கொழும்பில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளியின் வீட்டில் கொழும்பு மாநகர சபை, பொதுமக்கள் மற்றும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து கிருமி தொற்று அகற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இலங்கையை ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் பலர், கொரோனா தொற்றுக்குள்ளாகி நாட்டில் இருக்கக்கூடும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இத்தொற்று மேலும் பரவாதிருக்க அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில், கொழும்பில் கடந்த வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளி அடையாளங்காணப்பட்டிருந்தார்.
அவர் தற்போது, ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையிலேயே அவரின் வீட்டில் கிருமி தொற்று அகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன், கொழும்பு செபஸ்தியன் மாவத்தை தனியார் பஸ் நிலையம் மற்றும் அதற்கு அண்டிய பகுதிகளில் (16) திங்கட்கிழமை காலை முதல் கிருமி தொற்று அகற்றல் நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டன.
