ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளில் ஒன்றான நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான புதிய இடதுசாரி முன்னணி வருகின்ற பொது தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு தீர்மானித்து உள்ளது.
அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தை இலக்கு வைத்து பொது தேர்தலை நோக்கிய முன்னெடுப்புகளை புதிய இடதுசாரி முன்னணி ஆரம்பித்து உள்ளது. இதன்படி இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் விசேட தூதுவராக ஜன சஹன ஸ்ரீலங்கா மனித நேய ஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் தேசப்பிரிய இம்மாவட்டத்துக்கு இன்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டு வந்தார்.
பெரியநீலாவணை முதல் பொத்துவில் வரையுள்ள பிரதேசங்களில் இருந்து அரசியல், ஆன்மீக, சமூக, பொதுநல, ஊடக செயற்பாட்டாளர்கள் பலரும் இவரின் பங்கேற்புடன் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற மந்திராலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு, ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, அமைப்பு ரீதியாக இணைந்து செயற்படுவது என்று ஒருமித்த தீர்மானம் எடுத்தனர்.
இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அம்பாறை மாவட்ட அணியின் தலைவராக முஹமட் முஸ்தபா முஹமட் நிஸாம் ஒரு மனதாக தெரிவு செய்யப்பட்டார். அதே போல செயலாளர், பொருளாளர், உப தலைவர், ஊடக செயலாளர், ஆன்மீக மற்றும் கலாசார செயலாளர், நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் மகளிர் அணியும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் இவர்கள் எல்லோரும் சம்பிரதாயபூர்வமாக புதிய இடதுசாரி முன்னணியில் இணைந்து கொண்டனர்.
தலைவர் நிஸாம் இங்கு பேசியபோது இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் பட்டவர், சிறுபான்மை மக்களுக்காகவும் எப்போதும் குரல் கொடுத்து வருபவர், ஆகவேதான் தமிழ் பேசும் மக்களினதும் நன்மதிப்பை என்றென்றைக்கும் உரித்தாக்கி வைத்திருப்பவராக உள்ளார், அதே போல ராஜபக்ஸ சகோதரர்களின் பெருமதிப்புக்குரிய முதுபெரும் அரசியல்வாதியாகவும் விளங்குகின்றார், மிக சரியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்று கூடி மிக சரியான தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம், எமது இலட்சிய பயணம் நிச்சயம் வெல்லும் என்பது திண்ணம், எங்களுக்குள்ளும் இன, மத, மொழி பேதங்கள் கிடையாது என்றார்.