காத்தான்குடி பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்தின் ஷரிஆ சட்டத்தின் கீழ் 20 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளதாக "வஹாபி தீவிரவாதத்தை எமது தாய் நாட்டிலிருந்து விரட்டுவோம்" என்ற தொனிப்பொருளில் வியாழக்கிழமை(4) கொழும்பு நுகேகொடையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட போதே பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரரின் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக காத்தான்குடி நகரசபை மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்இய்யதுல் உலமா சபை ஆகியன இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் கெளரவ பேராசிரியரின் கருத்து உண்மைக்கு புறம்பானது என்றும் தொடர்ச்சியாக காத்தான்குடி மீது தொடர்சியாக மத குருமார்கள், பேராசிரியர்கள் இனவாத கருத்துக்களை தெரிவித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். நுகேகொடை கூட்டத்தில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித் பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரரின் கருத்தை காத்தான்குடி பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் வன்மையாக கண்டிப்பதுடன் இது தொடர்பில் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இவ் ஊடக சந்திப்பில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ.சி.எம்.சத்தார் ,செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் (நளீமி), ஜம் இய்யதுல் உலமா சபை தலைவர் ஏ.எம்.ஹாறூன் (றஷாதி),செயலாளர் ரீ.எம்.எம்.அன்ஸார்(நளீமி) மற்றும் நகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.