இந்த சந்தர்ப்பத்தில் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அமைதியைக் கடைப்பிடித்து வீடுகளுக்குள் இருந்து இறை வணக்கத்தில் ஈடுபட்டு முழு சமூகத்திற்கும் விடிவை தரக்கூடிய ஒரு முழுமையான பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் இறைவனை நெருங்கும் நிலையை ஏற்படுத்துமாறு மிகவும் பணிவாக வேண்டிக் கொள்கின்றேன் என்று முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா மக்களிடம் வினயமான வேண்டுகோளை விடுத்துள்ளார்
உலகில் குறிப்பாக நாட்டில் இடம்பெறும் சோககரமான நெருக்குதல்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா, பின்வருமாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்புத் தரப்பினருடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு விபரீதங்களை தேடி கொள்ளாமல் முடியுமானவரை சட்டம் ஒழுங்கை கடைப்பிடித்து பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக் கொள்கின்றேன்.
கடந்த காலங்களில் நாமே இமாம் ஜமாஅத்தோடு தொழுகையை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டி இருந்த நிலையில் தற்போது எம்மை தற் பாதுகாத்துக் கொள்வதற்காக ஜமாஅத்துடனான தொழுகையை தவிர்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை, நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இது இறைவனுடைய கோபப் பார்வையும் எம்மீதான மிகப்பெரும் சோதனையுமாகும்.
எனவே இந்த சோதனையிலிருந்து விடுபடுவதற்காக அதிகமதிகமாக சுன்னத்தான வணக்க வழிபாடுகளிலும் திக்றுகளிலும் ஈடுபடுமாறு மிகவும் வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். முழு உலகத்தின் மனித சமூகத்திற்கும் பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
