ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப்பக்கம்? பாகம்-5


வை எல் எஸ் ஹமீட்-

கரு வேட்பாளாராக தெரிவுசெய்யப்பட்டால்
———————————————————

ரு பொதுவாக தனது வாக்கைக் காப்பாற்றக்கூடிய நாணயமானவர்; என்கின்ற ஒரு பொதுக்கருத்து நிலவுகின்றது. எனவே, அவ்வாறு ஜனாதிபதியாக அவர் தெரிவுசெய்யப்பட்டால் ரணிலைப் பிரதமராக நியமிப்பார்; என ரணில் நம்புவதாக கூறப்படுகிறது. அதில் உண்மையும் இல்லாமலில்லை.
மட்டுமல்ல, கரு வயதானவர். தான் கட்சியின் தலைவராகி நீண்டகாலம் பதவியில் இருக்க முற்படுவார்; என எதிர்பார்க்க நியாயங்கள் குறைவு.
ஆனாலும் அவரும் தேசியவாத போக்குக்கொண்டவர். எனவே, ரணிலுக்கும் அவருக்கும் முரண்பாடு தோன்றாது; எனக் கூறமுடியாது. இருந்தபோதிலும் ஒப்பீட்டளவில் சஜித்தைவிட, கரு ரணிலுடன் கூடுதலாக ஒத்துழைப்பார்; என எதிர்பார்க்கலாம்.
மறுபுறம், சஜித் வயதில் குறைந்தவர். நீண்டகால அரசியல் கனவு உள்ளவர். அவர் பல தடவை கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்ற முயற்சித்து தோல்விகண்டவர். இப்பொழுதும் வேட்பாளர் நியமனம் அறிவிக்கப்படமுன்பே, தான் நிச்சயமாக போட்டியிடப்போவதாக கூறுவதுமட்டுமல்லாமல் ஒருதலைப்பட்சமாக தேர்தல் பிரசாரத்தையே ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில் இவ்வாறான அழுத்தங்களின் மூலம் அவர் வேட்பாளர் நியமனம்பெற்று தேர்தலில் வெற்றிபெற்றால் அதன்பின் ரணிலை பிரதமராக நியமிப்பார்; என்பது கடந்த பதிவில் சுட்டிக்காட்டியதுபோல் எதிர்பார்ப்பு குறைந்ததாகும். மட்டுமல்லாமல் கட்சியின் தலைமைத்துவத்தைக்கூட பறித்தெடுக்கக்கூடிய வாய்ப்பு நிறைய உண்டு.

அவ்வாறான ஒரு சூழ்நிலை வந்தால் அவர் யாரைப் பிரதமராக நியமிப்பார்? அவரும் ஒரு தேசியவாதப்போக்குடையவர் என்பதனால் இறுக்கமான ஒரு போக்குக்கொண்டவரை பிரதமராக நியமிப்பாரா? அல்லது மங்களவைப்போன்ற ஒருவரை நியமிப்பாரா? இந்த இரண்டுவகையான சூழ்நிலையும் நாட்டுக்கு பொதுவாகவும் முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் எவ்வாறான எதிர்காலத்தைக் கொடுக்கும்; என்பதை பின்னர் ஆராய்வோம்.

கோட்டா-மஹிந்த
————————

இப்பொழுது மஹிந்த அணியில் கோட்டா வேட்பாளரராக அறிவிக்கப்பட்டிருக்கின்றார். அவரது அமெரிக்கப் பிரஜாஉரிமை நீக்கம் தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இன்றைய சூழ்நிலையில், அச்சந்தேகம் பொய்யானால் ஒரு ஊடக மாநாட்டின் மூலம் உரிய ஆதாரங்களைக் காட்டி அச்சந்தேகத்தை மக்களிடம் இருந்து போக்குவது வாக்குப்பலத்தை கட்டியெழுப்ப உதவும். ஆனாலும் அவ்வாறு செய்யாமல் வேட்பாளர் நியமன நேரத்தில் காட்டுவோம்; என்பது மிதப்பு வாக்குகளைக் கவரும் விடயத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமானதல்ல. இருந்தபோதிலும் மக்களின் சந்தேகத்தை உடனடியாக போக்க முடியாமல் இருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
மறுபுறம் இரண்டாம் காலாண்டு பட்டியலில் அவரது பெயரில்லை; என்பது ஏதோவொரு பிரச்சினை இருக்கிறது; என்பதையே சுட்டிக்காட்டுகிறது. ஆனாலும் வேட்பாளர் நியமனத்திற்குமுன் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம்; என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதும் தெரிகிறது. அவ்வாறு தீராவிட்டால் மாற்று சாத்தியப்பாடுகள் என்ன?

சிராந்தி, சமல், பசில்
—————————-

அவ்வாறான சூழ்நிலையில் கோட்டாவுக்கு பதிலீடாக, சிராந்தி, சமல், பசில் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.
சிராந்திக்கு மக்கள் பாரிய அளவில் வாக்களிப்பார்களா? இச்சந்தேகத்தின் பின்னணியில் அவரை நியமிப்பதற்கான வாய்ப்புக்குறைவு; என்றொரு கருத்தும் நிலவுகிறது.
அவ்வாறு அவரை நியமிக்க வாய்ப்புக்குறைவு; என ஒரேயடியாக நிராகரிக்க முடியாது. ஏனெனில், சிராந்தியை வேட்பாளராக நிறுத்திவிட்டு, ஒரு குறுகிய காலப்பகுதியில் ( உதாரணமாக ஆறு மாதங்களில்) 19வது திருத்தைத் திருத்தி, சிராந்தி ராஜினாமா செய்தபின் தான் மீண்டும் ஜனாதிபதி ஆவதாக மக்களுக்கு உறுதியளிக்கலாம். ( ராஜினாமா செய்தால் பாராளுமன்றம்தான் ஜனாதிபதியை அப்பதவிக்காலத்தின் மிகுதிக்காலத்திற்கு தெரிவுசெய்யும்) அவ்வாக்குறுதியை மக்கள் நம்பமாட்டார்கள்; என நிராகரிக்க முடியாது.

இங்கு கவனிக்க வேண்டியது, மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் படித்த அல்லது மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்கள் அல்ல. மாறாக அவர்கள் பாமரமக்கள் மக்கள்.
பொதுவாக அரசியலில், குறிப்பாக தேர்தல் ஒன்றின்போது பாமரமக்களிடம் “அறிவிற்கு விருந்து” பெருந்தாக்கம் செலுத்துவதில்லை; மாறாக “உணர்விற்கு விருந்தே” தாக்கம் செலுத்துகின்றது.
இன்று ரணிலிக்கும் மஹிந்தவிற்கும் இடையேயுள்ள மக்கள் செல்வாக்கு வித்தியாசத்திற்கு பிரதான காரணமும் இதுதான்.
ரணில் விக்ரமசிங்க இன்று தென்கிழக்காசியாவிலேயே சிறந்த ராஜதந்திர அரசியல்வாதியாக பேசப்படுகின்ற ஒருவர். ( அதற்காக அவரிடம் அரசியல் பலயீனங்கள் இல்லையென்பது பொருளல்ல). ஆனால் அவருடைய மேடைப் பேச்சுக்கள் மக்களைக் கவருவதில்லை. காரணம் அப்பேச்சுகள் முழுக்க முழுக்க அறிவியல் அல்லது அறிவு சார்ந்ததாக இருக்கும்.
மாறாக, மஹிந்தவின் பேச்சுக்களில் “அறிவுக்கு விருந்து” தேடித்தான் பொறுக்க வேண்டும். ஆனால் “உணர்வுக்கு விருந்து” பரவிக்கிடக்கும்.

முஸ்லிம்களும் அரசியலில் “உணர்வுக்கு விருந்து” கிடைக்கும் பக்கம் நிற்கின்றோமே தவிர “அறிவிற்கு விருந்து” கிடைத்தாலும் அதை ஒதுக்குகின்ற சமூகமாகத்தான் இருக்கின்றோம்.
நம்மை மஹிந்தவின் ஆட்சியும் கைவிட்டது உண்மை, ரணிலின் ஆட்சியும் கைவிட்டது உண்மை; அதற்காக ஜே வி பி யின் கூட்டத்தில் சனத்திரளைக் கண்டதும் அதீதமாக உணர்ச்சி வசப்பட்டு முகநூலெல்லாம் ஜே வி பி ஆதரவு கோசம் பொங்கிவழிகிறது.
முதலாவது ஜே வி பி யிற்கு வெற்றிபெறும் வாய்ப்பு அண்ணளவாகவாவது இருக்கின்றதா? ஓட்டுமொத்த முஸ்லிம்களும் வாக்களித்தால்கூட ஜே வி பி யை வெற்றிக்கம்பத்தை நோக்கி கொண்டுசெல்ல முடியுமா? அவ்வாறில்லையாயின் அவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் விளலுக்கிறைத்த நீராகிவிடாதா? கடலில் கரைத்த உப்பாகிவிடாதா? குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சிறிய விகித வாக்கைக்கூட வீணாக்கமுடியுமா? Can we afford to waste even a small percentage of our votes at a Presidential election?
இவற்றைப் பற்றியெல்லாம் நம்மவர்கள் சிந்திப்பதில்லை. ஏனெனில் நாம் வெறும் உணர்ச்சிக்கு மட்டும் அடிமைப்பட்ட சமூகம்.

நாம் மஹிந்த, ரணில் ஆட்சியில் பாதிக்கப்பட்டதற்காக அவர்கள்மீது ஆத்திரம், அதிருப்தி கொண்டிருக்கின்றோம். நியாயமானது. நமது இந்த நிலைக்கு நாம் தெரிவுசெய்து அனுப்பிய பிரதிநிதிகளுக்கு எதுவித பொறுப்புமில்லையா?
நமக்கென்று கட்சிகளெதுவுமில்லாமல் மறைந்த தலைவரின் வருகைக்குமுன் இருந்ததுபோன்று நாம் பச்சைக்கும் நீலத்திற்கும் வாக்களித்தருந்தால், இரு தரப்பும் நம்மை ஏமாற்றி விட்டது; சிவப்பை நாடுவோம்; என சிந்திப்பதில் சில நியாயங்கள் இருக்கும்.
நமது இன்றைய அவலநிலையைத் தடுத்து நிறுத்துவதில் நமது கட்சிகளுக்கு எதுவித பங்குமில்லையென்றால் நமக்கேன் அக்கட்சிகள்? என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்திருக்கின்றோமா? அல்லது அவற்றின் பொறுப்பற்ற, சுயநல அரசியல் போக்கும் ஒரு காரணம்தான் என்றால் அவற்றை சரிசெய்ய என்ன வழி என; சிந்தித்திருக்கின்றோமா?

அன்று மஹிந்தவின் ஆட்சியில் அனுபவித்த கொடுமைகளின் உச்சம்தான்தான் மஹிந்தவை தூக்கிவீசினோம். இன்று ரணிலின் ஆட்சியில் கொடுமைகளை அனுபவிக்கும்போது மீண்டும் மஹிந்த என்கின்றோமே! இங்கு அறிவுக்கு என்ன வேலை கொடுத்தோம்?
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின் அவர்களை ஆராய்ந்து இரு தரப்பும் நமக்குப் பாதிப்பானதுதான்; ஆனால் ஒப்பீட்டளவில் இந்த தரப்பைவிட இந்த தரப்பு பாதிப்பு குறைந்தது; எனவே, இந்தத் தரப்பைத் தெரிவுசெய்வோம்; என்று ஒரு முடிவு எடுத்தால் நம்மை ஓர் அறிவுடமைச் சமுதாயம்; எனலாம். ஆனால் வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்னரே நிலைப்பாடுகளை எடுத்துவிட்டோம். இது சரியா? இது, நாம் நியாயத்தின்பால் நிற்பதற்கு ஆயத்தமானவர்கள்; என்பதற்கான அடையாளமாக இருக்கமுடியுமா?

மாறாக, நமது கட்சிகள் விரல்நீட்டும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையில் சமூகம் இன்னும் இருக்கின்றதா? அல்லது சமூகம் சொந்தமாக முடிவெடுக்குமா?
அவர்கள் விரல் நீட்டுபவர்களுக்கு அவ்வாறு வாக்களிப்பதற்கு முதல் முஸ்லிம்களுக்கு இந்த ஆட்சிகளில் நடந்த பாதிப்புக்களைத் தடுத்த நிறுத்த அவர்கள் செய்த பணியென்ன; என்பதை அவர்கள் கூறுவார்களா? அல்லது மக்கள் கேட்பார்களா?
நீங்கள் இவருக்குத்தான் வாக்களியுங்கள்; என்று நமக்கு கூறுவதற்கு கட்சிகள் தேவையா? அவ்வாறாயின் மேலே, ஆரம்பத்தில் கூறப்பட்ட கூற்று நிரூபிக்கப்படவில்லையா? அதாவது நாமும் அறிவால் வழி நடாத்தப்படாத, வெறும் உணர்வுகளால் வழிநடாத்தப்படுகின்ற ஒரு சமூகம் என்று.

எவ்வாறு பெரும்பான்மை சமூக மக்களின் வெறும் உணர்வு அரசியலை முதலீடாக வைத்து இந்த நாடு தேசிய அரசியல்வாதிகளால் அவர்களது சுயநலன்களுக்காக சீரழிக்கப்படுகின்றதோ அதேபோன்றுதான் முஸ்லிம்களின் வெறும் உணர்வு அரசியலை முதலீடாக வைத்து சுயநல முஸ்லிம் அரசியல் கோலோச்சுகின்றது; அதன்விளவும் நாம் இன்று அனுபவிக்கும் துன்பத்திற்கு ஒரு பிரதான காரணம்; என்பதை எத்தனைபேர் அறிவுரீதியாக சிந்தித்திருக்கின்றோம்.
நாட்டிலிருந்து ஊழலை ஒழிப்பதற்காக ஜே வி பி யுடன் கைகோர்ப்போம் என்கின்றார் நம் சகோதரர்கள் சிலர். ஊழலைப் பற்றிப்பேசும் தகுதி நமக்கு இருக்கின்றதா? என்று நமது மனச்சாட்சியை நாம் கேட்கவேண்டாமா? ஏன், நமது சமூக அரசியலில் ஊழல் இல்லையா? மொத்த நாடும் பாடிக்கட்டிய ஊழல் அரசியல் நமது சமூகத்தில்தானே இருக்கின்றது.
அந்த ஊழல் அரசியலில் பெரும்பான்மை சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற வெறுப்பும் நாம் இன்று அனுபவிக்கும் துயரம் அதிகரிக்க ஒரு காரணம்; என்பதை நமது மனச்சாட்சிகள் மறுக்குமா? ஆனால் இந்த இடத்தில் நாம் அறிவுக்கு வேலைகொடுக்க மாட்டோம். மாறாக, உணர்ச்சிக்கு அடிமையாகி முஸ்லிம் என்ற கோசத்திற்குள் முடங்கி விடுவோம்.

இன்று ஒரு பெரும்பான்மை அரசியல்வாதி ஊழல் செய்தால் சிலவேளை அடையாளத்திற்காவது அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் சிறுபான்மை அரசியல்வாதி எவ்வளவு பெரிய ஊழல் செய்தாலும் அரசு கண்டுகொள்ளாது. இதற்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று அவரிடம் நான்கைந்து பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் இருக்கும். அவற்றை இழந்துவிடுமோ என்கின்ற அச்சம் அரசுக்கு ஒரு புறம். இரண்டு: அவ்வாறு இவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்தால் தான் ஒரு சிறுபான்மை என்பதற்காக, அல்லது முஸ்லிம்களுக்காக போராடியதற்காக ( எங்கே எப்போது எதற்காகப் போராடினார்கள்; என்று மட்டும் கூறமாட்டார்கள்) நான் பழிவாங்கப்படுகிறேன்; என்று இனஉணர்வைத் தட்டியெழூப்பிவிடுவார்கள். ( கூலிப்பட்டாளம் அதற்கென்றே இருக்கின்றது) இது அடுத்த காரணம்.
எனவே, நாம், நமது ஊழல் அரசியலை அகற்றிவிட்டு தேசத்தில் ஊழலை ஒழிக்க ஜே வி பி யுடன் ஒன்றுசேர்வோம்; என்றால் அது நியாயம். ஆனால் நமது அரசியலில் ஊழல் செய்வது “ ஹலால்” அதற்கெதிராக பேசுவது “ ஹறாம் “. தவறி யாராவது பேசினால் அவரை மானபங்கப்படுத்துவது “ ஹலால்” என்கின்ற மனோநிலையில் நாம் இருந்துகொண்டு தேசிய அரசியலில் ஊழலை ஒழிக்க ஜே வி பி யுடன் கைகோர்க்கப் போகிறோமா?

நாமே, இவ்வாறு அறிவைத் தூரமாக்கிவிட்டு உணர்சிக்கு அடிமையாகி அரசியல் தீர்மானங்களை எடுக்கும்போது பெரும்பான்மை சமூக மக்கள் மஹிந்தவின் உணர்ச்சி பேச்சில் கண்டுண்டு சிராந்தியை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?
எனவே, கோட்டாவின் பிரஜாவுரிமைப் பிரச்சினை தீராவிட்டால் சிராந்தி வேட்பாளராக வருவது சாத்தியமே இல்லை; என ஒரேயடியாக நிராகரிக்க முடியாது.
மட்டுமல்ல; அவ்வாறு சிராந்தி ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு, 2/3 பங்கு கிடைக்காமல் 19ஐத் திருத்தமுடியாமல்போய் சிராந்தி தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்தாலும் யதார்த்தத்தில் முழு அதிகாரமும் மஹிந்தவிடம்தான் இருக்கும்.
எனவே, கோட்டா போட்டியிட முடியாமல்போனால் சிராந்தியும் சாத்தியமான ஒரு தெரிவே!

( தொடரும் இன்ஷாஅல்லாஹ்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -