முஸ்லிம்கள், பாதுகாப்புப்படையினருக்கு வழங்கிய ஒத்துழைப்பே பயங்கரவாதிகளை இலகுவில் இனம்காணமுடிந்துள்ளது!


எம்.சி.எம்.கமறுர் றிழா
சாய்ந்தமருது-


ஜனாதிபதி, பிரதமருக்கு முஸ்லிம் சமூகத்தின் உருக்கமான கடிதம். 

அதிமேதகு மதிப்பிற்குரிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களே!
லங்கை நாடானது நாம் பிறந்து, வளர்ந்து கொண்டிருக்கும் எமது தாய் நாடு. இங்கு நாங்கள் பிற மதத்தவர்களுடன் மிக நல்லமுறையில், பரஸ்பர புரிந்துணர்வுடன் அமைதியாகவே வாழ்ந்து வந்துள்ளோம். இன்னும் வாழ விரும்புகின்றோம். எமது இஸ்லாமிய மதமும் இதனையே எமக்கு சொல்லித்தருகின்றது, வழிகாட்டி நிற்கின்றது.
ஏப்ரல் 21, உண்மையில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கே ஓர் கரிய நாள், எமது முஸ்லிம் சமூகத்தின் துக்கநாள். இன்னும் இதற்காக வேதனைப்படுகின்றோம், எமது கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்காக பிரார்த்தனை செய்கின்றோம். அவர்களிடம் மன்னிப்புக்கோரி நிற்கின்றோம். நாம் அனைவரும் இலங்கையர்கள் எனும் உணர்வே எம்மிடம் மேலோங்கி நிற்கின்றது என்பதனையும் வலியுறுத்துகின்றோம்.

அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவத்தின் பின்னர் நீங்கள் இந்த நாட்டை வழிநடத்திய முறை, எம்மை அணுகியமுறை, இந்த கொடூர செயலைச்செய்த தீவிரவாதிகளுக்கு நீங்கள் பாவித்த சொற்பிரயோகமான “தீவிரவாதிகள்” எனும் சொற்பதம், ஏனைய முஸ்லிம்களாகிய எங்களுக்கு நீங்கள் பாவித்த “அப்பாவி முஸ்லிம் மக்கள்” எனும் சொற்பதம், சமூக வலைத்தளங்களை உடனடியாக செயலிழக்கச் செய்தமை, மீடியாக்களை உரிய முறையில் வழி நடத்தியமை, உங்களது பாராளுமன்ற முதிர்ச்சியான உரை, நாட்டு மக்களை நீங்கள் தெளிவுபடுத்திய விதம், பாதுகாப்புப் படையினரை வழிநடத்திய விதம் போன்ற பக்குவமான, முதிர்ச்சியான அரசியல் வழிநடத்துதலும், எம்மை அரவணைத்து பாதுகாத்த விதமுமே இன்று நாம் இன்னும் உயிர்வாழ காரணமாக இருக்கின்றது என்பதனை நன்கு புரிந்தவர்களாக, உங்களுக்கு எங்கள் இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பில் நன்றியையும், மரியாதையையும் தெரிவித்துக்கொள்கின்றேன்;.

மதிப்பிற்குரிய ஜனாதிபதி, பிரதமர் அவர்களே!
நாங்கள் என்றும் இலங்கையர்கள், எமது அரசாங்கத்துடனேயே என்றும் உடன் இருப்போம். இன்றும் கூட இங்கு கண்டுபிடிக்கப்படும், அடையாளம் காட்டப்படும் தீவிரவாதிகள் மற்றும் அவர்களது இடங்கள், உடைமைகள், வெடிபொருட்கள் என்பன எமது முஸ்லிம் மக்கள், பள்ளிவாசல்கள் என்பன அருகிலுள்ள பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு உடனடியாக தகவல்களைக்கூறியும், காட்டிக்கொடுப்பதனாலுமே ஓரிரு நாட்களினுள் இந்தளவு பெரும் எண்ணிக்கையான தீவிரவாத கும்பல்களையும், அவர்களது வெடிபொருட்களையும் கண்டுபிடிக்க இலகுவாகவும், விரைவாகவும் எமது படையினரால் முடிந்துள்ளது.
முஸ்லிம்களாகிய நாங்கள் வெறுமனே பணத்திற்கும், பொருளுக்கும், நகைகளுக்கும், மதமிதவாத அடிப்படை கொள்கைகளுக்கும் ஆசைப்பட்டு சோரம்போரவர்கள் அல்ல. மாறாக இலங்கை நாட்டின் இறைமையும், நாட்டுப்பற்றும் உள்ளவர்கள் என்பதனை எமது சாய்ந்தமருது மக்களும், ஏப்ரல் 26 இல் இடம்பெற்ற இரண்டாவது தற்கொலை தாக்குதல் முறியடிப்பு சம்பவமும் நன்கு எடுத்துக்காட்டியது. எமது உணர்வுகளை எமது அரசுக்கும், உலகிற்கும், ஏனைய இலங்கை மக்களுக்கும் வெளிக்காட்ட இதனைவிடவும் வேறு வழி எமக்குத்தெரியவில்லை.
எமது நாட்டை அமைதியாகவும், உண்மையாகவும் வழிநடத்துகின்ற உங்களிடம் எமது முஸ்லிம் சமூகத்தின் உருக்கமான வேண்டுகோள்!

“காகம் இருக்க பனம்பழம் விழுந்ததுபோல், பாரதூரம், பின்விளைவு பற்றி சிந்திக்காது, தூர சிந்தனையற்று கண்மூடித்தனமான நம்பிக்கை, தேர்தல் காலங்களில் வாக்குகளை சுவீகரித்த விதம், வியாபார இலாப நோக்கு போன்ற காரணங்களினால் இன்று எமது முதிர்ச்சியுள்ள ஆளுமைகள், அரசியல் வழிகாட்டிகள் எதிர்பாராத விதமாகவும், அறியாமலும் சில தவறுகளை செய்துள்ளனர். மேலும் கடந்த காலங்களில் அவர்களுடன் உடனிருந்து பிடிக்கப்பட்ட பழைய புகைப்படங்கள், வியாபார கொடுக்கல் வாங்குதல்களில் ஈடுபட்டமை போன்றவற்றை மட்டும் வைத்துக்கொண்டு எமது அரசியல் ஆளுமைகளான எமது பேசுபொருட்களை இன்று சிலர் இவர்களும் இந்த தீவிரவாத குழுவினர்தான், இதற்கு உடந்தையானவர்கள்தான் என்று சித்தரிக்கின்றனர். இதுபோன்ற சிலரது திட்டமிட்ட சந்தர்ப்பவாத வாதங்கள், பேச்சுகளை வைத்துக்கொண்டு மேலோட்ட முடிவுக்கு வந்துவிடாமல் சற்று நிதானமாகவும், பொறுப்புடனும் எமது இருப்புகளை சிந்தித்து முடிவெடுக்குமாறு முஸ்லிம் சமூகம் சார்பில் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
மாற்று அரசியல்வாதிகள், எதிரிகள் தமது பழைய பகைகளைத் தீர்க்கவும், எதிர்கால அரசியல் இருக்கை, பதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் சிலர் “எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுபவர்களாகவும், பக்கவாத்தியம் வாசிப்பவர்களாகவும்” சில அரசியல் திட்டமிட்ட முன்னெடுப்புகளையும், காய்நகர்த்தல்களையும் செய்கின்றனர். முஸ்லிம்கள் என்றும் அரசுடனேயே இருப்போம், அமைதிக்கே முன்னிற்போம், சமாதானத்தையே விரும்புவோம். இதற்கு கடந்த, தற்கால நிகழ்வுகள் சான்று பகிர்கின்றன. நீங்களே எமது உண்மையான வரலாற்றினை எடுத்து நோக்குங்கள்.
எமது முஸ்லிம் ஆளுமைகள், அரசியல் முதிர்ச்சிகள் இல்லாமல் செய்தால் சிலர் தமது காரியங்களை, சில பதவிகளை அலங்கரிக்கலாம், தமது அரசியலை சாதித்துவிடலாம் என நன்கு திட்டமிட்டு பாராளுமன்றத்திலும், சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கச்சிதமாக கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர், திரிவுபடுத்துகின்றனர்.

எனவேதான், எமது முஸ்லிம் சமூகத்தின் உருக்கமான வேண்டுகோள்!

“நாம் என்றும் இலங்கையர், உங்களுடனே இருப்போம், எமது வழி அமைதியானதும் உண்மையானதுமாகும். எமது முஸ்லிம் தலைமைகளும் என்றும் நாட்டுப்பற்றுள்ளவர்கள், அமைதியை விரும்புபவர்கள்” என்பதனை தெளிவுபடுத்தியவனாக, அரசியல் குளிர்காய நினைப்பவர்களின் சதியில் விழுந்துவிடாமல் எமது முஸ்லிம் சமூகத்தையும், எமது முஸ்லிம் தலைமைகளையும் பாதுகாப்பீர்கள் என்று திடமாக நம்பியவனாக நன்றியுடன் விடைபெறுகின்றேன்.

நன்றி.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -