ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவசியமனது விஷேட தேவைசார் கல்வி பற்றியதாகும்.-கல்லூரியின் பீடாதிபதி– எம்.ஐ.எம். நவாஸ்
எம்.ஜே.எம்.சஜீத்-
அட்டாளைச்சேனை தேசிய கல்வியற்கல்லூரில் விஷேட தேவை சார் கல்வி தற்கால கற்றல் கற்பித்தல் பிரயோகங்கள் சம்பந்தமான நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (02) அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் ஆராதனை மண்டபத்தில் விசேட கல்வி ஆசிரிய பயிலுனர்களால் ஆக்கப்பட்ட கட்டுரைகளை தொகுத்து நூலுருவாக்கிய விரிவுரையாளர் ஏ.ஜே.எல். வஸீலின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்.....
இன்றைய நவீன காலத்தில் கல்வி பல கோணங்களில் பிரவாகம் பெற்றுவருகின்ற அதே வேளை பாடசாலை தொடர்பான கல்வியும், ஆசிரியர்கல்வியும் விரிவடைந்துவருகின்றது. முன்பள்ளிக்கல்வி, ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, மூன்றாம்நிலைக் கல்வி என வளர்ந்து வருகின்ற வேகத்தில் பாடசாலைக் கல்வியையும் உயர்கல்வியையும் மேலும் வளர்த்திட விசேட தேவைசார் கல்வி பற்றிய அறிவு மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் வகுப்பறைகளிலும் விரிவுரைமண்டபங்களிலும் பிரயோகித்து கற்பிப்பதற்கு இக்கல்வி அவசியமாகும்.
சிக்கல் நிறைந்த குடும்பச்சூழல், பல்கலாசாரச்சூழல், சிக்கலான பரம்பரை பிறப்பு முறை இவற்றுக்கு மத்தியில் பிறந்த பிள்ளைகளை கொண்டமைந்த வகுப்பறையில் சாதாரண முறையில் ஆசிரியர்கள் கற்பிக்க முடியாது. மாறாக ஆசிரியர் ஏற்கனவே பெற்ற ஆசிரியர் கல்வியுடன் விசேட தேவைசார் பிள்ளைகள் பற்றிய அறிவினையும் இணைத்து கற்பிப்பது காலத்தின் தேவையாகும். இது பற்றிய அறிவினையும் இவ்வறிவினை பரியோகிக்கும் முறையினையும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள விசேட தேவைசார் மாணவர் பற்றியநூலும், விசேட தேவைசார் கல்வி தற்கால கற்றல் கற்பித்தல் பிரயோகங்கள் எனும் தலைப்பிலுள்ள இந்நூல்கள் நிறைவு செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. குறிப்பாக ஆசிரியர்கள் கற்பிக்கும் முன் மாணவர்களை இனங்கண்டு மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் எடுத்தல் வேண்டும் சாதாரண வகுப்பறைகளில் மீத்திறன் கூடிய ,மீத்திறன்குறைந்த, சராசரி மாணவன் எனும் வகைக்கும் அப்பால் விசேட தேவைசார் மாணவர்கள் பல வகையினர் உள்ளடங்குகின்றனர். ஆசிரியர்கள் இவைகளை இனங்கண்டு கற்பிக்க முன்வரல் வேண்டும். அவ்வாறு சரியாக இனங்காணும் போது அவர்களுக்கென்றே உரித்தான விசேட கற்பித்தல் முறை, நுட்பம், விசேட தனியாள் பாடத்திட்டமிடல் அதற்கே உரித்தான கற்பித்தல் சாதனங்கள் பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும். இவ்விடயங்கள் அனைத்தையும் இன்று அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் இடம் பெற்ற விசேட கல்வி தொடர்பான நூல் வெளியீட்டில் வெளியிடப்பட்ட நூலில் காண முடியுமாய் உள்ளது. ஆதலால் இந்நூல் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களிற்கும், பாடசாலைகளிற்கும் கற்பதற்கு பேணிக்காக்க வேண்டிய ஒரு பொக்கிஷமாகும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்வி, தரமேம்பாட்டுக்கான உபபீடாதிபதி எம்.பீ. அஸீஸ் அவர்களும் நிதி நிருவாகத்துக்கான உபபீடாதிபதி எம்.ஏ.கலீல் அவர்களும் தொடருறு கல்விக்கான உபபீடாதிபதி எம்.ஐ. ஜௌபர் மௌலவி உட்பட முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரிய பயிலுனர்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான நூல் பிரதிகளும் வழங்கப்பட்டது.