"சலக்குன" வில் சறுக்காத மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்.


நாச்சியாதீவு பர்வீன்-
டந்த திங்கட்கிழமை (17) இரவு ஹிரு தொலைக்காட்சியில் "சலக்குன" என்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார். பொதுவாகவே இவ்வாறான நிகழ்ச்சிகளில், கலந்து கொள்ள வருகின்ற அரசியல் பிரமுகர்களை மட்டம் தட்டி அவர்களை அவமானப்படுத்தி, மக்கள் மத்தியில் அந்த அரசியல் பிரமுகருக்கு இருக்கின்ற செல்வாக்கினை இழக்க செய்கின்ற நடைமுறையை மிகவும் நூதமான முறையில் நிழச்சியை நடாத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொள்வதே வாடிக்கை. அத்தோடு நிகழ்ச்சியை நடத்துபவர்கள் தங்களை பெரிய மேதாவிகளாக எண்ணிக்கொண்டு கேள்வி கேற்பதும், எவ்விதமான ஊடக தர்மத்தையும் கருத்திற்கொள்ளாமல் செயற்படுவதும் அண்மைக்காலங்களில் பலத்த விமர்சனத்திற்கு உட்பட்ட விடயங்களாகும்.
இவர்களோடு அரசியல் விவாத நிகழ்ச்சிக்கு செல்பவர்கள்களுக்கு சரளமான மொழியறிவும், முதிர்ச்சியான அரசியல் அறிவும் மிகமுக்கியமாகும், நிலைமைக்கேற்ப பேசுகின்ற சாதுரியமும், நிதானமும்,பொறுப்பும்,பொறுமையும் உள்ள அரசியல் தலைமைகளால் மட்டுமே குறித்த நிகழ்ச்சிகளில் சோபிக்க முடியும். மாறாக மொழியறிவும், அரசியல் அறிவும் குறைந்தவர்கள் இவ்வாறான நிகழ்ச்சிக்கு சென்று மூக்குடைபட்டு வருவதை அவதானிக்கவும் முடிகிறது.

அந்தவகையில் ரவூப் ஹக்கீம் என்கின்ற அரசியல் சாணக்கியனின் பேச்சும்,நடத்தையும்,மொழியாற்றலும் தேசிய அரசியலில் வியக்க வைக்கின்ற நகர்வுகளுக்கு அடியெடுத்து வைத்துள்ளது எனலாம். நிகழ்ச்சியில் சுதேவ, ரங்கன.தி.சில்வா, பானுக ராஜபக்ஷ ஆகிய மூன்று ஊடகவியலாளர்களும் வளைத்துவளைத்து கேள்விக்கணைகளை தொடுத்தபோதும் ரவூப் ஹக்கீம் மிகவும் நிதானமாக பதிலளித்து அவர்களின் வாயை மூட வைத்தார். எப்படியாவது ரவூப் ஹக்கீமை உணர்ச்சி வசப்படுத்தி நிதானமிழக்க வைப்பதன் மூலம் அவரை பொறிக்குள் சிக்க வைக்கும் யுக்தியை இலாவகமாக கையாண்டனர். அவர்கள் எத்தனை முயற்சித்தும் ரவூப் ஹக்கீமின் புன்னகையுடனான பதில்கள் அவர்களை நிதானமிழக்க செய்தது என்பதே உண்மை.
குரல் உயர்த்திப் பேசுவதாலும், மேசையில் ஓங்கி அடித்து அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதாலும் , திடீரென உணர்ச்சி வசப்பட்டு முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை முன்வைப்பதாலும் அரசியல்வாதிகள் தங்களது உண்மையான முகத்தை வெளிப்படுத்துகின்றனர். நின்று,நிதானித்து, பக்குவமாக ஊடகவியலாளர்களின் கேள்விச்சுழிக்குள் சிக்காமல் நீச்சலடித்து தப்பித்தது தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் காப்பாற்றுகின்ற வகையில் அன்றைய தினம் ரவூப் ஹக்கீமின் பதில்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது படிந்துள்ள கறையை துடைத்தெறிய ஏதுவாக அமையலாம்.

அவர்களின் கேள்விகள் உண்மையிலேயே சாமான்ய ஒரு அரசியல் வாதி முகம் கொடுக்க முடியாத வகையில் காரசாரமானவை. ஆத்திரமூட்டுபவை, வேண்டுமென்றே வலிந்து கோபப்பட வைப்பவை இவ்வாறான கேள்விகளுக்கு பதிலளிக்க தேவையான பக்குவம் ரவூப் ஹக்கீமிடம் இருந்தது. அதனால் அந்த மூன்று ஊடகவியலாளர்களையும்,அவர்களது கேள்விகளையும் ஒன்றுமில்லை என்ற நிலைக்கு இவரது பதில் அமைந்திருந்தது.
அவர்களின் முதலாவது கேள்விக்கு ரவூப் ஹக்கீம் அளித்த பதிலானது யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அது தொடர்பிலான விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் நீங்கள் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகினீர்கள். ஆனால் நீங்கள் இந்த தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நிறுவப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நீங்கள் இருக்கின்றீர்கள். இதில் முரண்பாடுகள் இருக்கின்றது தானே? என ஊடகவியலாளர் சுதேவ கேள்வி எழுப்பினார். அதற்க்கு, உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை விசாரிப்பது எமது பொறுப்பதல்ல, மாறாக எங்களுக்கு எங்கே பிழைத்துள்ளது, எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இந்த நடைபெறாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் போன்ற விடயங்களை விசாரணைக்கூடாக அறிய முற்படுகின்றோம். அதனை விடுத்து ஒவ்வொருவரின் மீது குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை என ஹக்கீம் பதிலளித்தார்.
நீங்கள் அந்த இடத்தில் இல்லாமல் இருப்பது பொருத்தம் என நீங்கள் நினைக்கவில்லையா? பாராளமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது அது காட்சிக்கூடாக கிடைக்கின்ற பிரதிநிதித்துவம். பல கட்சிகளுக்கு இதில் அங்கத்துவம் கிடைக்கும். துரதிஷ்டவசமாக இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுனை பிரேரித்த இரண்டு கட்சிகள் தமது பிரதிநிதியை தெரிவு செய்யும் போது அதிலிருந்து தவிர்ந்து கொண்டனர். அந்தவகையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினர் தீர்மானம் எடுத்தனர் இந்த தெரிவுக்குழுவின் செயற்பாடு காலத்தின் தேவையென ஹக்கீம் பதிலளித்தார் . கேள்வி எழுப்பியவர்களின் மனோநிலையை மிகத்தெளிவாக நாடிபிடித்து அவர் அளித்த தெளிவான பதிலால் ஊடகவியாளர்கள் கொஞ்சம் அரண்டுதான் போனார்கள்.
ரிஷாத் பதியுதீன் தொடர்பிலான வாதம் எழுந்தபோது ஹக்கீமின் விளக்கம் இவ்வாறு அமைந்தது. இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னால் அவரை கொண்டு வந்து விசாரிப்பதற்கு எனது எதிர்ப்பை வெளிப்படையாக சபாநாயரிடமும் நான் கூறினேன். காரணம் எதிர்க்கட்சியினர் சம்பந்தப்படாமல் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணையின் உண்மைத்தன்மை தொடர்பில் அவர்கள் விமர்சிக்க வாய்ப்புண்டு. அதே நேரத்தில் அங்கு முரண்பாடுகள் தோன்றும் அத்தோடு எனது நடுநிலை தொடர்பில் கேள்விக்குற்படுத்த முடியும் எனவே விசாரணைகள் மூலமே இது தொடர்பில் தீர்மானத்திற்கு வரவேண்டும் என்கின்ற வகையில் அவரது பதில் அமைந்திருந்தது.
குறிப்பாக ஹிஸ்புல்லாஹ் மற்றும் ரிஷாத் பதியுதீன் தொடர்பில் குதர்க்கமான கேள்விகளை ஹிரு ஊடகவியலாளர்கள் கேட்டனர். எப்படியாவது ஹக்கீமிடமிருந்து அவர்கள் தொடர்பிலான பிழையான அறிக்கை ஒன்றினை பெற்றுவிடுவதில் அவர்கள் முழுமூச்சாக செயற்பட்டார்கள். ரிஷாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்களையும், ஹிஸ்புல்லாஹ் மீதான குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் பலவாறு முன்வைத்தனர். எல்லக்கேள்விகளுக்கும் ஹக்கீமின் பதில் நிதானமானதாகவே இருந்தது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் உள்ளனவே தவிர அவைகளை சுயாதீனமாக விசாரணை செய்து அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபணம் ஆகாத வகையில் அவர்களை குற்றவாளிகளாக்க முடியாது என்று தெளிவாக ஹக்கீம் தனது கருத்தினை முன்வைத்தார்.
எந்த இடத்திலும் அவர்களை கட்டிக்கொடுக்கவோ அல்லது அவர்களின் மீதான குற்றசாட்டுகளை ஒப்புக்கொள்ளவோ ரவூப் ஹக்கீம் முனையவில்லை.மாறாக அவ்வாறான கேள்விகளை சாதுரியமாக பதிலளித்து கடந்து சென்றார் என்பது அவரின் பழுத்த அனுபவத்தின் வெளிப்பாடாகவே கொள்ளமுடியும்.
ஊடகவியலாளர்களின் எந்தக்கேள்விக்கும் பதிலளிக்க ஹக்கீம் பின்னிற்கவில்லை. அவரது சரளமான சிங்கள மொழிப்பிரயோகம் மற்றும் தேவையான இடங்களில் ஆங்கில மொழியிலான உசாத்துணை விளக்கங்கள் என்று ஊடகவியலார்களை அவர்களின் இலக்கிலிருந்து பின்வாங்க வைத்தது ஹக்கீமின் வெளிப்படையான தெளிவான விளக்கங்கள்.
ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் தமது பதவிகளை துறந்த பின்னணியை அவர் அந்த நிகழ்வில் மிகத்தெளிவாக பதித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டு தாக்குதலை . முஸ்லிம் பெயர்தாங்கிகள் செய்த இந்த மிலேச்சத்தனமான கொடூரமான தாக்குதல்களை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் வெறுத்து ஒதுக்கியதோடு, இந்த தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்களை அரசுக்கு அடையாளம் காட்டி இந்த சிறிய தீவிரவாத குழுவினை முற்றாக பூண்டோடு அழிப்பதற்கு அவர்களை அடையாளம் காட்டி உதவிபுரிந்தார்கள். குறித்த தாக்குதலை காரணமாக வைத்து பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகம் பெருந்தன்மையோடு மௌனம் காத்தாலும் சிங்கள பௌத்த கடும்போக்கு சக்திகள் இதனை சாக்காக வைத்து சுமார் இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் முஸ்லிம்களின் மீதான வன்முறைகளை பரவலாக கட்டவிழ்த்துவிட்டனர்.
நீர்கொழும்பு,கொட்டாரமுல்லை, நிக்கவரட்டிய, கினியம, ஹெட்டிபொல, பண்டுவஸ்நுவர போன்ற பகுதிகளில் முஸ்லிம் சமூகத்திற்கு சொந்தமான வியாபார ஸ்தலங்கள், வீடுகள், வாகனங்கள், பள்ளிவாசல்கள் என அவசர காலச்சட்டம் அமுலில் இருக்கின்ற நேரத்தில் இனவாத சிந்தனை கொண்ட பௌத்த சிங்களவர்களினால் கடும் சேதமாக்கப்பட்டன. பாதுகாப்பு படையினர்,போலீசார், விசேட அதிரடிப்படையினர் என அனைத்து தரப்பினரும் தளத்தில் இருக்கின்ற போதே அவர்களின் கண்முன்னாலேயே அத்தனை வன்முறைகளும் நடந்தேறின. பாதுகாப்பு தரப்பினரின் பாரா முகம் முஸ்லிம் அரசியல் தரப்பில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், கபீர் ஹசீம், பௌசி, ஹலீம் போன்ற சிரேஷ்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் மத்தியில் இது அதிருப்தியை உண்டு பண்ணியது.
மேற்படி தாக்குதலையொட்டி பல்வேறு சிங்கள இனவாதக்குழுக்கள் முஸ்லிம்கள் மீதான இனவாத செயற்பாட்டை முடுக்கிவிட ஆரம்பித்தன. பெண்கள் முகத்தை மூடி அணிகின்ற புர்கா,நிகாப் தடையானது மேலும் பரிணாமமடைந்து ஹிஜாப் மற்றும் ஹபாயா அணிவதற்கான தடையுத்தரவை கோறும் அளவுக்கு வியாபித்தது. முஸ்லிகள் காரணமே இல்லாமல் கைது செய்யப்பட்டனர், சட்டமும்,நீதியும் முஸ்லிம்களுக்கு ஒரு முகத்தையும், ஏனையவர்களுக்கு இன்னொரு முகத்தையும் வெளிக்காட்டியது. முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ்கின்ற ஒரு நிலை உருவாக்கியது.
இதற்கிடையில் கலகொட அத்த ஞானசார தேரரின் விடுவிப்பு நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. குறித்த குண்டு வெடிப்போடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் அமைச்சு பதவியிலிருந்து வெளியேறவேண்டும் எனவும் சிங்கள இனவாத குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன. அவ்வாறே மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் மீது பல்வேறு குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவர்களும் பதவிவிலக வேண்டும் எனவும் கடும்போக்குவாத சிங்கள தரப்பினர் குரலெழுப்பினர்.
இதற்கிடையில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியத்த ரத்ன தேரர் தலதா மாளிகைக்கு முன்னால் குறித்த மூவரையும் பதவி விலக அல்லது விலக்க கோரி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஒரு பதற்றமான சூழ்நிலை நாடுபூராகவும் திட்டமிட்டே ஏற்படுத்தப்பட்டிருந்தது. முஸ்லிம்களின் மீதான வன்முறைகள் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தாலும் அடுத்த நிமிஷம் எதுவும் நடக்கலாம் என்கின்ற வேதனை கலந்த பயத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கலக்கத்துடன் காலம் கடத்தும் அவல நிலை ஏற்பட்டது. ரத்ன தேரரின் உண்ணாவிரத்தின் மூன்றாம் நாள் ஞானசேர தேரர் ஸ்தலத்திற்கு விரைந்து, நாளை 12 மணிக்கு முன்னர் ஆளுநர்கள் இருவர் உட்பட ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பதவிவிலகா விட்டால் திருவிழா ஒன்றை பார்க்க முடியும் என்று கூறினார். இதனை தொடர்ந்து இனவாதத்தை விரும்புகின்ற சிங்கள தீவிரவாத கும்பல் நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்தின் மீது பாரிய தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டிருந்தன.
அன்றைய தினமே ஆளுநர்கள் இருவரும் இராஜினாமா செய்வதற்கு ஒத்துக்கொண்டார்கள். மறுநாளே காலை அவர்கள் இராஜினாமா செய்த செய்தி உறுதியாக வெளியாகியது. ஆனால் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுத்திருக்காத நிலையில், ஞானசார தேரரின் திருவிழா தொடர்பிலான கூற்று முஸ்லிம்கள் மத்தியில் பலத்த அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. எனவே பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் தலைமை என்கின்ற வகையில் முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கின்ற மிகப்பெரிய பொறுப்பு ரவூப் ஹக்கீமின் தலையில் விழுந்தது. எனவே கபீர் ஹசிம், ஹலீம் மற்றும் சிரேஷ்ட அரசியல்வாதி பௌசி ஆகியோரின் ஆகியோரின் ஆலோசனைகளுடன் அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள் ,இராஜாங்க அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் தமது அமைச்சுப்பொறுப்பிலிருந்து விலகி பின்வரிசை ஆசனத்தில் அமரும் தீர்மானத்திற்கு வந்தார்கள்.முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், குற்றம் சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீதான சுயாதீனமான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலுமே முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவியினை துறந்துள்ளோம் என மிகத்தெளிவான அறிக்கையை ரவூப் ஹக்கீம் வெளியிட்டார்.

எனவே இவ்வாறான அரசியல் நிகழ்வுக்கு போகின்ற அரசியல் பிரமுகர்கள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஹக்கீமிடமிருந்து நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள முடியும். நிகழ்வின் முடிவில் நிழச்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் சுதேவ நன்றி கூறும்போது விரைவில் உங்களை மீண்டும் அமைச்சராக பார்க்க எமது பிராத்தனைகள் என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

நன்றி
நவமணி
19.06.2019.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -