ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
பிரேசில் நாட்டில் கடந்த சில நாளாக கடும்மழை பெய்து வருகிறது. பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் பெய்துவரும் கடும்மழை காரணமாக ஸ்டேட் ஓப் மினாஸ் ஜெராய்ஸ் ( (State of Minas Gerais) மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மட்டும் மினாஸ் ஜெராய்ஸ் ( Minas Gerais ) நகரத்தில் 17 செ.மீ. மழை பெய்திருக்கிறது. இது
110 வருடத்தில் இல்லாத அளவுக்கு அதிக மழைப்பொழிவு என அந்நாட்டு வானிலை மையம் தெரிவிக்கிறது. பெய்துவரும் கடும்மழை காரணமாக வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மின்சாரம், வீதி போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், பிரேசிலில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 35 ஆக இருந்தது.
இந்நிலையில், கடும்மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நேற்று மேலும் 23பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்த கடும்மழையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 19 பேரை காணவில்லை.
காணமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.