அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரச தரப்பில் இரண்டு முஸ்லிம் எம் பீக்களே உள்ளனர். அதுவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சுதந்திரக்கட்சி எம் பீக்களான பைசர் முஸ்தபா, மஸ்தான் ஆகியோராகும். சுதந்திரக்கட்சி தற்போது பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சியாகும்.
நமது நாட்டை பார்க்கும் போது வடக்கு தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்குகளை அள்ளி போட்டாலும் தமிழ் மக்களின் உண்மையான சேவகரான டக்ளஸ் தேவானந்தாவையும் வெல்ல வைத்தனர். இதன் காரணமாக வடக்கின் ஒரேயொரு அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல் ஐ தே கவின் திகாம்பரத்துக்கு மலையக மக்கள் அதிக வாக்குகளை அள்ளி போட்டாலும் அங்கும் சில மக்கள் தூர சிந்தனையுடன் மஹிந்தவுடன் இருந்து தோற்ற பின்பும் தொண்டமானுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்து இன்று அம்மக்களுக்கு ஒரு அமைச்சர் கிடைத்துள்ளார். ஆனால் முஸ்லிம் சமூகம் என்ன செய்தது?
பணம், பதவி, பாட்டுக்கு மயங்கி ஒரே தரப்பான ஐ தே க கூட்டுக்கே வாக்களித்ததன் விளைவு இன்று கிழக்கு முஸ்லிம்களுக்கு எந்த அமைச்சும் இல்லை. இதற்காக அரசை நொந்து பலன் இல்லை. தம்மைத்தாமே நொந்து கொண்டு தம்மை திருத்திக்கொள்ள இனியாவது முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும். குறைந்தது அதாவுள்ளாவையாவது வெற்றி பெற வைத்திருக்கலாம்.
இனியாவது அம்பாரை மாவட்ட முஸ்லிம்களும் கிழக்கு முஸ்லிம்களும் ஏனைய முஸ்லிம்களும் அரசியலில் உணர்வை பாவிக்காமல் புத்தியை பாவித்து சிந்திக்க வேண்டும்.
இரு தரப்பு அரசியல்வாதிகளுக்கும் சரிசமமாக வாக்களிக்க வேண்டும் என்பதை உலமா கட்சி தொடர்ந்து சொல்லி வருகிறது. ஒரு குடும்பத்தில் ஆறு வாக்குகள் இருந்தால் அவற்றை இரு தரப்புக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை பல காலமாக விழிப்பூட்டி வருகிறது.
விரைவில் முஸ்லிம் எம் பீக்கள் இருவருக்கும் ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சு கிடைக்கும் என்ற கோரிக்கையை உலமா கட்சி அரசிடம் முன் வைத்துள்ளது. சமூகம் இது விடயத்தில் பொறுமையாக இருந்து அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும். முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாத போதும் எமக்கு ஜனாதிபதி கோட்டா மீதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதும் நம்பிக்கை உள்ளதால் அவர்கள் நிச்சயம் முஸ்லிம்களின் நலனை காப்பார்கள் என்ற உறுதி எமக்குள்ளது.