சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மறைவு ஊடகத்துறைக்கு மட்டுமல்லாது கல்வித் துறைக்கும் பாரிய இழப்பாகும் என கல்முனை மாநகர சபையில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆண்டின் கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்ட அமர்வு வியாழக்கிழமை(23) கல்முனை நகர மண்டபத்தில் மாலை 2 மணி முதல் 7 மணிவரை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் ஆரம்பமானது.
இம் மாநகர சபை அமர்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் கடந்த திங்கட்கிழமை மரணமடைந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் புகழ்பெற்ற அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களுக்கான இரங்கல் பிரேரணையை முன்மொழிந்து உரை நிகழ்த்தினார்.
தனது உரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் தனது 60ஆவது வயதில் காலமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி
அவர்களின் இழப்பானது கல்முனை பிராந்தியத்துக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் ஓர் பேரிழப்பாகும் .கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயின்று, குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளோமா பெற்ற புகழ்பெற்ற விஞ்ஞானப் பாட ஆசிரியரான இவர் களுத்துளை ஜீலான் மத்திய கல்லூரி, தொடவத்தை அல் பஹ்ரியா பாடசாலை ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார். இவர் நாடுதழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து அதிபர்களில் ஒருவராவராக தெரிவாகி எம்மண்ணுக்கு பெருமை சேர்த்தார்.
சமூக சேவைகளில் தன்னை அர்ப்பணித்த இவரின் சேவை பாராட்டக்குரியது. சிறுபான்மை மக்களின் பலம் கல்வியாகும் என கூறி பல இளம் ஊடகவியலாளர்களையும், கல்வியலாளரகளையும் உருவாக்கிய பெருமை இவரை சாரும்.இவரின் குடும்பத்திற்கு பொறுமை வழங்கவும் இவரை இறைவன் பொருந்தி கொண்டு சுவனத்தை வழங்கவும் இறைவனை பிராத்திக்கிறேன் என்றார்.
இவ் இரங்கல் உரையில் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கீப் கருத்து தெரிவிக்கையில்
மாணவர்களில் அறிவு களஞ்சியம் நிகழ்வில் புகழ் புத்தவர் இவரில் இழப்பு சமூகத்திற்க்கு பாரிய இழப்பாகும் . ஒலிபரப்புத் துறையில் பல இளம் தலைமுறையினரை உருவாக்கி, ஊடகப் பரப்பில் தனி முத்திரை பதித்த சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, கல்வித் துறையிலும் சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்கியவர்.ஆசிரியராக, அதிபராக கடமையாற்றியவர். ஊடகத்துறையூடாக மாணவர்களின் கல்வி அடைவை மேம்படுத்த அரும்பாடுபட்டவர்.நாடுதழுவிய ரீதியில் பொது அறிவு, விஞ்ஞானம் சார்ந்த விடயங்களை போதிப்பவராகவும் ஊடகத்துறை வளவாளராகவும் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வந்தார்.கல்வி, ஊடகத்துறை, சமூக மற்றும் அரசியல் என பல்துறை ஆளுமைகளைக் கொண்ட இவர் இன, மத பேதமின்றி அனைவருடனும் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் முன்னுதராணமாக செயற்பட்டார்.
“அன்னாரது மறைவு, ஊடகத்துறைக்குப் பாரியதொரு வெற்றிடமாகும். அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அன்னார் மறுமை வாழ்வில் ஈடேற்றம் பெற்று, உயர்ந்த சுவனத்தை அடைய பிரார்த்திப்பதாகவும் இவரின் இழப்பால் அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையை வழங்குவதுடன், அவருக்கு இறைவன் மேலான சுவனத்தை வழங்க பிராத்திக்கிறேன் என்றார்.
சபை அமர்வில் கலந்து கொண்ட ஏனைய உறுப்பினர்களும் தமது உரைகளில் அனுதாபத்தை வெளியிட்டனர்.