வெற்றி: சஜித்திற்கு சுலபமுமல்ல, கோத்தாவிற்கு நிச்சயிக்கப்பட்டதுமல்ல.


எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது – 05-

திர்வரும் 2019 நவம்பர் 16 ஆந் திகதி இலங்கையின் எட்டாவது செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருப்பது நாமறிந்ததே, இத்தேர்தலில் போட்டி இடுவதற்காக 41 பேர் கட்டுப்பணம் செலுத்தி இருந்த போதிலும் தேர்தல் மனுக்களை கையளிப்பதற்கான தினமான 07.10.2019இல் 35 பேர் மட்டுமே நியமனம் பத்திரங்களை சமர்ப்பித்திருத்தனர். எதுஎவ்வாறு இருந்தாலும் பலத்த போட்டி நிலை என்பது இரு முனையைக் கொண்டாதாகவே அமையும் என்று நாம் திடம் கொள்ள முடியும்.
ஐக்கிய தேசிய கட்சியை பிரதானமாகக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனயின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவும் களமிறங்கி இருக்கும் இத்தேர்தலில் பலத்த போட்டி நிலையும் இவ்விருவர்களுக்கிடையில்தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இராது. ஏனெனில் தேசிய மக்கள் சக்தியாக போட்டியிடும் ஜே.வி.பி வேட்பாளர் அதிகாரத்துக்கு வருவதற்கான போதுமான வாக்கு பலத்தின் பின்னணியைக் கொண்டவர் அல்லர்.

அதே நேரம் ஏனைய 32 பேர்களும் அதிகாரத்தை அடைந்து கொள்ளும் வகையில் தேர்தலை எதிர்கொள்பவர்களல்லர். மாறாக வெவ்வேறு உள்நோக்கங்களின் அடிப்படையில் களமிறங்கி இருப்பவர்கள் என்பது மறைவன்று.ஆயினும் நமது நாட்டின் செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதித் தேர்தலில் முப்பத்து ஐந்து பேர் போட்டியாளர்களாக இருப்பது இதுவே முதற் தடவையாகும்

சஜித் பிரேமதாஸ அவர்கள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் தன்னை வேட்பாளராக ஆக்கிக் கொண்டமை கூட பலத்த சவால்களுக்கு மத்தியில் நடைபெற்ற ஒன்றென்பது கவனிக்கத்தக்கது. தன்னை வேட்பாளராக நிலைநிறுத்திக் கொள்வதற்கு மிகுந்த போராட்டங்களை செய்ய வேண்டிய நெருக்கடியை இவர் சந்தித்தவர். அது மட்டுமன்றி தனது ஐ.தே.கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க உடனடியாக சம்மதம் தெரிவிக்காத ஒரு கெடுபிடிக்குள் போராடி அவரை நிர்பந்திக்க வைத்து வேட்பாளராக மாறிய கதை நாடறிந்ததே.
இதனால் ஐ.தே கட்சியின் தலைவர் ரணில் இவரை தோற்கடிப்பதற்கு திரைமறைவில் செயலாற்றுவார் என்று எதிரணிகளும் சில அரசியல் ஆய்வாளர்களும் அரூடம் தெரிவித்து கொண்டிருப்பதும் மிகப் பகிரங்கமானது. இத்தகைய முதற்கட்ட தடைகளை உடைத்தெறிந்து தன்னை ஒரு ஜனாதிபதி வேட்பாளராக வெற்றியடைந்திருக்கும் இவரது தேர்தல் களமும் அதிகாரத்திற்கு இலகுவாக வந்து விடுவார் என்ற அபிப்பிராயத்தை முன்வைப்பது கடினமான ஒன்றாகவே காணப்படுகின்றது.
சஜித் பிரேமதாஸவை பொறுத்தவரை நமது நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வுகளை நோக்கி நகரும் பாங்கில் அதிக ஈடுபாடு இல்லாதவர் மற்றும் சர்வதேச ரீதியான உறவுகளிலும் அறிமுகத்திலும் வெகுவான ஈடுபாடு கொண்டவரும் அல்லர். அதே நேரம் தனது கட்சித் தலைவர் ரணிலோடு வைத்து நோக்கினாலும் இவருக்கான அரசியல் சாணக்சியம் மற்றும் கட்சிக்குள்ளான செல்வாக்கும் சற்று குறைந்தவர் போன்ற தோற்றப்பாடும் உண்டு இவற்றுக்கப்பால் தனது கட்சி ஓர் இறங்குமுகத்தை நோக்கி நகர்கின்ற ஒரு தொய்வையும் அடைந்திருக்கும் நிலையில் இவர் வேட்பாளராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாள நான்கு வருடங்கள் அரசாங்கமாக இருந்து வரும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஓர் அமைச்சராக சஜித் பிரேமதாஸ இருப்பு கொண்டிருந்தாலும் இவர்களின் சுமார் இரண்டரை வருட ஆட்சி காலம் கழிந்த பின்னர் கடந்த 10 பெப்ரவரி 2018 இல் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இக்கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இதனை வேறு வார்த்தையில் சொல்வதானால் பொது ஜன பெரமுன தனித்து பெற்ற வாக்குப் பலம், சபைகளின் எண்ணிக்கை என்பனவற்றில் ஒப்பீட்டளவில் பாரிய வித்தியாசத்தை காணலாம்.

340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு நடைபெற்ற இத்தேர்தலில் 34 சபைகளை வெற்றிகொண்டு 2385 உறுப்பினர்கள் தெரிவாகிய போதிலும் இக்கட்சி பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் 3,640,620 ஆகும்.இதில் முஸ்லிம் கட்சிகள், தமிழ் கட்சிகளின் கூட்டும் இருப்பதினால் சுமார் 3,150,000 வாக்குகள் பெரும்பான்மைச் சமூகமான சிங்களவர்களின் வாக்குகளாக அமைந்திருக்கலாம் என கணிப்பீடுவது தவறாகாது. இத்தகைய பலவீனமான நிலையில் இருக்கும் கட்சியின் சார்பில் துணிந்து களமிறங்கி இருக்கும் சஜித் பிரேமதாஸவின் நம்பிக்கை பலமானது என்று குறிப்பிட்டாக வேண்டும்.
சிங்கள சமூகத்தின் மத்தியில் காணப்படும் சாதி வேற்றுமைகளையும் தனது கட்சிக்குள் இருக்கும் மேட்டுக்குடிகளின் ஆதிக்கத்தையும் நன்கறிந்த நிலையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிப் பதவிக்கு போட்டி இடுகின்றார் என்றால் அதற்கென்று ஒரு மனோ வலிமை வேண்டும். இந்தப் பின்புலத்திலிருந்து சஜித் பிரேமதாஸ தேர்தல் களத்தில் குதித்தாலும் அவர் வெற்றி அடைவதற்கான வாய்ப்புக்கள் அறவே இல்லை என்ற முடிவுக்கு வருவது நன்றன்று பின்வரும் நிலைகள் அவருக்கு சாதகமாக கைகூடுமானால் வெற்றியை தொட்டுக்கொள்வதையும் நாம் ஏற்றுக் கொள்வதில் சறுக்கல் எதுவும் இல்லை. அந்த வகையில் பின்வரும் கோணங்கள் முக்கியமாகும்
1. சஜித் பிரேமதாஸ பொதுவாக நமது நாட்டில் அமைந்துள்ள கிராமங்களில் வாழும் வசதி குறைந்தவர்களை வளப்படுத்தும் வகையில் தமது அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்து அவர்களின் ஆதரவை தமது பெரும் பலமென நம்புகின்றார். இதற்கு அவரது தந்தையும் முன்னாள் நமது நாட்டின் ஜனாதிபதியுமான அமரர் ஆர்.பிரேம தாஸவின் ஏழை மக்களின் தோழனாக வலம் வந்து இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய இரண்டாவது ஜனாதிபதியாகவும் நாட்டுப்பற்று உடையவர் என்ற அடையாளத்தையும் பெற்றிருந்தவர் இந்தப் பின்புலங்கள் இவருக்கான மக்கள் நேசத்தை அதிகரிக்கக் கூடும்

2. சர்வதேச உறவுகளும் அறிமுகங்களும் செல்வாக்கும் என்பன ஒரு மனிதன் வகிக்கும், பதவி வழிகளினால் கைகூடக் கூடியது. அந்த வகையில் சஜித் அதிகாரத்திற்கு வந்ததும் தாமகவே அவை எல்லாம் அவரிடம் சேர்ந்து கொள்வதற்கும் வழியாக முடியும்.

3. மகிந்த யுகம் கொடி கட்டிப் பறந்த காலகட்டத்திலும் சஜித் பிரேமதாஸ தனது மாவட்டத்தில் போட்டியிட்ட தேர்தலில் தோற்றுப் போகாதும் கட்சியை தாங்கியும் வந்த போராட்ட குணாம்சம் இவரை எதிலும் முன்னகர்த்திச் செல்ல உதவக்கூடிய பண்பும் நிரம்பப் பெற்றவராக இருக்கிறார்.
4. கடந்த தேர்தல் முடிவுகள் சில வேலை தலைகீழாக மாறிய சரித்திரமும் நமது நாட்டில் இல்லாமல் இல்லை இதற்கு பின்வரும் தேர்தல்களின் முடிவுகள் ஆதாரப்படுத்துகின்றன. 1970 இல் மொத்த நாடாளுமன்ற 157 ஆசனங்களில் ஸ்ரீ.ல.சு.கட்சி 91ஆசனங்களை மொத்தமாக கைப்பற்றி இருந்தது. இதனை அடுத்து வந்த 1977 இல் நடைபெற்ற தேர்தலில் 168 மொத்த ஆசனங்களில் 140 ஆசனங்களை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியது. கடந்த 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த 6,015.934 வாக்குகளைப் பெற்று 1,842,749 அதிகவாக்குகளால் சரத் பொன்சேகாவை தோற்கடித்தார் அதே நேரம் 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 6,217,162 வாக்குகளைப் பெற்று 449,072 வாக்குகளால் மகிந்தவை தோற்கடித்தார் மைத்திரி .
இங்கு உதாரணமாகக் குறிப்பிட்ட தேர்தல்களில் வெற்றி மாற்றம் காண்பதற்கு பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை 70-77 வரையான ஸ்ரீல.சு.கட்சியின் ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட மூடிய பொருளாதாரத்தினால் ஏற்பட்ட மக்களுக்கான கசப்புணர்வும் திறந்த பொருளாதாரத்தின் மீதான ஈர்ப்பும் ஐக்கிய தேசிய கட்சி மீது மக்களுக்கு விருப்பு ஏற்பட்ட வைத்தது. இதனால் ஆட்சி மாறியது. இதே போன்றுதான் 2015 இல் அதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த மஹிந்தவின் போக்குகளில் காணப்பட்ட குடும்ப ஆதிக்கம், யுத்த வெற்றியின் இறுமாப்பு, சிறுபான்மைச் சமூகங்களை புறக்கணித்த செயற்பாடு மற்றும் சர்வதிகாரப் போக்கு என்பன மஹிந்த ஆட்சியை கவிழ்த்தது.

5. சஜித் பிரேமதாஸவிற்கு நிகரான போட்டியளராக இருக்கும் கோத்தாபய ஒரு இராணுவ நிர்வாகி போன்று செயற்படுபவர், மஹிந்தவின் ஆட்சியில் வெள்ளை வேன் கலாசாரம், கிறிஸ் மனிதனின் ஊக்கி, குடும்ப ஆட்சியில் முக்கியமானவர், ஞானசாரதேரர் போன்றோரின் ஆட்டத்திற்கு இசைந்து போனவர் என்றெல்லாம் பேசப்பட்டவர் இவர் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக வருவதை விரும்பாத உள்ளங்களின் பெருக்கங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு இல்லாமல் இல்லை

6. சாதிப்பாகுபாடு சிங்கள மக்களிடையே இருந்த சந்தர்ப்பத்திலும் மேட்டுக்குடிகளின் ஆதிக்கம் ஐக்கிய தேசிய கட்சிக்குள் மேற் கிளம்பி இருந்த ஒரு தருணத்தில்தான் சஜித் பிரேமதாஸவின் தந்தையான ஆர்.பிரேமதாஸ அரசியலுக்கு வந்ததும் அதன் உச்சபட்சமாக நிறைவேற்று ஜனாதிபதி கதிரை வரை அமர்ந்துள்ளார். இதே போன்று சஜித்தும் வெற்றி கொள்ளுவதற்கு இடமிருக்கிறது.

7. தற்போதைய அரசாங்கமான ஐ.தே.முன்னணி மீது விமர்சனங்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதினால் அதன் ஒரு அங்கமான அமைச்சர் சஜித் பிரேமதாஸ மீதும் அந்த அதிருப்தி பிரதிபலிக்கும் என்று அறுதியிட்டு உறுதியாக வரையறை செய்து கொள்வதும் சில வேளை அபத்தமாகிவிடலாம். ஏனெனில் மஹிந்தவின் ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்ட கோபம் அவ்வாட்சியின் ஒருவராக இருந்த மைத்திரியை பாதிக்காது நேசிக்கப்பட்டவராக ஆக்கியது போன்று இன்றைய அரசாங்கத்தின் மீதான அதிருப்தி சஜித்தை நெருங்காதும் விடலாம்.
8. மஹிந்தவின் அரசாங்கம் எரிவாயு, எரிபொருள், மாவென்று விலையேற்றங்களை நாளுக்கு நாள் ஏற்றிச் சென்றது. அவரின் ஆட்சியில் விலை குறைக்க முடியாத இவைகளுக்கு ரணிலின் ஆட்சி விடிவை கொடுத்து இருப்பது சஜித்திற்கு பலமாக இருப்பதுடன், அவரது வீட்டுத் திட்டங்களும் கை கொடுத்து உயரச் செய்து விடும் என்ற நம்பிக்கையும் இவருக்கு ஆறுதலாக இருக்கிறது.

இப்படியான சாதகங்களான பக்கங்களும் சஜித் பிரேமதாஸவை அண்மித்து இருப்பதினால் இலகுவாக களத்தில் வெற்றி வாகை சூடிக் கொள்வார் என்று உறுதியாக உரைக்க முடியாது. இவரது வெற்றி அவ்வளவு சுலபமானதில்லை என்று குறிப்பிடுவதை முன்னகர்த்தி வைக்கின்றது.உண்மையில் மஹிந்த குடும்பம் ரணில் ஆதிக்கம் என்பனவற்றுக்கு அப்பால் புதியவர் சஜித் பிரேமதாச. இவர் அப்பா வழியில் நாட்டினை கொண்டு செல்வார் என்கின்ற ஒரு நம்பிக்கை அலை மேலேழங்கத் தொடங்கினால் இவர் செயலாற்று அதிகாரத்திற்கு வருவதை எவரும் தடுத்து விட முடியாது என்கின்ற நியாயத்தையும் நாம் மறுக்க இயலாது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தல் களத்தில் மற்றொரு முன்னணி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்‌ஷவை பொறுத்தவரை வெற்றி நிச்சயிக்கப்பட்ட போட்டியாளர் போன்று கட்டமைக்கப்பட்டிருக்கின்றார். இதற்கு அவர் நிறைவேற்று ஐனாதிபதி வேட்பாளர் என்ற கட்டத்தை சஜித்தைப் போன்று போராடி அடைந்து கொள்ளவில்லை.ஆயினும் தான் தேர்தலில் குதிப்பேன் என்ற கோஷத்துடன் அரசியல் காய்களை நகர்த்திக் கொண்டாலும் அவர் மஹிந்த குடும்பத்தினர் என்ற பலம் அவருடன் ஒட்டி இருந்தது இதனாலும் அவர் மிக எளிதாக வேட்பாளராகிக் கொண்டார். இதனை இன்னும் உறுதி செய்வதாக பின்வரும் திகழ்வு கட்டியம் கூறுகின்றது.
செயலாற்று அதிகாரமுடைய ஐனாதிபதி தேர்தலுக்கான நியமன பத்திரங்களை சமர்ப்பிக்கும் காலத்திற்கு அண்மித்த 2019 ஒக்டோபர் 2, 3, 4 ஆந் திகதிகளில் கோத்தாபயவின் இலங்கை பிரஜை தொடர்பிலான வழக்கு நடைபெற்றது.இதில் இவருக்கு சாதகமற்ற தீர்ப்பு வரலாம் என்ற பரபரப்பு காணப்பட்ட நிலையில் மஹிந்தவின் இன்னொரு சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சாமல் ராஜபக்‌ஷ தேர்தலில் நிற்பதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்த செய்தி வெளியாகியது.

அப்போதும் எந்த விதமான தயக்கமும் இன்றி பிரதிவாதங்களுக்கு அப்பால் இவர் பெயரிடப்படுகின்றார் என்றால் இயற்கனவே அவர்களிடம் மகிந்த குடும்பத்தில் ஒருவர் போட்டியிடுவது என்ற தீர்மானம் இருந்தது என்பதையே காட்டுகின்றது. அது மட்டுமன்றி மகிந்த குடும்பத்தினர் போட்டியளராக நியமிக்கப்படக் கூடாது என்கின்ற சலசலப்பு கட்சி மட்டத்தில் இருந்த நிலையில் கூட சமால் ராஜபக்‌ஷவின் பெயரிடல் இந்தச் செய்தியைத் தான் நமக்கு உரக்கச் சொல்கிறது.

மஹிந்தவின் பலம் தான் கோத்தாபயவின் வலிமையாகும். அவருக்கென்று இருக்கும் அடையாளங்களை விடவும் மகிந்த என்கின்ற ஆளுமையும் அவரது பொது ஜன பெரமுனவின் வாக்குப் பலம்.மற்றும் அக்கட்சியினரிடம் காணப்படும் ஒருமித்த நிலைப்பாடும் ஸ்ரீ.ல.சு.கட்சியும் அதனோடு நெருங்கி இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பாலானவர்கள் ஒருமித்தும் இருப்பது கோத்தாபயவின் பலமாக இன்று மாறி இருக்கிறது

இதற்கு கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்தவும் அவரது கூட்டு அணியிடமும் குவிந்து காணப்படும் வாக்கு வங்கி மிகவும் வலிமையானது. இது 6,504,07I ஆகும்.அது மட்டுமன்றி இந்த வாக்குகளின் பின்னணியில் . பெரும்பான்மைச் சமூகமான சிங்களவர்களுடையதாகும். ஜே.வி.பி பெற்ற வாக்குகளை தவிர்த்துவிட்டு ஐ.தே.முன்னணி மற்றும் இதர கட்சிகள் பெற்ற வாக்குகளை வைத்து பார்த்தால் 5,157,813 ஆகும்.இதனை விட மஹிந்த தரப்பினரிடம் அதிகரித்து காணப்படுகின்றது.

கடந்த 2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5,006,837 வாக்குகளையும், 3369 உறுப்பினர்களையும், 231 சபைகளையும் கைப்பற்றியிருந்தது. உள்ளூராட்சி மன்ற தேர்தலைப் பொறுத்தவரை வேட்பாளர்கள் அதிகமாக இருந்து வாக்கை சேகரித்துக் கொள்கின்ற ஒரு நிலைப்பாடும் வேட்பாளர்களின் குடும்பப் பரம்பலும் இதில் ஆதிக்கம் செலுத்தக்கூடியது. இதனால் இத்தேர்தலில் பெறப்படும் முடிவினை வைத்து அதனை அடுத்து வரும் தேர்தல்களை கணிப்பீடு செய்யக்கூடாது என்பது ஒரு நியதியாகும்.

அதனை பொருட்படுத்தாது அப்புள்ளி விபரங்களை இங்கு எடுத்துக்கொண்டதற்கு முக்கிய காரணம் அரசாங்கமாக இருந்த ஒரு கட்சியும் எதிரணியாக இருந்த ஒரு கட்சிக்கும் இடையில் கடும் வித்தியாசத்தில் வாக்குகள் கிடைத்திருப்பதாலாகும். ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை தீவு முழுவதற்குமான ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்களின் ஆதிக்கம் – தலையீடு வாக்குகளை சேகரிப்பதற்கு உதவக்கூடியதாகும். இது கோத்தபாயாவுக்கும் சஜிதுக்கும் பொருந்தக்கூடியது.

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ கோத்தாவினை தோற்கடிக்கும் எண்ணத்தை எந்தச் சந்தர்ப்பத்திலும் எடுக்க மாட்டார். ஏனெனில் அவர்கள் அணியில் கோத்தா பெரும்பாலானவர்களினால் விரும்பப்படுவது, இழந்த ஆட்சி அதிகாரத்தை குடும்பப் பின்னணியில் நிறுத்தி நிலைப்படுத்துவதுதான் மஹிந்தவுக்கு தேவையாக இருக்கிறது. இந்த ஒன்றுபடுதல் கோத்தாவை அரியாசனம் ஏற்றுவதில்தான் கவனம் பெறும். ஏனெனில் என்னதான் இருந்தாலும் குடும்ப உறவும் இரத்த பந்தமும் இதில் கலந்து இருக்கிறது. இதனாலும் ரணில் சஜித்தை தோற்கடிக்க வியூகம் வகுப்பார் என்ற விமர்சனத்தை ஒத்ததாக கோத்தா காணப்படாமையும் இவரது வலிமையின் பக்கமாக குந்திக் கொள்கின்றது.

மகிந்த ஆட்சி வேண்டாம் என்று மாற்று அரசாங்கத்தை உருவாக்க முனைந்த மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை துரிதமாக இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது மட்டுமன்றி மீண்டும் மஹிந்த தரப்பினரை கீழே வீழ்த்தி விடாது தாங்கிப் பிடித்து வருவதும் கோத்தாவிற்கான ஆதரவுத் தளத்தை உறுதிப்படுத்துவதாகக் கொள்லைாம்.

சிறுபான்மைச் சமூகங்களான தமிழர், முஸ்லிம்களின் வாக்குகளில் கணிசமான ஆதரவுத் தளத்தை கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் சஜித்தின் பின்னால் சரண கதியாக ஒன்றிணைந்து காணப்படுவதினால் அப்பக்கம் செல்ல முடியாத சிறுபான்மையினர் தவிர்க்க முடியாது கோத்தாவை நோக்கி அண்டிக் கொள்வர். இதற்கப்பால் சிங்கள மக்களின் பேரினவாத ஆதிக்க சக்திகள் சஜித்தின் பக்கத்தை நேசிப்பதை விட்டுவிட்டு கோத்தாவின் பக்கம் அதிகரித்த சார்பு நிலையையும் எடுக்கலாம். இதுவும் கோத்தாவின் பலப்பக்கத்தை விசாலப்படுத்துவதாகவே அமைய முடியும்

பாதுகாப்பு செயலாளர் என்ற கோத்தாவின் முன்னைய பதவியும் அவருக்கென்று ஓர் அறிமுகத்தையும் பிரபல்யத்தையும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குறிப்பாக அயல் நாடுகளிலும் பிரதிமை கொண்டிருப்பதும் கோத்தாவின் இன்னொரு தடயமாக பதிவு பெறுகிறது. யுத்த வெற்றியின் மக்கள் விருப்புக்களும் கோத்தாவை அப்பிக் கொள்வதிலிருந்து அவரை பிரித்தெடுப்பது அவ்வளவு இலகுவானதல்ல.

மஹிந்தாவின் ஆட்சி கிராமப்புறங்களில் அபிவிருத்தி என்ற பாங்கிலும் இடம் பிடித்துக் கொண்டதையும் நாம் பார்க்கலாம் இது மட்டுமன்றி நகரப்புற மக்களையும் இது கவர்ந்து இழுக்கக் கூடியது.மேட்டுக்குடிகளினாலும் இவர் அகர்ஷிக்கப்படும் பாங்கையும் இவர் கொண்டிருப்பது அவரது பக்கத்தை இன்னும் வலுப்படுத்தி வைக்கக்கூடியது. இப்படி எந்தக் கோணத்தை முன்னிறுத்திப் பார்த்தாலும் கோத்தாவை இலகுவில் தோற்கடித்துவிடலாம் என்ற தோற்றப்பாட்டை புறக்கணித்து விடுவது மறைவன்று

சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக வெற்றி பெற முடியாது என்ற கருத்தாடல் பலம் பொருந்தியதாகக் காணப்பட்டாலும் அது வெற்றிக்கு தேவைப்படும் மேலதிக வாக்குகளாகவே அமைய முடியும் தவிர வெற்றிக்கான அடிப்படையாக இராது என்ற யதார்த்தமும் இவ்விடத்தில் நோக்கப்பட வேண்டும்.74 வீதமான சிங்கள மக்களின் பெரும்பாலானவசீகரிப்பை எவர் அடைந்து கொள்ள முடியுமோ அவரது வெற்றியில் தான் சிறுபான்மை சமூகங்களின் வாக்குப் பலம் வெற்றியை உறுதிப்படுத்தும் .மாறாக சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகள் அதிகரித்து சாய்வு பெறுவதினால் மட்டும் வெற்றி வேட்பாளராக மாறிவிட முடியாது

இந்தத் தேர்தலில் ஜே.வி.பி தனித்து களமிறங்குவது கோத்தாவை பார்க்கிலும் சஜித்திற்கு பாதகமானது. சிறுபான்மைச் சமூகங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டும், பல இன்னல்களை அனுபவித்தும், அவர்களின் இருப்புக்கே அச்சுறுத்தல்களையும் மஹிந்த, ரணில் ஆட்சியில் அனுபவித்தவர்களாவர். இதனால் விரக்தியும் நம்பிக்கையீனமும் அவர்களுக்குத்தான் ஏற்பட முடியும் இதன் எதிரொலியாக சிறுபான்மையினர் விழித்துக் கொண்டால் இவ்விரு வேட்பாளர்களையும் புறக்கணித்து விட்டு மூன்றாம் சக்தியாக தலையெடுக்க காத்திருக்கும் தேசிய மக்கள் சக்திவேட்பாளர் அநூராவை நோக்கி திரும்பலாம்.

அல்லது வாக்களிப்பில் நம்பிக்கையின்றி வாக்குச்சாவடிகளுக்குச் செல்லாது இருக்கலாம். இதில் எது நடந்தாலும் அது சஜித்தின் வெற்றியில் தான் இடையூறை ஏற்படுத்துமேயன்றி கோத்தாவில் அல்ல. ஏனெனில் வெளிப்படையாக பேரினவாத ஆதிக்க சக்திகள், மற்றும் சிங்கள மக்களிடையே பொதுவாக சஜித், கோத்தா என்று நிறுத்துப் பார்க்கும் போது ஆளுமையுடைய தலைவராக கோத்தா அவர்களுக்கு காட்சியளிப்பது ஆச்சரியமானதல்ல.

வாழ்க்கை செலவின் நெருக்கடிகளை பெரும்பாலான சிங்கள மக்கள் அனுபவிப்பது குறைவு .இதற்கு அவர்களது உணவு பழக்கம் தொட்டு எளிய வாழ்வு முறைமை என்பன தாக்கம் செலுத்தக் கூடியது. இதனால் எரிவாயு, எரிபொருள் என்ற விலையேற்றம் மற்றும் பொருட்களின் விலைவாசி என்பன பொதுவாக பெரும்பாலான சிங்கள மக்களை ஆட்கொள்வதில்லை இதனாலும் மஹிந்த - கோத்தா மாவுசு அவர்களின் மக்களிடம் கீழ் நோக்கிப் பயணிக்கும் ஆபத்து குறைந்தது .

நாம் எதிர்கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரமுடைய ஐனாதிபதித் தேர்தல் களத்தில் பலத்த போட்டியாளராக இருப்பார்கள் என எதிர் பார்க்கப்படும் சஜித், கோத்தா ஆகியோர்களிடையே வெற்றி பெறுபவர் இவர்தான் என திட்டமாக குறிப்பிடுவதில் சங்கடங்கள் இருக்கின்றன. இரண்டு தரப்பிலும் பலம், பலவீனம் என்கின்ற uக்கங்களும் இல்லாமலில்லை. இந்நிலையில். சஜித் வெல்லுவது அவ்வளவு சுலபமான காரியமும் அல்ல. அதேநேரம் கோத்தாவின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றென்றும் உறுதிபடக் கூறி விட முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -