நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை விசேட உரை நிகழ்த்திய சந்தர்ப்பத்திலேயே இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக இதன்போது உறுதியளித்துள்ளார்.
மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கைகளின் போது, அதனை தடுக்கும் வகையில் மனித உரிமை செயற்பாட்டளார்கள் முன்வர வேண்டாம் எனவும் ஜனாதிபதி இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறந்த நல்லொழுக்கம் கொண்ட நாடொன்றை உருவாக்கும் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்ததார்.
இதேவேளை, சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பலர் கடந்த காலங்களில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அத்துடன், பெருமளவான சட்டவிரோத போதைப்பொருள்கள் கடந்த சில தினங்களாக அதிகளவில் கைப்பற்றப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தான் ஜனாதிபதி செயலகத்திடம் கையளித்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல நேற்றைய தினம் செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார்.
எனினும், தன்னால் கையளிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து, ஜனாதிபதி இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.
மரண தண்டனை கைதிகள் மற்றும் நிறைவேற்றும் செயற்பாடு
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 30 கைதிகள் வரை இலங்கையில் உள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றும் அதிகாரிகளை உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் வாரமளவில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய கூறினார்.
இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்ற முடியுமா?
ஐக்கிய நாடுகள் சபையின் 1966ஆம் ஆண்டு சிவில் மற்றும் அரசியல் உடன்படிக்கையின், மரண தண்டனையை ரத்து செய்யும் சரத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என பிரபல மனித உரிமை செயற்பாட்டாளரும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான பேராசிரியர் பிரதீபா மஹனாமாஹேவா தெரிவித்தார்.
அதனால், நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின், மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் ஜனாதிபதி கையெழுத்திடும் பட்சத்தில், அதனை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், இந்த மரண தண்டனை நிறைவேற்றப்படும் பட்சத்தில், இலங்கை எதிர்வரும் காலங்களில் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இலங்கை பாரிய சவாலை எதிர்கொள்ளும் எனவும் பேராசிரியர் பிரதீபா மஹனாமாஹேவா கூறினார்.
இலங்கை மரண தண்டனையை நிறைவேற்றும் நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதாக, பல மனித உரிமை அமைப்புக்கள், ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு பல மனுக்களை கையளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு கையளிக்கப்பட்ட மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவை எதிர்வரும் ஐநா மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் கால இறுதித் தருணத்தில், மரண தண்டனை நிறைவேற்றப்படுமானால், தனிப்பட்ட ரீதியில் அவருக்கு நற்பெயர் கிடைக்கும் என கூறிய பேராசிரியர் பிரதீபா மஹனாமாஹேவா, அது நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அதனால் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு பதிலாக, மாற்று வழிகளை ஆராய வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான பேராசிரியர் பிரதீபா மஹனாமாஹேவா கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் 1976ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதிக்கு பின்னர் மரண தண்டனை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
நீதிமன்றங்களினால் குற்றம் இழைத்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டாலும், அதனை நிறைவேற்றும் ஆவணங்களில் எந்தவொரு ஜனாதிபதியும் 1976ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதிக்கு பின்னர் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.