கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தமிழ் -முஸ்லிம் ஐக்கியத்தின் மையப் புள்ளியாக மாறியுள்ளது என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
எனவே கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் நீண்டகால கோரிக்கைக்கு உடன்பட்டு முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் தமிழ், முஸ்லிம் ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது
கல்முனை வடக்கு பிரதேசம், சாய்ந்தமருது பிரதேசம், கல்முனை தெற்கு பிரதேசங்களை உள்ளடக்கியதே கல்முனை மாநகரம்.
இதில் சாய்ந்தமருது, கல்முனை தெற்கு ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாகவும், கல்முனை வடக்கு பிரதேசத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவும் வாழ்கின்றனர்.
இந்நிலையில் சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம் மக்கள், தமது பிரதேச செயலகத்தை, கல்முனை மாநகரசபையிலிருந்து பிரித்து முழுமையான நகரசபையாக்கும் படி போராடுகிறார்கள்.
அதுபோல் கல்முனை வடக்கு தமிழ் சமூக தலைவர்கள் தமது உப பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோருகின்றனர்.
ஒரே இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள், கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து தனி நகர சபைக்காகப் போராடும் போது, சகோதர இனத்தை சார்ந்த தமிழ் மக்கள், தமது உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வேண்டும் எனப் போராடுவதில் என்ன தவறு இருக்கின்றது.
எனவே கல்முனை வடக்கு தமிழ் மக்கள், தமது உப-பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோருவதில் தவறிருக்காது.
அத்துடன் ஏற்கனவே இயங்கி வரும் ஒரு உப-பிரதேச செயலகத்தையே, முழு-பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி இக்கோரிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இது பிழை என்றால், கிழக்கில் இருக்கும் எத்தனையோ இனரீதியான பிரதேச செயலகங்களை, கல்வி வலயங்களை கலைக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், அதற்கு இன, மத சாயம் பூசுவதில் என்ன நியாயம் இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.ஐபிசி