அ.இ.ம.காவானது மு.காவின் தவறான தலைமைத்துவ வழிகாட்டலிருந்து மக்களை மீட்கும் நேக்கில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்றால் தவறாகாது. மு.காவின் கொள்கை அரசியலோடு முரண்பட்ட பலர் (முழுமையாக என்றாலும் தவறில்லை) இக் கட்சியில் உள்ளனர். இவ்வாறான நிலையில், மு.காவுக்கு அ.இ.ம.காவே அரசியல் அதிகாரம் பெற்றுக்கொடுப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. இவ்வாறான உப தவிசாளர் போன்ற அரசியல் அதிகாரங்களை மு.காவுக்கு பெற்றுக்கொடுப்பதானது, அ.இ.ம.காவானது மு.காவின் கொள்கைகளை, அரசியல் பாதையை ஏற்பதற்கு ஈடானது. மு.கா சரியான பாதையில் பயணித்தால், அதன் கொள்கைகளை, அதனை எதிர்க்கும் அ.இ.ம.காவே ஆதரித்தால், நாம் நேரடியாகவே மு.காவை ஆதரிக்கலாமே! இரண்டாம் அரசியல் கட்சி தேவையில்லையல்லவா?
இவ்விடயத்தில் அ.இ.ம.காவானது மு.காவுக்கு எதிராக இருந்திருக்க வேண்டும் என்பதால், அதாவுல்லாஹ் அணியினரை ஆதரித்திருக்க வேண்டுமென்பது பொருளல்ல. அதாவுல்லாஹ் அ.இ.ம.காவிடம் ஆதரவு கேட்காமலும் ஆதரிக்க முடியாதல்லவா? அதுமாத்திரமன்றி, அதாவுல்லாஹ் அணியினர் அ.இ.ம.காவோடு சிறிதளவு கூட இணங்கிச் செல்லும் சிந்தனையில்லை. அவர் அவ்வாறிருக்கையில் தே.காவை ஆதரிக்க முடியாது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். அதாவுல்லாஹ்வின் செயற்பாடு பிழை என்பதற்காக மு.கா சரியாகிவிடாது. யார் எப்படி இருந்தாலும், மு.கா தவறான பாதையில் பயணிக்கின்றது என்பது வெளிப்படையான உண்மைகளில் ஒன்று.
குறித்த விடயத்தில் அ.இ.ம.கா நடுநிலை வகித்திருக்கலாம். மு.கா விடயத்தில் தங்களது கொள்கையை வெளிப்படுத்தியிருக்கலாம். அப்போதும் மு.காவே வெற்றிபெற்றிருக்கும் என்பது வேறு விடயம். அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தெரிவின் போது தெரிவின் போது அ.இ.ம.காவானது மு.காவை எதிர்த்தே செயற்பட்டிருந்தது. உப தவிசாளர் விடயத்தில் மு.காவை ஆதரித்துள்ளது. அவ்வாறானால், அ.இ.ம.காவானது மு.கா விடயத்தில் கடைப்பிடிக்கும் கொள்கை தான் என்ன? இவ்விடயங்களானது, கொள்கையற்ற சந்தர்ப்பவாத அரசியலை அ.இ.ம.கா முன்னெடுக்கின்றது என்பதை அறிந்திட செய்கிறது. இதுவெல்லாம் மு.காவை வீழ்த்தியே வளர வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள அ.இ.ம.காவின் எதிர்கால போக்குக்கு உசிதமானதல்ல.
குறிப்பு : இரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் போது சமூகம் நன்மையுறும் எனும் விடயத்தில் ஒன்றிணைவதில் தவறில்லை.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
