கோத்தாபய வெற்றி பெற்றால், இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முஸ்லிம் திருமணச் சட்ட திருத்தத்தை மூன்று மாதத்துக்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இன்று (23) புதன்கிழமை மாலை இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,
கடந்த அரசாங்கத்தில் அளுத்கம, பேருவளை போன்ற இடங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு முதலில் முன் வந்தவன் நானாகும். காரணம், நான் எப்போதுமே சமூகத்தை நேசிப்பவன்.
ஆனாலும், அந்த அரசாங்கத்தை மாற்றி ஐ.தே.க. தலைமையிலான இந்த அரசை நாம் கொண்டு வந்த போது, இந்த அரசு கடந்த அரசை விட மிக மோசமான அரசாக இருந்ததைக் கண்டோம். இந்த அரசில் அம்பாறை பள்ளி உடைப்பு, திகன கண்டி எனப் பல தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்தோம். இத்தனைக்கும் முழு முஸ்லிம் எம்.பீ.க்களும் அமைச்சர்களும் இந்த அரசில் இருந்தும், முஸ்லிம்களைப் பாதுகாக்க முடியவில்லை.
மாற்றத்தை எதிர் பார்த்த முஸ்லிம்கள் மூர்க்கத்தையே கண்டனர்.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின் முஸ்லிம் சமூகம் பாரிய பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது. பெண்கள் உடைகளுக்கு கட்டுப்பாடு, அரச நிறுவனங்களுக்கு முஸ்லிம் பெண்கள் தமது கலாசார ஆடையை அணிந்து செல்ல முடியாமை, முஸ்லிம் வியாபார நிலையங்களில் பொருள் வாங்க முடியாமல் தடுத்தமை என இன்னோரன்ன பல இன்னல்கள் ஏற்பட்டன. இத்தனைக்கும் அரசாங்கத்துக்கு முழுப் பலம் இருந்தும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டனர் என்றார்.

மேற்படி பத்திரிகையாளர் சந்திப்பில், அல் ஜஸீரா லங்கா ஊடக ஆசிரியரும் உலமாக் கட்சித் தலைவருமான மெளலவி முபாறக் அப்துல் மஜீதும் கலந்து கொண்டார்.