வைத்திய அதிகாரிகளின் நியமனமும் இடமாற்றமும்


வைத்தியசாலைகளில் வைத்திய அதிகாரிகளின் நியமனம் தொடர்பாகவும், அவர்களின் இடமாற்றம் தொடர்பாகவும் பலருக்கு தெளிவில்லாமல் இருப்பதனை அறிய முடிகின்றது.

எனக்குத் தெரிந்த விடயங்களை தெரியப்படுத்துவது எனது கடமையாகவே நான் கருதுகிறேன். ஏனெனில், ஒரு விடயம் பிழையானது என்று தெரிந்தும் அதனைத் திருத்தாவிடின, அது கூட பிழை செய்வதற்கு ஒப்பானது தான்.

01) முதல் நியமனம் (First Appointment):
மருத்துவக் கற்கையினைத் தொடரந்து ஒரு வருட உள்ளக பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பின்னரே முதல் நியமனம் வழங்கப்படும். உள்ளக பயிற்சிக்கான (Internship) வைத்தியசாலைகளைத் தெரிவுசெய்வதற்கு முன்னர், பல்கலைக்கழகங்களில் எய்திய சித்தியின் அடைவுமட்டத்தை வைத்து தரப்படுத்தல் (Ranking) செய்யப்படும்.

இந்த தரப்படுத்தலின் அடிப்படையிலேயே உள்ளகப் பயிற்சிக்கான வைத்தியசாலைகள் வழங்கப்படும். அதாவது தரப்படுத்தலில் முன்னிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே தெரிவு நடைபெறும். இதில் யாரும் எந்தத் தலையீடும் செய்ய முடியாது.

உள்ளகப் பயிற்சியை முடித்ததன் பின்னர் வழங்கப்படும் முதல் நியமனமும் இதே தரப்படுத்தலை அடிப்படையாக வைத்தே வழங்கப்படும். இந்த நியமனத்தில் யாரும் எந்த செல்வாக்கும் செலுத்த முடியாது. தரப்படுத்தலில் முன்னிலையில் உள்ளவர்களுக்கு வைத்தியசாலையைத் தெரிவுசெய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த நியமனத்திலும் யாரும் எந்தத் தலையீட்டையும் செய்ய முடியாது.

02) வடக்கு கிழக்கு இடமாற்றப் பட்டியல் (North East Transfer List):
வடக்கு கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் தமது முதல் நியமனத்தைப் பெற்ற வைத்திய அதிகாரிகள் ஒரு வருட கால சேவையைப் பூர்த்தி செய்த பிறகு வருடாந்தம் மேற்கொள்ளப்படும் வடக்கு கிழக்கு இடமாற்றப் பட்டியலில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவார்கள். விரும்பியவர்கள் அதில் விண்ணப்பித்து இடமாற்றத்தைப் பெறலாம். இதிலும் முன்பு சொல்லப்பட்ட தரப்படுத்தல் பட்டியலே பயன்படுத்தப்படும்.

03) வருடாந்த இடமாற்றம் (Annual Transfer):
நான்கு வருட கால சேவையை ஒரு குறித்த வைத்தியசாலை அல்லது சுகாதார நிலையத்தில் கடமையாற்றிய பிறகு, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சகலரும் இந்த இடமாற்றப் பட்டியலில் உள்வாங்கப்படுவார்கள். எனினும், ஒரு இடத்தில் குறைந்தது இரண்டு வருடங்கள் கடமையாற்றிய எந்த வைத்திய அதிகாரியும் தான் விரும்பினால் அடுத்து வரும் வருடாந்த இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

வருடாந்த இடமாற்றத்தினுள் உள்வாங்கப்பட்டவர்களின் சேவை இடங்கள் சுயமாகவே வெற்றிடமாகுவதுடன், வெற்றிடமாகவுள்ள வேறு சில இடங்களும் வருடாந்த இடமாற்றப் பட்டியலில் (Vacancy List)வெளிப்படுத்தப்படும். இத்தகைய இடங்களில் தமக்கு விருப்பமான இடங்களைத் தெரிவு செய்யலாம். எனினும், சேவை மூப்பின் (Seniority)அடிப்படையிலேயே இடங்கள் வழங்கப்படும். அதாவது சேவையில் மூத்தவர் முன்னுரிமை பெறுவார். இதிலும் யாரும் எந்தத் தலையீடும் செய்ய முடியாது.

இங்கு விண்ணப்பிக்கத் தவறுபவர்களுக்கு சுகாதாரத் திணைக்களத்தினால் வழங்கப்படும் இடத்திற்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதனால் விண்ணப்பிக்கத் தவறுபவர்கள் மிகவும் அரிதாகும்.

04) விஷேட மேன்முறையீட்டு இடமாற்றம் (Special Appeal Transfer):
வருடம் ஒரு தடவை இதற்கான வாய்ப்பு வழங்கப்படும். தனது சேவை இடத்தில் குறைந்தது ஒரு வருடமாவது கடமை செய்தவர்கள் தனக்கு அங்கு கடமை செய்வதில் ஏதாவது அசௌகரியங்கள் இருந்தால் ( தனிப்பட்ட விடயங்கள், குடும்பப் பிரச்சினைகள், பிள்ளைகளின் கல்வி போன்றன) அதனை உரிய முறையில் மேன்முறையீடு செய்து அது ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் இடமாற்றம் வழங்கப்படும்.

மேன்முறையீடு செய்து வெற்றிகாண்பது அவரவரின் திறமையைப் பொறுத்தது. அதற்காக சில நுட்பங்களைக் கையாள வேண்டியிருக்கும்.

இவ்வாறு இடமாற்றம் பெற்றவர்கள் அதன் பிறகு வழமையான வருடாந்த இடமாற்றத்திற்கு உள்ளாகுவார்கள்.

குறிப்பு :- இங்கு 01, 02, 03, 04 ஆகியவை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் (PSC) அங்கீகாரத்தின் பின்னரே நடைமுறைப்படுத்தப்படும்.

05) தற்காலிக இணைப்பு (Temporary Attachment):
இது இடமாற்றமல்ல. சில காரணங்களை முன்வைத்து தனிப்பட்ட முறையில் வேண்டிக்கொள்வதன் பேரில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு இடத்தில் கடமையாற்ற இணைப்புச் செய்யப்படுவார்கள். சம்பளம் (Salary) மற்றும் சுயவிபரக் கோவை (Personal File) என்பன பழைய இடத்திற்குட்பட்டதாகவே இருக்கும்.

இது எவ்வளவு காலத்துக்கு என்பதில் தெளிவில்லை என்றாலும், பொதுவாக மூன்று மாத காலங்களுக்கு வழங்கப்படும். பின்னர் அது மும்மூன்று மாதங்களுக்கு நீட்டப்படலாம். எத்தனை தடவைகள் நீட்டப்படலாம் என்பதற்கு திட்டமான தெளிவு இல்லாவிட்டாலும் அது ஒரு குறித்த வரையறைக்குட்பட்டதாகவே இருக்கும்.

சம்பளமற்ற விடுகை (No Pay Leave) பெற்று வெளிநாட்டில் சில காலம் தங்கியிருந்து விட்டு வருகின்றவர்களும் இவ்வாறு தற்காலிகமாக இணைப்புச் செய்யப்படுவார்கள். எனினும், இவ்வாறு இணைப்புச் செய்யப்படுகின்றவர்கள் அடுத்து வரும் வருடாந்த இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும்.

இந்த 05வது வகையான தற்காலிக இணைப்பில் மாத்திரமே ஏதாவது செல்வாக்குச் (Influence) செலுத்துவதற்கு கொஞ்சம் வாய்ப்புள்ளது.

குறிப்பு :- எந்த வகையான இடமாற்றமாக இருந்தாலும், புதிய இடத்திற்கு செல்ல வேண்டுமாயின் பழைய இடத்திலிருந்து பெரும்பாலும் பதிலீடாக (Replacement) ஒருவர் கடமையைப் பொறுப்பேற்ற பின்னரே விடுவிப்புச் (Release) செய்யப்படுவார். எனினும், அது நிலைய (Officer-in-Charge/DMO/MS/Director)மற்றும் திணைக்களத் தலைவர்களின் (Head of Department) ஆளுகைக்குட்பட்டதாகவும் இருக்கும். அதாவது சேவையில் பாதிப்பு ஏற்படாது என்று கருதும் பட்சத்தில் பதிலீடு இல்லாமல் விடுவிப்புச் செய்யப்படவும் இயலும். இந்த விடயத்தில் பரஸ்பர புரிந்துணர்வு அவசியமாகும்.

(மேலேயுள்ள எந்த வகையான இடமாற்றங்களிலும் மாகாண மற்றும் பிராந்திய பணிப்பாளர்கள் தொடர்புபடுவதில்லை)

06) பிராந்தியத்துக்குட்பட்ட தற்காலிக ஏற்பாடு (Internal Temporary Arrangement):
சேவையின் தேவை (Urgency of service) மற்றும் பற்றாக்குறை (Shortage) என்பவற்றை அடிப்படையாக வைத்து சில தற்காலிக ஏற்பாட்டினை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சம்பந்தப்பட்ட வைத்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செய்யலாம். இதுவொரு கூட்டுமுயற்சியாகவும் இருக்கும். அதாவது ஏற்கெனவே நிரந்தரமாக கடமை செய்கின்ற இடத்திலிருந்து தற்காலிகமாக வேறொரு இடத்தில் கடமை செய்ய குறித்த வைத்திய அதிகாரி சம்மதிக்க வேண்டும். அத்துடன் அவரை விடுவிக்க குறித்த நிலையத் தலைவரும் சம்மதிக்க வேண்டும்.

இதனடிப்படையில், வைத்தியசாலைகளுக்கு வைத்திய அதிகாரிகள் கடமை நிமித்தம் வருவதும் போவதும் தவிர்க்கப்பட முடியாததும் சாதாரணமாக நடைபெறுகின்ற ஒரு செயற்பாடுமாகும்.

சேவை இடங்களாக, பணிப்பாளர் பணிமனைகள் (Director Offices), வைத்தியசாலைகள் (Hospitals), சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் (MOH Offices) மற்றும் விஷேட வைத்தியப் பிரிவுகளைச் (Specialized Campaign Units) சொல்லலாம்.

(இதில் ஏதும் தவறிருப்பின் சுட்டிக்காட்டலாம். அதனைத் திருத்துவதற்கு உதவியாக இருக்கும்)

@ D N A
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -