எப்.முபாரக் -
நாடளாவிய ரீதியில் இடைக்கால கொடுப்பனவை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி சுகவீன விடுமுறையின் கீழ் இன்று (26)ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்டுவரும் சுகவீன விடுமுறை போராட்டம் காரணமாக மாணவர்களும் பெற்றோரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இப்போராட்டத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டதுடன் கல்வி நடவடிக்கைகளும் முற்றாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை முதல் பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துவந்த பெற்றோரும் இதனால் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் மீண்டும் பிள்ளைகளை திருப்பி அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும் சில பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்த போதிலும் ஆசிரியர்களின் வரவின்மையினால் பாடசாலைகள் வெறிச்சோடிக்காணப்பட்டதாகவும், வீதிகளில் மாணவர்கள் அலைந்து திரிந்ததையும் காணமுடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
