எனவே, அசுரர்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி ‘வாக்குரிமை’ என்ற ஜனநாயக ஆயுதத்தின் ஊடாக முடிவு கட்டுவோம் என இந்நாளில் உறுதிபூணுவோம்.”
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மெலும் கூறியதாவது,
“அகந்தை, ஆணவம், தீய எண்ணங்களை நீக்கி, தர்மம், நேர்மை, ஒழுக்கம், பகிர்தல் எனும் தீபத்தை ஏற்றும் விதமாகவே தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. மக்கள் தர்மத்தின் வழியில் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே கொண்டாட்டத்தின் ஊடாக மேற்படி கோட்பாடுகள் சமூகத்தின் மத்தியில் விதைக்கப்படுகின்றன.
ஆகவே, தர்மம், நேர்மை, ஒழுக்கம் என்பவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை நிலைநாட்டுவதற்கும், பாதுகாப்பதற்கும் நாம் முன்வரவேண்டும். இதற்கு தடையாகவுள்ள நரகாசூரர்களை நாம் களையெடுக்க வேண்டும்.
சர்வாதிகாரம் தலைதூக்கி அதர்மத்தின் வழியில் பயணித்த நாட்டை 2015 இல் நல்லாட்சியே மீட்டெடுத்தது. அத்துடன், ஜனநாயகம் என்ற தீபம் அணைய இருந்த கட்டத்தில் எமது அரசாங்கமே அதனை மீண்டும் பிரகாசமாக ஒளிரச்செய்தது. இதனால், நாட்டை சூழ்ந்த தீய இருள் அகன்று ஒளி பிறந்தது. இதன்மூலம் மக்கள் வாழ்விலும் விடிவு ஏற்பட்டது.
எனினும், சில அரசியல் நரகாசூரர்கள் அதர்மத்தை நிலைநாட்டுவதற்காக மீண்டும் களத்தில் இறங்கியுள்ளனர். மக்கள் மனங்களில் இனவாதத்தை பரப்பி - இருண்ட யுகத்துக்கு அழைத்துசெல்ல முயற்சிக்கின்றனர்.
இப்படியானவர்களின் சதி வலைக்குள், சூழ்ச்சி பொறிக்குள் மக்கள் சிக்கிவிடக்கூடாது. ஆகவே, தீபாவளி திருநாளை கொண்டாடும் இந்நாளில், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நரகாசூரர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி தோற்கடிப்போம் என உறுதிமொழி எடுப்போம்.
அனைத்து இந்து மக்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், தர்மம் காக்க மீண்டும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.” என்றார்.