பாறுக் ஷிஹான்-
வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், சூழலியலாளருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இனிமேல் அரசியல் கட்சியாக செயற்படுமென உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு இன்று சனிக்கிழமை(06) பிற்பகல்-03 .30 மணி முதல் யாழ். நகரிலுள்ள வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.
இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான பசுமை இயக்கத்தினர் ஒன்றுகூடியிருந்தனர். இந்த மாநாட்டில் வைத்தே பொன்னுத்துரை ஐங்கரநேசன் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
குறித்த மாநாட்டில் அவர் நீண்ட உரையொன்றை ஆற்றியிருந்தார். அந்த உரையில் அவர் புதிய கட்சி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
பேரம் பேசுவதற்குப் பதிலாக சோரம் போய்விட்ட நிலை தான் இன்றைய எங்களுடைய தமிழ்த்தேசிய அரசியலில் காணப்படுகின்றது. இந்த நிலையில் தான் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சூழலியம் எனும் கோட்பாட்டை உள்வாங்கித் தமிழ்த்தேசிய அரசியலுக்குள் புதிய அரசியல் கட்சியாகப் பரிணமித்திருக்கிறது.
நாங்கள் தேர்தலை எதிர்கொள்வோம். வெற்றியா? தோல்வியா? என்பதல்ல எங்களுடைய பிரச்சினை. சரியானவற்றை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எங்களிடமிருக்கிறது. வெல்ல வேண்டிய அணி என்பதைத் தீர்மானிக்க வேண்டிய சக்தியாக நாங்கள் நிச்சயமாகவிருப்போம். இங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான பசுமை உறவுகளும் இதனைச் சாதித்துக் காட்டுவார்கள் எனவும் அவர் முழக்கமிட்டுள்ளார்.