமது மக்களை பாதுகாக்க முடியும் என்பதை கவனத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ள கல்முனை மாநகர கொரோனா தடுப்பு செயலணியின் செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்" என்றார்.