ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
பொத்துவில் பிரதேசத்துக்கு தனியான கல்வி வலயம் அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.
தென்கிழக்கில் காணப்படும் முக்கிய கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற குழு இன்று (10) கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியபோதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.
பொத்துவில் பிரதேசத்துக்கு தனியான கல்வி வலயம் அமைப்பதுடன் பொத்துவில் மத்திய கல்லூரி, ஒலுவில் அல்ஹம்ரா மகா வித்தியாலயம், மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துமாறு முஸ்லிம் காங்கிரஸ் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தது.
கோரிக்கைகளை செவிமடுத்த கல்வி அமைச்சர், இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை உடனடியாக தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டதுடன், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அதனை சமர்ப்பிப்பதாக இச்சந்திப்பின்போது உறுதியளித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நஸீர், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எச். வாசித், அட்டாளைச்சேனை பிரதேசசபை தவிசாளர் நபீல் அமானுல்லாஹ் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.