அது சட்டப்படியான நிறுவனம். அதனை கற்றிந்து நடைமுறைப்படுத்த வேண்டும். தலவாக்கலையில் திலகர் எம்பி
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா- மலையக மக்களின் வரலாற்றில் மிகப்பெரும் சாதனையாக அமைவது தம்மை முன்னேற்றிக்கொள்ள அந்த மக்கள் தாமாக உருவாக்கிய மலையக அபிவிருத்தி அதிகார சபையாகும். அது பெயர்பலகையை கொண்டு இயங்கும் கடை போன்றதல்ல. மலையகப் பெருந்தோட்டத்துறை மக்களுக்கு எவ்வாறெல்லாம் பணியாற்ற முடியும் எனும் சட்ட ஆவணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள நிறுவனம். அந்த சட்டத்தை கற்றறிந்து மலையக அதிகார சபையை முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் நுவரஎலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்,
ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மக்கள் சந்திப்புகூட்டங்கள் கடந்த சனியன்று கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட கெலிவத்த, போகஹவத்தை, தலவாக்கலை பகுதிகளில் நடைபெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரஎலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழநி திகாம்பரம் தலைமையில் தலவாக்கலையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே திலகர் எம்பி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தொழிலாளர் தேசிய சங்கத்தின் 54 வருட வரலாற்றில் 4 வருடங்ககளே அமைச்சுப்பதவியை அதன் தலைமை கொண்டிருந்தது. அந்த அமைச்சுப்பதவி கால ஆரம்பத்திலேயே ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவை தலவாக்கலை நகரிலேயே கொண்டாடுனோம். அதன்போதே முதன் முறையாக மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு முழுமையான காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது. மலையகத்தில் புதிய கிராமங்களை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அம்சமாக தலவாக்கலையை அண்மித்த ஹொலிரூட் தோட்டத்தில் சந்திரசேகரன்புரம் அமைக்கப்பட்டது. பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டு கொட்டகலை பிரதேச சபை போன்ற புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. எமது முயற்சியின் பயனாக பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு விடயம் முன்வைக்கப்பட்டு இப்போது அதுவும் நடைமுறைக்கு வரவுள்ளது. மலையக அதிகார சபையும் உருவாக்கப்பட்டது.
மலையக அதிகார சபையின் உருவாக்கம் என்பது மலையக வரலாற்று சாதனை ஆகும். 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் 19 எமது உரிமைச் சட்டங்கள் இரண்டினை நிறைவேற்றிய நாளாகும். எமது அபிவிருத்திக்கு தடையாக இருந்த பிரதேச சபைச் சட்டம் திருத்தப்பட்டதும் எமது அபிவிருத்திக்கு தேவையான அதிகார சபைச் சட்டம் உருவாக்கப்பட்டதும் அந்த நாளாகும். அதிகார சபை வெறும் பெயர் பலகை என யாரோ புலம்பியதாக கேள்விபட்டேன். பெயர் பலகை வைத்து இயங்கும் கடையல்ல அது. அதற்கான சட்டதிட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனை கற்றறிந்து நடைமுறைப்படுத்த முன்வாருங்கள். முடியாவிட்டால் ஒதுங்கிச் செல்லுங்கள். பொதுத் தேர்தலின் பின்னர் நாங்கள் நடைமுறைப்படுத்திக் காட்டுகிறோம். அதற்கான ஆணையை மக்கள் எப்போதும் எமக்கு வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.