இன்று எமது புதிய தேசத்தின் உதய நாள், உதய தேசத்தின் ஆரம்ப நாள். இன்று 71 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், இன மத பேதங்களை மறந்து "நாம் இலங்கையர்கள்" என்று கூற அனைவரும் ஒன்றுபடுவோமாக. அத்துடன், நாட்டுப்பற்றுடனும், சமூக நல்லிணக்கத்துடனும் இன்றைய சுதந்திர தினத்தைக் கொண்டாடி தேசப்பற்றை வளர்ப்போமாக என்று, முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எமது தேசத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய சிறப்பான நாளாக இன்றைய நாள் கருதப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் நான்காம் திகதி எமது இலங்கைத் திரு நாடு, பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்தது. இத்தினத்தில் சுதந்திர இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் முதன் முதலில் நடைமுறைக்கு வந்து, ஜனநாயகக் குடியரசு நாடாக உருவெடுத்த இலங்கை, ஒரு இறையாண்மை கொண்ட நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை அமைதியாகவும் வெகு விமர்சையாகவும் கொண்டாடும் இத்தருணத்தில், அதன் பெருமை இனம், மதம், மொழி, ஜாதி என்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி களத்தில் போராடிய எமது மூத்த தலைவர்களையே சாரும்.
இலங்கையின் சுதந்திரப் போராட்டத்திற்கு, நமது சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களும் பங்களிப்பு வழங்கினர். இம்மூவின மக்களின் தலைவர்கள், தமது பொது எதிரியாக ஆங்கிலேயர்களை இனங் கண்டு, சாதி, மத பேதங்களின்றி ஒன்றுபட்டு அவர்களுக்கெதிராகப் போராட்டம் நடாத்தி வெற்றிபெற்றனர்.
இவ்வாறு சகல இனத்தவர்களும் அன்று ஒன்றுபட்டு போராடிப் பெற்ற இந்த சுதந்திரத்தை அவ்வாறே நாமும் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும்.
நாம் எம்மை சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று நினைப்பதற்கு முன்னர், நாம் எல்லோரும் எம்மை, "இலங்கையர்கள்" என்று நினைப்பது எமது கடமையாகும்.