ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
நீர் வழங்கல் திட்டங்களை முடியுமானளவு இந்த வருடத்துக்குள் பூர்த்திசெய்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தில் நேற்று (19) பல்வேறு நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைத்த பின்னர், பென் ஹெட் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தில் 20 மில்லியன் ரூபா செலவிலான பென் ஹெட் குடிநீர் வழங்கல் திட்டம் திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம் சுமார் 100 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. அத்துடன் திறந்துவைக்கப்பட்ட, 21.5 மில்லியன் ரூபா செலவிலான ரஹூபொல குடிநீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 200 குடும்பங்களும், 54.6 மில்லியன் ரூபா செலவிலான யாலகமுவ குடிநீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 260 குடும்பங்களும் நன்மையடையவுள்ளன.
பதுளை மாவட்டத்தில் உமா ஓயா திட்டத்தினூடாக 530 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் டயரபா நீர்த் தேக்கத்தின் மூலம் பண்டாரவளை, தியத்தலாவ, ஹப்புத்தளை, மிராஹாவத்த ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதற்கட்ட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன், வேவிகம குடிநீர் திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளையும் அமைச்சர் இதன்போது ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் பொரகஸ் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொது மக்களின் பாவனைக்காக திறந்துவைத்தார். 41.2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் 500 குடும்பங்கள் பயனடையவுள்ளன.
அங்கு உரைநிகழ்த்திய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
மலையகத்திலுள்ள இந்திய வம்சாவளி மக்கள் நீண்டகால போராட்டத்தின் மூலமே தங்களது உரிமைகளை படிப்படியாக வென்று வருகின்றனர். இந்திய அரசுடன் இணைந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளின் பின்னரே அடிப்படை உரிமையான வாக்குரிமை வழங்கப்பட்டது.
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி, பதுளை மாவட்டத்தில் இருவர் உட்பட தற்போது 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த பிரதிநிதித்துவம் இன்னும் அதிகரிக்கப்படவேண்டும். உங்களுக்குப் பொறுத்தமானவர்களை தெரிவுசெய்தால்தான், அவர்கள் அபிவிருத்திகளை மக்கள் காலடிக்கே கொண்டுவருவார்கள்.
விகிதாசார தேர்தல் முறையை கொண்டுவரும் முயற்சி இன்னும் கைவிடப்படவில்லை. சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் இதன் பாரதூரங்களை அறித்து எதிர்த்து வருகின்றன. பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் மட்டுமே எமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றார்.
இந்நிகழ்வில் தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், வெலிமடை பிரதேச சபை பிரதி தவிசாளர் சீதா சமரவீர, பதுளை மாவட்ட கட்சி அமைப்பளாளர் தாஜுதீன், தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார், சபையின் உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.