இதுதான் ஒரேயொரு சிறிய ஆறுதல்


வை எல் எஸ் ஹமீட்-
னாதிபதித் தேர்தல் ஐ தே கட்சியையும் பௌத்த வாக்குகளைப் பெறும் உத்திகளை நோக்கித் தள்ளியிருக்கின்றது. கடந்த தேர்தலில் ஐ தே க வேட்பாளர் பெற்ற பௌத்த வாக்குகளைவிட சிறுபான்மை வாக்குகளே அதிகம்.
இந்த உத்தியின் ஓர் அங்கமாக அடுத்த பொதுத்தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகளுடன் கூட்டுச் சேராமல் ஐ தே க தனித்துப் போட்டியிடுவதை ரணில் விக்ரமசிங்க விரும்புவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் அடிபடுகின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியாளர் ஒரு சிங்கள பௌத்தராக இருக்கட்டும். அவரை பெரும்பான்மையும் சிறுபான்மையும் இணைந்து தீர்மானிப்போம்; என்று சிறுபான்மை கூறியது. அவரைத் தீர்மானிப்பதும் நாமே என்று பெரும்பான்மை கூறியது. அதை நோக்கியே பிரச்சாரங்களும் அமைந்தன. அதில் அண்ணளவாக வெற்றியும் பெற்றார்கள்.

இந்நிலையில் இன்று ஐ தே கட்சியும் சிறுபான்மையை சற்று தள்ளிவைக்கின்ற தோற்றப்பாட்டை பெரும்பான்மைக்கு கொடுக்க முனைவதுபோல் தெரிகிறது.

சுருங்கக்கூறின் இயற்கையாகவோ, செயற்கையாகவோ சிறுபான்மை விரோதப்போக்கை பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்கான உத்தியாக இருகட்சிகளும் கைக்கொள்ளப்போவது தெரிகிறது.

1956ம் ஆண்டுத் தேர்தலில் பண்டாரநாயக்க தனிச்சிங்களச்சட்டம் கொண்டுவருவது தொடர்பாக பிரச்சாரம் செய்தபோது ஐ தே கட்சியும் அதே பிரச்சாரத்தைச் செய்தது. ஆனாலும் அது எடுபடவில்லை; என்பது வேறுவிடயம். ஆனால் இனவாதம்தான் தேர்தலுக்கான முதலீடு என்பதை ஒரு கட்சி நிறுவினால் அடுத்த கட்சியும் அதே பாதையைப் பின்தொடர தள்ளப்படுவது; என்பது இந்த நாட்டின் ஓர் நியதியாகும்.

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இனவாதத்தை சந்தைப்படுத்தும் போட்டியில் இரையாவது சிறுபான்மைதான்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் எனது பல ஆக்கங்களில் இந்த நிலை வரக்கூடிய சாத்தியம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

இவ்வாறான ஒரு சூழ்நிலை வரலாம்; என்பதனால்தான் “ ஜனாதிபதி ஆட்சிமுறை சிறுபான்மைகளுக்கு சாதகமானது; என்ற கருத்து சரியா? என்பது தொடர்பாக சுமார் 2 வருடங்களுக்கு முன் ஓர் தொடர் ஆக்கத்தை வெளியிட்டேன். அப்பொழுது பெரிதாக அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன் அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்தார்.

அதற்கு அன்றைய ஜனாதிபதியும் மொட்டுத்தரப்பு பிரதானிகளும் ஆதரவுவழங்க தயாராக இருப்பதாக செய்திகள் அடிபட்டன. ஆனால் நம்மவர்கள்தான் சஜித்தை ஜனாதிபதியாக்கலாம்; என்ற நம்பிக்கையில் அமைச்சரவையில் மிகவும் ஆக்ரோஷமாக அதனை எதிர்த்ததோடு ரணிலையும் கடுமையாக விமர்சித்து அந்த முயற்சியை தவிடுபொடியாக்கினார்கள்.

அப்பொழுது மீண்டும் ஜனாதிபதிப் பதவியொழிப்பு தொடர்பாக எழுதினேன். அந்த மூன்றுமாத கால எல்லைக்குள் அப்பதவியை ஒழிப்பது சாத்தியம்; என்பதற்குரிய சட்ட நியாயங்களை முன்வைத்திருந்தேன்.

துரதிஷ்டவசமாக நம் தலைமைகள் என்பவர்கள் சமூகத்தைப் பாதிக்கும் முக்கிய விடயங்களிலாவது பரந்துபட்ட ஆலோசனைகளைச் செய்வதில்லை. எல்லாம் அவர்களே என்ற நிலை.

சிறுபான்மையைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தல் எவ்வளவு முக்கியமோ அதைவிடவும் பலமடங்கு பொதுத்தேர்தல் முக்கியம்.

கடந்தகாலங்களில் ஜனாதிபதி முறைமை ஒழிப்புத் தொடர்பாக பேசப்பட்டபோதெல்லாம் ஒரு தனிக்கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறும்வகையில் பொதுத்தேர்தல் முறைமையும் மாற்றப்படவேண்டும்; என்றே பேசப்பட்டு வந்தது. அது சிறுபான்மைக்கு மிகவும் பாதிப்பானது. இது தொடர்பாகவும் நிறைய எழுதியிருக்கின்றேன்.

பொதுத்தேர்தல் முறையில் கைவைக்காமல் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான பொன்னான சந்தர்ப்பம் இம்முறை ரணிலின் அமைச்சரவை பத்திரம்மூலம் கிடைத்தது. அது ஒழிக்கப்பட்டிருந்தால் சமூகங்கள் இவ்வளவுதூரம் துருவப்படுத்தப் பட்டிருக்கமாட்டாது. ஏனெனில் ஜனாதிபதித் தேர்தல் போன்று பொதுத்தேர்தல் இருமுனைப்போட்டியல்ல. மாறாக பல்முனைப்போட்டி.

ஒரு தனிக்கட்சி அறுதிப்பெரும்பான்மை பெறுவதுகூட தற்போதைய தேர்தல்முறையின்கீழ் சிரமமாக இருந்திருக்கும். ஆட்சிக்குவரும் அரசாங்கம் சிறுபான்மைக் கட்சிகளில் தங்கவேண்டியேற்பட்டிருக்கும். அந்நிலையில் சிறுபான்மைக்கு பாதிப்பான தேர்தல்முறை கொண்டுவருவது சிரமமாக இருந்திருக்கும். அரசில் சிறுபான்மைகளின் பலமும் உறுதியாக இருந்திருக்கும்.

துரதிஷ்டவசமாக நமது தலைவர்களின் அரசியல் தூரதிருஷ்டியின்மை காரணமாக அந்த சந்தர்ப்பை அவர்களே உதறித்தள்ளிவிட்டார்கள்.

எதிர்வரும் பொதுத் தேர்தல்
————————————

கடந்த ஜனாதிபதித் தேர்தல்முடிவின்படி மொட்டுத் தரப்பு பொதுத்தேர்தலில் 2/3 பங்கினைப் பெறமுடியாதபோதும் அறுதிப்பெரும்பான்மையை இலகுவாக பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அவ்வாறு பெற்றால் தேர்தலின்பின் 2/3ஐ மொட்டு பெற்றுக்கொள்ளாது; என்று கூறமுடியாது. அடுத்த கட்சிகளில் இருந்து தாராளமாக உடைத்து எடுப்பார்கள். அதில் நிறைய முஸ்லிம் பா உக்களும் அள்ளுண்டு போவார்கள்.

அவ்வாறு 2/3ஐப் பெற்றால் பிரதானமாக பொதுத்தேர்தல்முறை மாற்றியமைக்கப்படலாம். அவ்வாறு நடந்தால் சிறுபான்மை சமூகம் இந்நாட்டில் அரசியல் ரீதியாக செல்லாக்காசான சமூகமாக மாறும்.

மறுபுறம் 19 நீக்கப்பட்டு அல்லது திருத்தப்பட்டு ஜனாதிபதிப்பதவிக்கு மீண்டும் பழைய பலம் வழங்கப்படும். இங்கு நாம் இருவகையான பாதிப்பினைச் சந்திப்போம். இந்த இடத்தில்தான் நாம் தெளிவாக சிந்திக்கவேண்டும். உண்மையில் நம் சகோதரர்கள் சிலரின் சிந்தனைகளைப் பார்க்கின்றபோது மிகவும் கவலையாக இருக்கின்றது.

காது சுளகைப்போன்று இருக்கின்றது. எனவே யானையின் வடிவம் சுழகுபோன்றதுதான். மாற்றுக் கருத்துக்கே இடமில்லை என்கிறார்கள். வால் தும்புத்தடிபோல் இருக்கின்றது. எனவே, யானையின் வடிவம் தும்புத்தடிபோன்றதுதான். மாற்றுக் கருத்துக் கூறுகின்றவர்கள், புரியாதவர்கள்; என்கிறார்கள். தயவுசெய்து ஒரு விடயத்தை சகல கோணங்களில் இருந்தும் ஆராயுங்கள்.

இருவகை ஆபத்துக்கள்
——————————-

பாராளுமன்றத் தேர்தல்முறை மாற்றப்பட்டால் அதன்பின் சிறுபான்மைகளின் ஆதரவில்லாமல் சதாகாலமும் ஆட்சியமைக்கும் நிலை ( இந்தியாவைப்போன்று) ஏற்படலாம். அதேநேரம் சிறுபான்மைப் பிரதிநிதித்துவங்கள், குறிப்பாக முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழரின் பிரதிநிதித்துவங்கள் கணிசமாக குறையலாம்.

அடுத்ததாக 19 நீக்கப்பட்ட/ திருத்தப்பட்ட பலம் பொருந்திய ஜனாதிபதி தனிச்சிங்கள பௌத்த வாக்குகளால் தெரிவுசெய்யப்படலாம். அதற்காக இனவாதத்தீ ஆட்சிக்கதிரைக்கு கனவுகாணும் சகல தரப்பினராலும் மூட்டப்படவேண்டும்; என்பது நிரந்தர நியதியாகலாம். அந்நிலையில் சிறுபான்மைகளின்நிலை இக்கட்டானதாக மாறப்போகிறது.

தற்போதைய அமைச்சரவையில் ஓர் முஸ்லிம் இல்லையென்பது வெறுமனே அவ்வாறு ஓர் அமைச்சர் நியமிக்கப்பட்டாலும்கூட எதைச் சாதித்துவிடுவார்? என்ற கேள்வியின் கோணத்தில் இருந்து பார்க்கபடுவதல்ல. கடந்தமுறை முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்தபோது மகாநாயக்க தேரர்கள்கூட கவலைப்படுமளவு பாரதூரமாக இருந்தது. ஓரின ஆட்சியை அண்ணளவாக நிறுவிய இத்தேர்தல் ஒரு சிறுபான்மை சமூகத்தை ஒட்டுமொத்தமாக புறந்தள்ளக்கூடிய மனோநிலையை ஆட்சியாளர்கட்கு கொடுத்திருக்கின்றது.

இங்கிருந்துதான் எதிர்காலத்தை சூழப்போகின்ற இருளை நாம் அடையாளம் காணவேண்டி இருக்கின்றது.

இம்முறை ஜனாதிபதிப் பதவியை ஒழிக்க ரணில் எடுத்த முயற்சியை நம்மவர்கள் முறியடிக்காமல் அது வெற்றியளிக்க இடம்கொடுக்கப்பட்டிருந்தால் இன்று இந்த இக்கட்டான நிலை தோன்றியிருக்காது.

இப்பொழுது சிறுபான்மை செய்யக்கூடியதெல்லாம் தத்தமது சொந்தக் கட்சிகளில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுக்கொள்வது மாத்திரம்தான்.

பாராளுமன்றம் கலைக்கப்பட இன்னும் சுமார் மூன்று மாதம் இருக்கையில் பொதுத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு இதே ஆதரவுத்தளம் இருக்குமா? அதிகரிக்குமா? குறையுமா? என்பதை தற்போது திட்டவட்டமாக கூறமுடியாது.

சிலவேளை குறைந்து சுயமாக அறுதிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அப்பொழுது சிறுபான்மைக்கு கணிசமான அரசியல்பலம் கிடைக்கும். சிலவேளை அறுதிப்பெரும்பான்மை பெற்றாலும் 2/3 இற்கு சிறுபான்மை வாக்குகள் தேவைப்படும். அந்த சந்தர்ப்பத்தைப் பாவித்து தேர்தல்முறை மாற்றத்தை தடுக்கலாம்; அல்லது பாதிப்பைக் குறைக்க முற்படலாம்.

இவற்றை உங்கள் தலைவர்கள் சாதிப்பார்களா? கடந்த காலங்களில் எதைச் சாதித்தார்கள்? என்ற கேள்விகளைக் கேட்கவேண்டாம். அவர்கள்தான் உங்கள் பெருந்தலைவர்கள் என்று தீர்மானித்தவர்கள் நீங்கள். அவைதொடர்பாக வேறாக எழுதவேண்டும்.

அதேநேரம் அக்கட்சிகளில் தெரிவுசெய்தாலும் அந்த பா உ க்களில் எத்தனபேர் கட்சிகளில் இருப்பார்கள்? எத்தனைபேர் அமைச்சுப் பதவிகளுக்காக கட்சிமாறி சோரம்போவார்கள்? என்ற கேள்வியையும் கேட்கவேண்டாம். ஏனெனில் யாரைத் தெரிவுசெய்ய வேண்டும்; என்பது உங்களைப் பொறுத்தது.

இங்கு புரிந்துகொள்ள வேண்டியது; இன்றைய சூழ்நிலையில் நமக்கு இருக்கின்ற ஒரேயொரு சிறிய துரும்பு தனித்துவமாக அதிகூடிய பிரதிநிதிகளை நாம் பெற்றுக்கொள்வதுதான். அது சஜித்தைப் பிரதமராக்குவதற்கு என்று யாராவது கூறினால் அது அரசியல் அறியாமை.

நாம் சுயமாக அதிகூடிய ஆசனங்களைப் பெற்றதன்பின் தேசிய அரசியலில் தற்போதைய ஆட்சித்தரப்பிற்கு முட்டுக்கொடுப்பதா? எதிர்த்தரப்பில் பிரதமரை உருவாக்குவதா? என்பது தேசியக்கட்சிகளின் தேர்தல்முடிவுகள், மற்றும் தவிர்க்கப்படவேண்டிய பாராளுமன்றத் தேர்தல்முறை மாற்றம் உட்பட நமது பாதுகாப்பு மற்றும் பிரச்சினைகள் தொடர்பான சரியான உடன்பாடுகளோடுகளை அடைவதில் தங்கியிருக்கின்றது.

இன்றைய நமது தலைவர்கள் இந்தவிடயங்களை எவ்வளவுதூரம் சாதிப்பார்கள்? என்பது பாரிய ஒரு கேள்விதான். ஆனாலும் நமக்கு இருக்கின்ற சிறிய ஒரு ஆறுதல் இதனை சரியாக செய்வதுமாத்திரம்தான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -