ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியின் கீழ் உள்ள அத்தனகல்ல பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டு இறைச்சி விற்பனையை முற்றிலும் தடை செய்வதற்கான பிரேரணை ஒன்றை, அடுத்த சபை அமர்வில் தான் கொண்டு வரப்போவதாகவும், அதற்கான சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும், அத்தனகல்ல பிரதேச சபைத் தலைவர் பிரியந்த புஷ்பகுமார, கடந்த 7 ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வின்போது தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஆளும் ஸ்ரீல.பொ.பெ. கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் மற்றும் ஐ.தே.க., ஸ்ரீல.சு.க., ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் சில உறுப்பினர்கள், ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்கள் இதற்காக எழுந்து நின்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மாட்டு இறைச்சிக் கடைகளின் மூலம் வருடாந்தம் கிடைக்கும் டென்டர் வருமானம், பிரதேச சபைக்கு முற்றாக இல்லாமல் போகும் எனவும், அதனையும் பொருட்படுத்தாமல் இச்செயலில் துணிந்து களமிறங்கவுள்ளதாகவும், சபைத் தலைவர் பிரியந்த மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அத்தனகல்ல பிரதேச சபையின் ஜே.வி.பி. உறுப்பினரான இன்ஸாபை தொடர்பு கொண்டு இது குறித்து வினவிய போது,
அந்த நேரத்தில் சபையின் ஏழு முஸ்லிம் உறுப்பினர்களிலும் இருவர் மாத்திரமே இருந்ததாகவும், தான் இது நடைபெற வேண்டும் என்றால் மாட்டிறைச்சி மட்டுமல்லாது கோழி, பன்றி போன்ற சகல விலங்கினங்களையும் பலியிடுவதைத் தடுக்கும் பிரேரணையும் சபையில் கொண்டு வந்தால், கட்டாயம் ஆதரவளிப்பது எனத் தெரிவித்துள்ளார்.
இது தவிர, பிரதேச சபை உறுப்பினர் இன்ஸாப், இது குறித்து அடுத்த சபை அமர்வுக்குள் ஏனைய முஸ்லிம் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி குறித்த விடயத்தை எதிர்க்கவுள்ளதாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குகளைக் குறிவைத்தே இதனை அவர்கள் செய்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தனது கட்சி (ஜே.வி.பி.) இதனை ஆதரித்தாலும், தான் நிச்சய. இதனை எதிர்க்கப் போவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.