இனிமேல் பொய்வாக்குறுதிகளை வழங்கி வாக்குவேட்டை நடாத்த த.தே.கூட்டமைப்பினர் கல்முனைக்கு வரவேண்டாம்!

உண்ணாவிரதி த.தே.கூட்டமைப்பின் மாநகரசபைஉறுப்பினர் விஜயரெத்தினம் காட்டம்!
காரைதீவு நிருபர் சகா-
தொடர்ந்து பொய்வாக்குறுதிகளை வழங்கி அம்பாறை மாவட்ட தமிழ்மக்களை ஏமாற்றிவரும் எமது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் இனிமேல் தமிழ்மக்களின் வாக்குகளைப்பெறலாமென்று நினைத்து இங்குவரவேண்டாம். எமது விடயத்தில் தலைவரோ செயலாளரோ இனிமேல் தலையிடவேண்டாம்.
இவ்வாறு கல்முனையில் இடம்பெற்றுவரும் உண்ணாவிரததத்தில் கலந்துகொண்டுள்ள உண்ணாவிரதியான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மூது;து கல்முனை மாநகரசபை உறுப்பினர் அழகக்கோன் விஜயரெத்தினம் ஆக்ரோசமாகத் தெரிவித்தார்.
உண்ணாவிரதம் ஆரம்பித்து 24மணிநேரம் கடந்தும்இதுவரை த.தே.கூட்டமைப்பின் தலைவரோ செயலாளரோ யாரும் எம்முடன் தொடர்பு கொள்ளாதது மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது என்று மேலும் சொன்னார்.
கல்முனை வடக்குபிரதேச செயலக தரமுயர்த்தப்படும்வரை நேற்றுமுன்தினம் (17) திங்கட்கிழமை காலை கல்முனையில் ஆரம்பமான சாகும்வரையிலான உண்ணாவிரதம் நேற்று(18) இரண்டாவது நாளாகத்தொடர்ந்தது.
கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கல்முனை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக்குருக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் அ.விஜயரெத்தினம் பாண்டிருப்பு அனைத்துஇந்துஆலயங்களின் ஒன்றியத்தலைவர் கே.லிங்கேஸ்வரன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். மேலும் பலர் இதில் இணைந்து ஆதரவு வழங்கிவருகின்றனர்.

உண்ணாவிரதிகளில் உறுப்பினர் விஜயரெத்தினம் மேலும் கூறுகையில்:
கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் ஜயா கல்முனைக்குவந்தவேளை தேர்தல்முடிந்ததும் ஒருமாதகாலத்திற்குள் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித்தருவேன் என்று பகிரங்கமாக கூறினார்.இன்றுவரை அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
அம்பாறை மாவட்டத்திற்கு தேசியபட்டியல் எம்.பியைத் தருவதாக வாக்குறுதிஅளித்தார். கடைசி இரண்டரை வருடங்களாவது தருவேம் என்று கூறினார்.
அந்த வாக்குறுதியும் காற்றில்பறக்கவிடப்பட்டுள்ளது.இவர்களை இன்னமும் நம்புவதென்பது மடமை.
இதுவரைகாலமும் பொய்வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றிவந்தனர்.நாமும் அறியாமல் நாமும் ஏமாறி மக்களையும் ஏமாற்றினோம். இனிமேல் நாமும் மக்களும் ஏமாறத்தயாரில்லை.

புதிய உண்ணாவிரதியான பாண்டிருப்பு அனைத்துஇந்துஆலயங்களின் ஒன்றியத்தலைவரும் தொழிலதிபருமான கே.லிங்கேஸ்வரன் கருத்துரைக்கையில்:
அண்மையில் கல்குடாப்பிரதேசத்தில் ஆக 16கிராமசேவையாளர் பிரிவுகளைக்கொண்ட பிரதேசசெயலகத்தை எட்டெட்டாக இரண்டாகப்பிரித்து இரு பிரதேசசெயலகங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ளனர்.
ஆனால் 29கிராமசேவையாளர் பிரிவுகளையும் 49ஆயிரத்து 682சனத்தொகையினரையும் கொண்ட கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை ஏன் தரமுயர்த்தமுடியாது? இதுவே எமது வினா.

மற்றுமொரு உண்ணாவிரதி மாநகரசபைஉறுப்பினர் ராஜன் கூறுகையில்:
கடந்த 30வருடகாலமாக இயங்கிவருகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம் தொடர்பில் நாம் பலதடவைகள் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரைச்சந்தித்து கோரிக்கைவிடுத்தோம். செய்துதருவதாக உறுதியளித்தனர். ஆனால் இந்தக்கணம்வரைஎதுவுமே நடைபெறவில்லை. எனவே தரமுயர்த்தப்படும்வரைசாகும் வரை உண்ணாவிரதமிருப்போம்.
எமது நீண்டகாலக் கோரிக்கையை தொடர்ந்துவந்த அரசாங்கங்கள் இழுத்தடித்துவந்துள்ளன. இனியும் நாம் பொறுமை காக்கத்தயாரில்லை. எனவே நாம் களத்தில் இறங்குகின்றோம்.
நாம் ஜனாதிபதி பிரதமர் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஜயா எமது த.தே.கூட்டமைப்பு எம்பிக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அனைவரையும் சந்தித்துப்பேசினோம். யாரும் மறுக்கவில்லை. செய்துதருவதாகவே வாக்குறுதியளித்தார்கள்.
எமது பாராளுமன்றஉறுப்பினர் கோடீஸ்வரன் பலத்தமுயற்சி மேற்கொண்டிருந்தார். அதுகூட கைகூடவில்லை.அவர் நாளை எம்மடன் இணையவிருக்கிறார்.
ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிய எங்களை தொடர்ந்து அவ்வரசாங்கம் ஏமாற்றிவருகிறது.
கல்முனையிலுள்ள ஒரு அரசியல்வாதிக்காக இரு இனங்களையும் பிரித்துப்பார்க்கிறார்கள்.எமது இந்தப்போராட்டம் முஸ்லிம்மக்களுக்கு எதிரானதல்ல. எந்த இனத்திற்கோ சாதிக்கோ எதிரானதல்ல.
எனது முயற்சியினால் முஸ்லிம்களின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அவர்கைள கொழும்பில்சந்தித்து பின்னர் கல்முனையில் கலந்துரையாடியபோது தரமுயர்த்தலில் தமக்கு எவ்வித எதிர்ப்புமில்லை என்று கூறியிருந்தார்.
நாம் எமது மக்களின் தேவைகளை தடையின்றி பெற்றுக்கொள்ள இயங்கிவரும் அலுவலகத்தை தரமுயர்த்துமாறே கேட்கிறோம். இதனால் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை.
எமது தமிழ் மக்களின் ஒத்துழைப்பு இதற்கு பூரணமாகக்கிடைக்குமென பெரிதும் நம்புகிறோம். எம்முடன் இணைந்து போராட்டத்திலீடுபடவிரும்புவோர் தாராளமாக கலந்துகொள்ளமுடியும்.
இது தினம் தினம் தமிழ்ப்பிரதேசமெங்கும் தொடர்ந்து வியாபிக்கும். முதலில் அம்பாறை மாவட்டம் மட்டு.மாவட்டம் எனத் தொடர்ந்து முழு வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இதனை விஸ்தரிக்கத் திட்டமிட்டுள்ளோம். என்றார்.

சிவஸ்ரீ. க.கு.சச்சிதானந்த குருக்கள் கருத்துரைக்கையில்:
கடந்த 30வருட காலமாக இயங்கிவரும் எமது பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தி எமது மக்கள் சௌகரியத்துடன் சேவையைப்பறெ இந்த அரசாங்கம் உடனடியாக தரமுயர்த்தவேண்டும். ஒருசில அடிப்படைவாத அரசியல்வாதிகளின் சுயநல அரசியலுக்கா இரு இனங்களையும் மோதவிடமுடியாது.
இந்த வடக்கு பிரதேசசெயலக விவகாரத்தால் இன்று கல்முனையில் தமிழ்முஸ்லிம் மக்களிடையே பாரியவிரிசல் காணப்படுகிறது. அதனைமுடிவுக்குகொண்டுவரவேண்டுமாகவிருந்தால் இப்பிரச்சினையை இன்றோடு தீர்த்துவிட அரசினைக்கோருகின்றேன் என்றார்.

வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கூறுகையில்;:
இந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துவதில் யாருக்குப்பிரச்சினை? அதற்கான காரணங்கள் என்ன? சகலமக்களினதும் தேவைகள் இலகுவாக பூர்த்தி செய்யவே இத்திட்டம். அதில் ஒரு இனம் பாதிக்கப்படமுடியாது. எனவே அரசாங்கம் உடனடியாக தரமுயர்த்தி மக்களின் அடிப்படைத்தேவையை நிவர்த்திசெய்யவேண்டும்.என்றார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -