இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,கல்முனை என்பது ஏதோவொரு நகரம் அல்ல. அது இந்த நாட்டு முஸ்லிம்களின் இதயமாக உள்ளது. தமிழ் போராளிகளின் பயங்கரவாத காலத்தில் கல்முனையை ஆக்கிரமிக்க பல கோணங்களில் முயற்சி செய்யப்பட்டது.
கல்முனை முஸ்லிம்கள் வர்த்தகத்தில் மட்டுமல்ல சமூகத்துக்கான போராடத்தையும் முன்னெடுத்தவர்கள். மறைந்த தலைவர் அஷ்ரப் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசை வளர்ப்பதில் ரத்தம் சிந்தியவர்கள். அது மட்டுமல்லாது கிழக்கின் முஸ்லிம் கிராமங்களை பாதுகாப்பதில் வீரமாய் செயற்பட்டவர்கள்.
இவ்வாறான கல்முனையை பிரித்து சின்னாபின்னமாக்கும் தந்திரோபாயம் தொடர்ந்தும் நடக்கிறது. இந்த வகையில் ஆயுத முணையில் கல்முனையில் உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டு அதற்குள் கல்முனை கடற்கரை பள்ளி முதல் மருதமுனை வரை எல்லையிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருதுக்கு செய்த அநீதி காரணமாக சாய்ந்தமருதுக்கான சபை கோரிக்கை வலுப்பெற தொடங்கியதை தொடர்ந்து கல்முனை உப தமிழ் செயலகத்தை அதன் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளுடன் தரமுயர்த்தும் கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.
கல்முனையை மூன்று சபைகளாக பிரித்திருந்தால் இப்பிரட்சினைகளை எப்போதோ தீர்த்திருக்கலாம். அதற்குரிய சந்தர்ப்பத்தை சாய்ந்தமருது மக்களே இல்லாமல் செய்தனர். இது விடயத்தை அரசியல் மயப்படுத்தி அரசியல் மூலம் யாருக்கும் பாதகமின்றி செய்திருக்க முடியும். ஆனால் இவ்விடயத்தில் சா. மருது பள்ளிவாயல் மூக்கை ஓட்டி ஒற்றுமையாக வாழ்ந்த கல்முனைக்குடி சாய்ந்தமருது மக்கள் மத்தியில் ஊர் துவேசத்தை விதைத்து இன்று இந்த இரு ஊரும் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்பதை சமூகப்பற்றுள்ள எவரும் அனுமதிக்க முடியாது.
கல்முனையை பிரித்து முஸ்லிம்களின் பலத்தை ஒழிக்க தமிழ் கூட்டமைப்பின் யாழ்ப்பாண எம் பீக்கள் கூட முயற்சி செய்யும் போது கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இது விடயத்தில் வெறும் பார்வையாளராக இருக்க முடியாது.
ஆகவே முழு கிழக்கு மாகாண பள்ளிவாயல்களும் ஒன்றிணைந்து பின் வரும் கோரிக்கைகளை நிறைவேற்றி அதனை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
1. சாய்ந்தமருதுக்கான சபை விடயத்தில் அவ்வூர் பள்ளிவாயல் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.
2. கல்முனையின் ஒற்றுமை கருதி சாய்ந்தமருது மக்கள் கல்முனையுடன் தொடர்ந்தும் இருக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
3. சாய்ந்தமருதின் மேயர் பதவியை இடையில் பறித்தமைக்காக முஸ்லிம் காங்கிரஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
4. கல்முனையின் சட்டபூர்வமற்ற உப செயலகம் கலைக்கப்பட்டு அதனை முற்று முழுதாக கல்முனையின் பிரதேச செயலகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.
