ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாயவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிர்ஸ்சுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இது முழுக்க முழுக்க அரசியல் நாடகம் இதனை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் 22 கம்பனிகளும் அறிவிக்குமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம்.இது தேர்தல் வாக்குறுதி மாத்திரமே என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸணன் தெரிவித்தார்.
'அனைவரும் ஒன்றாக செல்வோம்' எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணி இணைந்து ஏற்பாடு செய்யும் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று நுவரெலியா வாசிகசாலை மண்டபத்தில் இன்று (19) நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும்,முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம்.நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் கந்தசாமி சிவஞானம்,வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் ஜனார்த்தன்,மலையக தொழிலாளர் முன்னணியின் மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ..
39 வருடங்களின் பின்பு யாழ்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் கொடுத்துள்ளமை தொடர்பில் இனவாத கருத்துக்கள் வெளியிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.தமிழும் அரசகரும மொழி என்பதை இனவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு இனவாதம் பேசி தமிழர்களின் வாக்குகளும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும தங்களுககு தேவையில்லை.என்ற நிலைபாட்டில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இனவாதத்தினை தூண்டி அதில் குளிர்காய்வதற்கு ஒரு கூட்டம் தயாராகி வருகிறது. என்பது தெளிவாக அறியக்கூடியதாக உள்ளது.
வடக்கில் இருக்கின்ற ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து 13 அம்ச கோரிக்கையை தயாரித்துள்ளது.இது தொடர்பாக அவர்கள் எதிர்காலத்தில் பிரதான வேட்பாளர்கள் உடன் கலந்துரையாட உள்ளதாக தெரிவித்திருக்கினறார்கள்.ஆனால் ஒரு சிலர் 13 அம்ச கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டதாகவும் ரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திட பட்டுள்ளதாகவும் பொய்யான தகவல்களை ஊடாகத்திலே வெளியிடுகின்றனர்.
இது முழுமையாக ஒரு இனவாத செயல்பாடாகவே பார்க்க வேண்டும் இதனை தமிழ் முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.