இன்று பரவலாக நமது நாட்டில் பலதரப்பட்டவர்களாலும் பலவாறு முஸ்லிம்கள் விமர்சிக்கப்பட்டு வருகின்றார்கள் ஆனால் நாங்களும் இந் நாட்டின் பொருளாதார அபிவிருத்திற்கும் அன்று முதல் இன்றுவரையில் தங்களாலான பாரிய பங்களிப்பபை பல துறைகளிலும் வழங்கி வந்துள்ளோம் என்பதை எவரும் இன்று மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது என்பது வரலாற்று சரித்திர உண்மையாகும் என தெரிவித்தார் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள்.
அண்மையில் அட்டாளைச்சேனையில் 'நுஜா' ஊடாக அமைபினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 'இப்தார்' நோன்பு திறக்கும் வைபவத்தில் அதன் தேசிய தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம். அறுஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி இன்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு பேசுகையில் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அண்மையில் நமது நாட்டில் ஏற்பட்ட துர்பாக்கிய நிகழ்வுக்கு காரண கர்த்தாவாக இருந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி எவ்வித கருணையும், தாரதரமும் பார்க்காமல் அதிகபட்ச தண்டனையை அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதில் இந் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ஒருமித்த குரலில் ஒற்றுமையாக ஒன்றுபட்டு தங்களது கருத்துக்களை அரசுக்கும் ஏனைய பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் அவ்வப்போது தெரிவித்து வந்ததுடன் அந்த குற்றவாளிகளை முன்நின்று பிடித்துக் கொடுப்பதற்கும் எம்மவர்கள்தான் காரண கர்த்;தாக்களாகவும் எமது மக்கள் இருந்து வந்துள்ளார்கள் என்பதையும் இத்தருணத்தில் நாங்கள் ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.
எனவே, எமது சமூகத்தில் ஒருசிலர் சேர்ந்து செய்த இக்கொடூரமான வன்முறையை ஏறக்குறைய நாம் எல்லோரும் வன்மையாக கண்டிப்பதாகவும் அதற்காக இந்நாட்டில் வாழும் மற்ற ஏனைய எல்லா முஸ்லிம்களையும் பலிக்கடாவாக பலிவாங்க முனையக்கூடாது எனவும் அவர் மேலும் வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.