மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் சகலவிதமான சுகபோகங்களையும் , சலுகைகளையும் அனுபவித்த முஸ்லிம் தலைமைகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்மாறாக வாக்களிக்குமாறு மக்களை பலாத்காரப்படுத்துவது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது போன்றாகும்.
இவ்வாறு மாளிகைக்காடு பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய ராஜபக்ஷவை ஆதரித்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது காரைதீவு முஸ்லிம் பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளரும் , காரைதீவு பிரதேச சபையின் உதவி தவிசாளருமான ஏ.எம்.ஜாஹிர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,
காலத்திற்கு காலம் ஆட்சி மாறுவது எமது நாட்டில் புதிய விடயமல்ல. அதற்காக நன்றி மறந்து தம்மை ஆளுக்கு ஆள் மாற்றிக் கொள்வது தான் புதிய விடயமாக மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கடைசி தறுவாயில் மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்ததன் மூலம் தமது இருப்பை ஸ்திரப்படுத்திக் கொண்ட முஸ்லிம் தலைமை இன்று புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவினை தெரிவிக்குமாறு மேடைக்கு மேடை கூவித்திரிவது தமது அரசியல் வங்குரோத்தை தெரியப்படுத்துகின்றது.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் இவர்களின் மாயாஜாலக் கதைகளை கேட்டு வாக்கு போடும் காலம் மலையேறிவிட்டது. அம்பாறை மாவட்டத்தில் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட எதிர்பாராத சில நிகழ்வுகளின் போது அதனை தட்டிக் கேட்டு அதற்கு பரிகாரம் காண முடியாத இந்த தலைமைகள் இன்று மீண்டும் மக்களின் காலடிக்கு வந்து வாக்கு பிச்சை கேட்பது வெட்கத்தனமான விடயமாகும்.
அபிவிருத்தி என்ற போர்வையில் கட்சியின் போராளிகள் என்று நாமம் சூட்டப்பட்ட ஒரு சிலருக்கு வயிற்றை நிரப்புவதற்கு வசதிகளையும் வாய்ப்புகளையும் வழங்கி விட்டு வாக்குப் போட்ட மக்களை நடுத்தெரிவில் விடுவது நியாயமாதா ?, . விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் ஏழை எழிய மக்கள் தமது தொழிலினை தொடர்ச்சியாக கொண்டு செல்வதில் எதிர்நோக்கும் எத்தனையோ பிரச்சனைகள் அப்படியே இருக்க அரசியல் ரீதியில் தமது இருப்பை ஸ்திரப்படுத்த மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு இவர்கள் இன்று மக்களிடம் மன்றாடி வருகின்றனர்
எனவே இப்படியான முஸ்லிம் தலைமைகளுக்கு சரியான பதிலடி கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று இப்போது மக்களின் காலடிக்கு வந்துள்ளது .எனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய ராஜபகஷவை ஆதரிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.