உலகிலேயே மிகவும் சுத்தமான பெட்ரோல் மற்றும் டீசலை, வழங்கும் 1வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதியிலிருந்து இந்தியா முழுவதும் BS IV தரத்திலிருந்து ( யூரோ- IV ) BS VI தரத்திலான ( யூரோ- VI தரத்திற்கு சமமான) பெட்ரோல், டீசல் மட்டுமே விற்கப்படவுள்ளது. இந்தியாவில் வாகனங்கள் மூலம் வெளியிடும் புகையால் முக்கிய நகரங்கள் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் நோக்கில் BS 6 தர எரிபொருள் சந்தைப்படுத்தப்படுகிறது.
இதற்காக இந்தியா முழுவதும் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் ₹95 ஆயிரம் கோடி ரூபாய் ( சுமார் 2 லட்சத்தி 50 ஆயிரம் கோடி ரூபா ) செலவில் புதிய தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
கடந்த வருட இறுதியிலேயே பிஎஸ் 6 தர எரிபொருள் உற்பத்தி துவங்கி விட்டதாக இந்தியாவின் எரிபொருள் சந்தையில் ஏறக்குறைய பாதியைக் கட்டுப்படுத்தும் நிறுவனமான இந்தியன் ஒயில் கோப்பேரேஷன் ( IOC ) தெரிவித்துள்ளது.
அதே சமயம் இந்தியாவின் தலைநகர் டெல்லியின் சுற்றுச்சூழல் மாசடைவதை கருத்தில் கொண்டு 2018ம் ஆண்டு April மாதமே அங்கு BS 6 எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.