க.கிஷாந்தன்-
"மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தனி வீட்டுத் திட்டத்துக்கு பயனாளிகள் பணம் வழங்க வேண்டியதில்லை. எனவே, யாராவது தரகு பணம் கேட்டு வந்தால் தக்க பாடம் புகட்டுங்கள்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை ஊடாக பதுளை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கான காணி உறுதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நிகழ்வு 28.02.2020 அன்று சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் பதுளை சைமன் பீரிஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஊவா மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தோட்ட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"பெருந்தோட்டப்பகுதிகளில் தரமாகவும்,சிறப்பாகவும் தனிவீடுகளை அமைக்கும் திட்டம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த காலங்களைப்போல் அல்லாது, பணிகள் யாவும் மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெறும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே,செயற்கை வேலிகளை அமைத்து, மரங்கள், பூச்செடிகளை வைத்து பசுமையான சூழலை உருவாக்க வேண்டியது பயனாளிகளின் கடமையாகும். உட்கட்டமைப்பு வசதிகளும் எமது அமைச்சால் செய்துகொடுக்கப்படும்.
கடந்தகாலங்களில் அமைச்சர் திறப்பு விழாவுக்கு வருகிறார், அவரின் அமைப்பாளர் கண்காணிக்க வருகிறார் போன்ற விடயங்களுக்காக தோட்ட மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படியான செயல்களுக்கும் நான் முற்றுபுள்ளி வைத்துள்ளேன்.
வீடமைப்பு திட்டம் துரிதகதியில் இடம்பெறவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இதன்காரணமாகவே இராணுவத்திலுள்ள சிவில் பாதுகாப்பு படையின் பொறியியல் பிரிவிடம் அதற்கான பொறுப்பு ஒப்படைக்க உத்தேசித்துள்ளோம்.அவர்களிடம் வழங்கினால் விரைவாகவும், தரமானதாகவும் வீடுகள் கட்டப்படும். எவரும் தரகுப்பணமும் வசூலிக்கவும் முடியாது. கொடுக்கவும் முடியாது.
வீடமைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீதி, தண்ணீர், மைதானம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க எனது அமைச்சில் பணம் உள்ளது. எனவே, எவருக்கும் கமிசன் கொடுக்க வேண்டியதில்லை. யாராவது தரகு பணம் கேட்டு வந்தால் தக்க பாடம் புகட்டுங்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ,பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் எண்ணக்கருவில் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. அதற்கான விண்ணப்பபடிவத்தில் ஜீ.ஆர். என இருந்தால் கோட்டாபய ராஜபக்ச என சொல்லலாம். எம்.ஆர். என இருந்தால் மஹிந்த ராஜபக்ச என்றுசரி எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், அந்த விண்ணப்பத்தில் ஒருவர் வீ.எஸ். என குறிப்பிட்டுள்ளார். வீ.எஸ். என்றால் (veterinary services ) அதாவது கால்நடை சேவையாகும். எனவே, ஆடு, மாடுகளுக்கு எவ்வாறு வேலை வழங்கமுடியும். தேர்தல் காலத்தில் ஜனாதியை விமர்சித்துவிட்டு பெயரை போட்டுக்கொள்வதற்கான அவரின் திட்டத்தை வைத்துகூட சிலர் பிழைப்பு நடத்துகின்றனர்.
அதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா கிடைக்கும். அது உங்கள் கைகளுக்கு ஏப்ரல் 10 ஆம் திகதியே கிடைக்கும். எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ,பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையிலான இந்த அரசாங்கம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேண்டுகோளின் பிரகாரம் எமது மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்." - என்றார்.