வகவ தலைவர் நஜ்முல் ஹுசைனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாட்டு நடப்புகளை தொலைக்காட்சியில் வெளிச்சம் போட்டுக் காட்டும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் செய்திப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் யூ.எல். யாக்கூப் சிறப்பதிதியாக கலந்து கௌரவித்தார். 57 வது கவியரங்கம் கவிதாயினி கஹவத்தை சுதர்ஷனி பொன்னையா தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரை வழங்க செயற்குழு உறுப்பினர் ஈழகணேஷ் நன்றியுரை வழங்கினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி மேற்கொண்டிருந்தார்.
வகவ கவிஞர்களான பவளவிழா நாயகன் கலைவாதி கலீல், கலாபூஷணம் விருது பெற்ற சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த கவிஞர் பிரேம்ராஜின் புத்திரர் ப்ரியஜித் மது - ஐஸ்வர்யா தம்பதியினர், ஆசிரியர் பயிற்சி கலாசாலை இறுதிப் பரீட்சையில் உயர் சித்திப் பெற்ற கவிதாயினி சுதர்ஷனி பொன்னையா ஆகியோருக்கு வகவம் வாழ்த்தினையும், பாராட்டினையும் தெரிவித்தது.
கவிதாயினி சுதர்ஷனி பொன்னையாவின் தலைமையில் மிகவும் கலகலப்பாக நடந்த கவியரங்கில் கவிஞர்கள் கலைவாதி கலீல், வதிரி சீ. ரவீந்திரன், தமிழ்த்தென்றல் அலி அக்பர், எம். பாலகிருஷ்ணன், எம்.ஜே.எம். நிழாம் , சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், சுஹைதா ஏ. கரீம், இளங்கோ சுதாகர், கிண்ணியா அமீர் அலி, ராஜா நித்திலன், கம்மல்துறை இக்பால், கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ்,இதயன்பன் ஷாமில், கலேவெல ஷப்னா, மஸீதா அன்சார், கவிக்கமல் ரஸீம், பஸ்லி ரூமி, அப்துல் லத்தீப், ரிஸ்லி சம்சாட் ஆகியோர் கவிதை பாடினர்.
சிறப்பதிதியாக கலந்து கொண்ட இலங்கை ரூபவாஹினி தமிழ் செய்திப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் யூ. எல். யாக்கூப் அவர்கள் தனது சிறப்புரையில், 'மிகச் சிறப்பாக நடந்த கவியரங்கினைப் பார்த்து உண்மையிலேயே நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். வகவத்தின் ஆரம்ப செயலாளராக இருந்த என்னோடு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்து காலஞ்சென்ற இர்ஷாத் கமால்தீனையும் இங்கே ஞாபகப்படுத்துகிறேன். இங்கே வாசிக்கப்பட்ட ஒவ்வொரு கவிதை குறித்தும் அதை வாசித்தவரின் பெயரை கூறியும் எனது கருத்தைக் கூறலாம். எனினும் நான் அவ்வாறு கூறாமல் கவிஞர்கள் கவிதை வாசித்தபோது அந்தக் கவிதைகளின் உணர்வுகளை தனது முகத்திலே வெளிப்படுத்திய முன் வரிசையில் வீற்றிருக்கும் சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதும். அதுவே உணர்வுபூர்வமான கவிதைகள் இங்கே வாசிக்கப்பட்டன என்பதற்கு நல்ல சான்று.
மேலும் உரையாற்றிய அவர், 'வகவம் கடல் கடந்தும் செல்ல வேண்டும். பிறநாட்டில் வசிக்கும் தமிழ் கவிஞர்களுடன், கவிதை அமைப்புகளுடன் தொடர்பினை ஏற்படுத்த வேண்டும். உங்கள் கவிஞர்கள் கடல் கடந்தும் சென்று கவிதை வாசிக்க வேண்டும். அதுவே என் பிரார்த்தனை ' என்றார்.
இம்முறை நடந்த கவியரங்கில் பார்வையாளர்களாக பல முக்கிய பிரமுகர்களுடன் கவிதாயினி சுதர்ஷனியின் பெற்றோர் ஏ.பொன்னையா – ராஜேஸ்வரி தம்பதியனரும் கலந்து சிறப்பித்தனர்.