- மேல் மாகாண ஆளுனர் அஸாத் ஸாலி-
எஸ்.அஷ்ரப்கான்-மேல் மாகாணத்தில் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட தீர்மானித்த நாங்கள் அதற்காக எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி 210 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க தீர்மானித்துள்ளோம். பின்னர் மார்ச் மாதம் இன்னும் ஒரு தொகை ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி எல்லா பாடசாலைகளிலும் உள்ள குறைபாடுகளையும் பூர்த்தி செய்து வெற்றிடங்களை நிரப்ப தீர்மானித்துள்ளோம் என மேல் மாகாண ஆளுனர் அஸாத் ஸாலி தெரிவித்தார்.
தர்ஹா நகர் அல்-ஹம்றா மகா வித்யாலய இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (31) மாலை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கொண்டு உரையாற்றிய ஆளுனர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றும் போது,
மேல் மாகாண ஆளுனராக பதவியேற்ற பிறகு நாங்கள் தீர்மானித்தோம், இங்கு கல்வித் துறைக்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்போம் என்று, அதனால் எல்லா அதிபர்களையும் அழைத்து நாங்கள் ஒரு கலந்துரையாடல் வைத்தோம். அதில் எமது முதலாவது தீர்மானம் எல்லா பாடசாலைகளிலும் இருக்கின்ற ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதாகும். அதன் பிறகு எல்லா பாடசாலைகளிலிருந்து உள்ள பற்றாக்குறைகளை, தகவல்களை திரட்டி பெரியதொரு மாஸ்டர் பிளான் ஒன்றை மேல் மாகாணத்திலே செய்ய உள்ளோம்.
இந்தத் தகவலை திரட்டுவதற்கு ஒரு காரணம் உள்ளது 2016ஆம் ஆண்டு மேல் மாகாணம் கல்வித்துறையில் முதலாம் இடத்தில் இருந்தது. அதற்குப் பிறகு தற்போது மேல் மாகாணம் மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கின்றது. எதிர்வரும் டிசம்பர் வரும் போது எமது மாகாணம் எல்லா விதத்திலும் 1 ம் இடத்திற்கு வருவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். இதற்காக எங்களது பாடசாலை, பிள்ளைகள், பெற்றோர்கள், பள்ளிவாயல் நிர்வாகத்தினர் எல்லோரும் ஒன்றுபட்டால்தான் இதனை வெற்றிகரமாக முன்கொண்டு செல்ல முடியும். மேல் மாகாணத்தின் கல்வித்துறையில் பெரிய மாற்றம் ஒன்றைக் கொண்டு வருவதற்காக இங்குள்ள சகல ஆசிரியர்களும் அதிபர்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசாங்கத்தின் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் தெரிவான பாடசாலைகளுக்கான வேலைத்திட்டம் நிறைவு பெறாத நிலையில் உள்ளது. 4 ஆயிரம் பில்லியன் பணம் எமக்கு தர வேண்டியுள்ளது. இதனை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் அவர்களிடம் பேசி பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். இதனால் தான் நாம் வேண்டு இன்றோம், தகவல்களை வழங்குவதன் மூலம் உங்களின் ஒத்துழைப்பை எமக்கு தாருங்கள் என்று, பாடசாலைகளுக்குள் அரசியல் வேண்டாம். பிள்ளைகளின் நலனுக்காக ஒன்றுபட்டு செயற்படுவோம் என்று இங்கு அரசியல் பிரமுகர்களை கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இங்கு இல்ல விளையாட்டுப் போட்டியில் பங்கு கொண்ட அலவி, மசூர், பாரி ஆகிய இல்லங்களின் அணி நடைப் போட்டி, வினோத உடைப் போட்டி மற்றும் றில் கண்காட்சி என்பனவும் நடைபெற்றது.
இறுதி முடிவுகளின்படி 511 புள்ளிகளைப் பெற்று மசூர் இல்லம் சம்பியனாகவும், 2ம் இடத்தை 495 புள்ளிகளைப் பெற்று பாரி இல்ல மும், 3ம் இடத்தை 473 புள்ளிகளைப் பெற்று அலவி இல்லமும் பெற்றுக் கொண்டது.
வெற்றி பெற்ற இல்லங்களுக்கான வெற்றிக் கிண்ணங்களை பிரதம அதிதி மற்றும் கெளரவ அதிதிகளான மேல் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜெமீல் உட்பட பேருவளை பிரதேச, நகர சபை உறுப்பினர்கள் வழங்கி கெளரவித்தனர்.