முஸ்லிம்களின் இருப்பு தொடர்பான தேசிய முக்கியத்துவமிக்க தேவைக்காக தங்களது பதவிகளை இராஜனாமா செய்திருந்த அமைச்சர்கள் தங்களது பதவிகளை மீண்டும் பதவியேற்று இன்னும் சிலர் மீண்டும் பதவியேற்கவுள்ள நிலையில் கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹரீஸ், மீண்டும் பதவியேற்று இந்தமக்களுக்காக தான் ஆற்றவேண்டிய கடமைகளை ஆற்றாது, தான் முன்னின்று கல்முனை பிரச்சினையை தீர்க்கக்கூடிய ஏலுமை இருக்கின்றபோதிலும் கல்முனை விடயத்தை காரணமாகக் கூறிக்கொண்டு இருப்பது வியப்பாக இருப்பதாகவும் அதற்கு சிலர் ஒத்து ஊதும் நிலைமைகள் இன்னும் சிக்கலை ஏற்பாடுத்தும் என்றும் ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே அவருக்கு குறித்த பிரச்சினையுடன் தொடர்புடைய அமைச்சு வழங்கப்பட்டது. அவர் இந்த அமைச்சின் ஊடாக எப்போதே இவைகளை தீர்த்திருக்க முடியும். சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை ஒரே இரவில் தீர்க்கக்கூடியது. இங்கு யாருடனும் பேசவேண்டிய தேவையோ அல்லது பிரச்சினைகளோ இல்லை. எங்கோ உள்ள பிச்சினைகளுக்காக சாய்ந்தமருது மக்களையும் அவர்களது கோரிக்கைகளையும் புறம்தள்ளிவிட முடியாது. சாய்ந்தமருது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்காக அதிக வாக்குகளை வழங்கும் ஊர். சாய்ந்தமருது வேறுபக்கம் சாய்ந்துவிட்டால் நாங்கள் எதிர்பார்க்கும் எங்களது தலைநகர் என்ற அடையாளத்தை இழக்க நாங்களே காரணமாகிவிடுவோம். எனவே முதலாவது சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை நிவர்த்தித்துவிட்டு கல்முனை பிரச்சினைக்கும் விரைந்து தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தனது ஊடக அறிக்கையில் கேட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் உடனடியாக தனது அமைச்சை பாரமெடுத்து சாய்ந்தமருது பிரச்சினையை உடன் முடித்துவைக்க வேண்டிய அதேவேளை கல்முனை பிரச்சினையையும் தீர்ப்பதுடன் அபிவிருத்தி விடயத்தில் பாரிய கல்முனை அபிவிருத்தித் திட்டம் அதில் கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்தி உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களையும் நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றும் கேட்டுள்ளார்
