ஏழையின் சிரிப்பில்இறைவனைக்கண்ட சுவாமி நடராஜானந்தா ஜீ.


சுவாமி நடராஜானந்தா ஜீயின் 116வது ஜனனதினம் இன்று(29.11.2019) வெள்ளிக்கிழமை.
மிழ்கூறு நல்லுகிற்கு உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியராம் சுவாமி
விபுலானந்த அடிகளாரை ஈன்றளித்த கிழக்கின் காரைதீவு மண் மற்றுமொரு
சேவைத்துறவியையும் ஈன்றளித்தது. அவர்தான் சுவாமி நடராஜானந்த மஹராஜ்.  சேவைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தசுவாமியின் 116வது ஜனனதினம் இன்று(29.11.2019) வெள்ளிக்கிழமை ஆகும்.

அம்பாறை மாவட்டத்தில் பழம்பெரும் சிறப்பு வாய்ந்த காரைதீவு மண்ணிலே
கிழக்கு வானின் விடிவெள்ளியாக இரு கண்மணிகள் அவதரித்தனர். அவர்களில் ஒருவர் உலகம் போற்றும் 'யாழ்நூல் வல்லோன்' உலகின் 'முதற்றமிழ் பேராசான்' 'முத்தமிழ் வித்தகர்' சுவாமி விபுலானந்தர் .
மற்றையவர் 'உத்தமத்துறவி' 'சேவையின் சிகரம்' 'ஏழையின் சிரிப்பினில்
இறைவனைக்கண்ட பொதுநெறிப்பெரியார்' 'நடமாடும் தெய்வம்'
'ஏழைச்சிறுவர்களின் வாழ்வில் கல்வி எனும் சுடரை ஏற்றி மறுமலர்ச்சியை
தோற்றுவித்த சேவாதிலகம்' 'ஏழைகளின் இல்லங்களில் ஒளியூட்டிய ஞானசூரியன்' சுவாமி நடராஜானந்தர் கார்காத்த வேளாள மரபிலே கதிர்காமத்தம்பி விதானையாருக்கும்
மயிலம்மாவிற்கும் மகனாக 1903ம் ஆண்டு கார்த்திகை மாதம் 29ம் திகதி
இப்பூவுலகில் அவதரித்தார். அவரது பிள்ளைத்திருநாமம் சிதம்பரப்பிள்ளை.
இவரை செல்லமாக 'சீனிவாசகம்' எனவும் அழைத்தனர். சீனிவாசகம் தனது ஆரம்பக்கல்வியை காரைதீவு ஆண்கள் பாடசாலையிலும் அடுத்து
கல்முனை அர்ச் மரியாள் ஆங்கிலக்கல்லூரி மற்றும் மட்டக்களப்பு அர்ச்
மைக்கேல் கல்லூரியிலும் பெற்று சிறந்த மாணவனாகத் திகழ்ந்தார்.

சுவாமிகள் கேம்பிரிச் சீனியர் பரீட்சை லண்டன் மெற்றிக்குலேசன் ஆங்கில
ஆசிரியர் தராதரப்பத்திரம் போன்ற பரீட்சைகளில் தேறி சிறந்த ஓர் ஆசானாக தன்னை உயர்த்திக்கொண்டார். தனது கல்விப்பேற்றினால் திருகோணமலை இந்துக்கல்லூரி மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் யாழ் வைத்தீஸ்வரா வித்தியாலயம் ஆகியவற்றில் தனது ஆசிரியத் தொழிலை சீராகச் செய்து தனது உன்னத பணியின் பேறாக சிறந்த கல்வியறிவுள்ள மாணவச் செல்வங்களை உருவாக்கினார்.

ஆசிரியத் தொழிலின் புனிதத்தன்மைக்குச் சான்றாக விளங்கியவர் சுவாமிகள். இவரிடம் கற்றோர் பின் பல கலைகளிலும் சிறந்து விளங்கி உயர் பதவி வகித்தனர். இவர் ஆசிரியர் தொழிலை விட்டு நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பொறியியல் உதவியாளராகவும் பணியாற்றினார்.

செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தும் அழியும் பொருளின் மேல்
பற்றறுத்து அழியாப்பேரின்பப் பெருவாழ்வான துறவு வாழ்வின் மேல் அவரது மனம் நாட்டம் கொண்டது. இராமகிருஷ்ண சங்கத்தின் பணிகளும் தொண்டுகளும் கடமைகளும் சுவாமிகளை மிகவவும் கவர்ந்தன. அதன் காரணமாக தனது பதவியை துறந்தார்.

அவ்வேளையில் சிதம்பரப்பிள்ளையின் உறவினரான சுவாமி விபுலானந்தரின் அருட்பார்வையால் கவரப்பட்டு இராமகிருஸ்ண சங்கத்தில் சேர்ந்து 'நிர்வேத சைதன்யர்' எனும் பிரமச்சரிய நாமம் பெற்று துறவுநிலை பூண்டார்.
ரங்கூனில் இராமகிருஷ்ண சங்கத்தால் நடாத்தப்பட்ட இலவச மருத்துவமனையில் வைத்தியர்களுக்கு உதவியாக நோயாளிகளுக்கு வேண்டிய சிறந்த சேவையாற்றினார். 2ம் உலகப்போரின்போது வீசப்பட்ட குண்டின் காரணமாக ரங்கூன் பிரதேசம் முற்றாக பாதிக்கபட்டு மக்கள் அகதிகளாயினர். சுவாமிகளும் அகதியாக கல்கத்தாவை வந்தடைந்து பின் தாய்நாடு திரும்பினார்.
1943ம் ஆண்டு கல்கத்தா நகரிலுள்ள இராமகிருஷ்ண சங்கத்தலைமையகத்தில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச்சீடரான சுவாமி அகண்டானந்தரைக் குருவாகக் கொண்டு சந்நியாச தீட்சை பெற்று 'சுவாமி நடராஜானந்தர்' எனும் தீட்சா நாமம் பெற்றார்.
பாரதத்தின் நாட்டறப்பள்ளி உதக மண்டலம் போன்ற பல இடங்களிலும் கடமையாற்றினார்.
பின் மட்டக்களப்புக் கல்லடியில் அமைந்துள்ள சிவபுரியில் தங்கியிருந்து 26
இராமகிருஸ்ண சங்கப்பாடசாலைகளினதும் 3 சிறுவர் இல்லங்களினதும்
முகாமையாளராக அரும்பணியாற்றினார்.
சுவாமி நடராஜானந்தர் முகாமையாளராகப்பணியாற்றிய காலம் மிவும் கஸ்டமான காலமாகும். இல்லக்குழந்தைகளுக்குரிய உணவு உடை உறையுள் போன்ற முக்கிய தேவைகளுக்குக் கூட பஞ்சம் நிலவிய காலம். 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என நினைத்து வாழ்ந்த சுவாமிகள் சுவாமிகளுக்குரிய ஒரு இலக்கணமாகத் திகழ்ந்தார்

அறுவடைக்காலங்களில் சாக்கினைத் தோளில் போட்டுக்கொண்டு களவெட்டிகளுக்குச் சென்று அங்கு போடிமார் கொடுக்கும் நெல்லையும் பொருட்களையும் பணத்தையும் கொண்டு பெற்றோரை இழந்த விடுதிக்குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றினார். அதுமட்டுமன்றி தாயாய் அன்புகாட்டி அரவணைத்து தந்தையாய் கல்வியறிவூட்டி இல்லச்சிறுவர்கள் நோயுற்றவேளை இரவு பகல் பாராது விழித்திருந்து சேவையாற்றும் போது சேவகனாகவும் உன்னத பணிகள்
செய்தார்.
அது மட்டுமன்றி உடற்பயிற்சி யோகாசனம் ஆன்மீகம் என்பவற்றை
இல்லக்குழந்தைகளுக்கு சாதனை முறையில் பயிற்றுவித்தார். சகல இன மத
மாணவர்களையும் ஒன்று சேர்த்து கல்வி மனிதப்பண்புகள் சமய சிந்தனை
சகோதரத்துவம் என்பவற்றிலே மாணவர்களது மனதை ஒருமுகப்படுத்தியவரும் இவரே.கண்ணை இமையிரண்டு காப்பது போல இல்லக்குழந்தைகளை வண்ணமறக் காத்து நின்றவர்தான் சுவாமி நடராஜானந்தர். 'இங்கிவரை நாம்பெறவே என்ன
தவம்செய்தோம்' என அன்று அந்த இல்லச்சிறுவர்கள் அகமகிழ்ந்தனர்.
சுவாமிகள் தனக்கென்று ஏதும் விசேடமாக செய்து உண்ணமாட்டார். உடை
விடயத்திலும் அப்படியே. 'மூன்று சோடி உடுப்பு ஒரு மனிதருக்குப் போதும்'
என்பார். இது போல இறுதி மூச்சுவரை வாழ்ந்து காட்டினார்.
சுவாமிகளின் மேற்பார்வையில் இருந்த சிவானந்தா இல்லம் காரைதீவு மகளிர் இல்லம் ஆனைப்பந்தி மகளிர் இல்லம் ஆகிய இல்லங்களிலுள்ள குழந்தைகளின் தேவைகளையும் கடமைகளையும் நிறைவேற்றவேண்டிய பாரிய பொறுப்பு சுவாமிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சிவபுரியில் இருந்தவாறு சுவாமிகள் எதற்கும் மனந்தளராது தனது கடமைகளை செவ்வனே செய்து சேவா திலகமாகத் திகழ்ந்தார்.
உண்மைத்துறவியாக சேவையின் சிகரமாக ஏழைக்குழந்தைகளின் அன்பு அன்னையாக நல்லாசானாக குன்றிலிட்ட தீபம் போல் பிரகாசித்த அன்புத் தெய்வம் 1967ம் ஆண்டு பங்குனி மாதம் 18ம் திகழி சனிக்கிழமை அதிகாலை 04.30 மணியளவில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தை தனது மார்பிலே அணைத்த வண்ணம் இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.

ஏழையின் சிரிப்பினில் இறைவனைக்கண்ட அமர ஜோதியாம் நடராஜானந்த ஜோதி அணையாத ஜோதியாக இறையடியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
சுவாமி நடராஜானந்த நூற்றாண்டுவிழாக்குழுச் செயலாளர்
 காரைதீவு

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -