எச்.எம்.எம்.பர்ஸான்-
கன்றுக்குட்டி ஒன்றை திருடி 3200 ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் சனிக்கிழமை (28) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஜ்மாநகரில் மாடுகளை வளர்த்து வரும் நபர் ஒருவருடைய கன்றுக்குட்டி ஒன்றை திருடி அதனை மீராவோடை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு திருடர்கள் விற்பனை செய்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நான்கு பேர் சேர்ந்து குறித்த கன்றுக்குட்டியை திருடியுள்ளனர். அதில் அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடு ஒன்றின் காரணமாக திருடிய நபர்களில் ஒருவர் சம்பவத்தை கன்றுக்குட்டியின் உரிமையாளரிடம் கூறியுள்ளார்.
குறித்த நபர் வழங்கிய தகவலின் படி உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கன்றுக்குட்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.