கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுடனான அவசர கலந்துரையாடல் ஒன்று, இன்று மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் ஆலோசனையின் பேரில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தலைமையில் மாநகர சபையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களின் சில இடங்களில் மாடுகள் திடீரென இறப்பது குறித்தும் அப்பகுதிகளில் இறைச்சிக்காக மாடுகள் அறுப்பதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதுடன் அவ்வாறு இறக்கும் நிலையிலுள்ள மாடுகளோ அல்லது நோய்வாய்ப்பட்டு, அறுக்கப்பட்ட மாட்டிறைச்சியோ கல்முனை மாநகர சபை எல்லைக்குள் கொண்டு வரப்படுவதை தடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
அந்த வகையில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகள் அனைத்தும் நோயற்றவை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவை அறுக்கப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் அவர்கள் இதன்போது அறிவுறுத்தியதுடன் இவ்விடயத்தில் தவறிழைக்கும் இறைச்சிக்கடை உரிமையாளர்களின் அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்நடைமுறையை அமுல்படுத்துவதில் மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் விலங்கறுமனை உத்தியோகத்தர்கள் மிகக்கண்டிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் பணிப்புரை விடுத்தார்.
பொதுவாக வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்ற மாடுகள் விடயத்தில் அனைவரும் அவதானமாகவும் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.
கல்முனை மாநகர சபையினால் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ள 33 மாட்டிறைச்சிக் கடைகளிலும் மனித நுகர்வுக்கு எந்த வகையிலும் கேடு விளைவிக்காத இறைச்சி விற்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அவற்றின் உரிமையாளர்கள், நடத்துனர்கள் எல்லோரும் இறைவனுக்குப் பயந்து, மனச்சாட்சியுடன் செயற்பட முன்வர வேண்டும் என்றும் ஆணையாளர் கேட்டுக் கொண்டார்.
மக்களுக்கு உணவுக்காக மாட்டிறைச்சி வழங்குவது என்பது இறை பொருத்தத்திற்குரிய ஒரு உயரிய பணியாகும். அது நுகர்வுக்குதவாதவையாக அமைகின்றபோது எமது இஸ்லாமிய மார்க்கத்திலும் நாட்டுச் சட்டத்திலும் தண்டனைக்குரிய குற்றமாக மாறி விடுகிறது என்றும் இதுவொரு சமூகப் பிரச்சினை எனவும் ஆணையாளர் எம்.சி.அன்சார் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை மாநகர சபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படாத எவராவது வீடுகளிலும் பொதுவான கடைகளிலும் மாட்டிறைச்சி விற்பனை செய்வார்களாயின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், சுகாதாரப் பரிசோதகர் எம்.எம்.முனவ்வர் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
