பிச்சை வேண்டாம் நாயைப் பிடி!


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்- 
புதிதாக அரபுக் கல்லூரிகளை நிறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் செய்யவில்லை. ஆனால் இலங்கை அரசாங்கத்தின் முஸ்லிம் சமய கலாசார அமைச்சரான கௌரவ அப்துல் ஹலீம் அவர்கள் தனது தற்றுணிவில் செய்துள்ளார்.
இதற்கு அவர் பல்வேறு காரணங்களைக் கூறியிருந்தாலும் அவற்றில் முக்கியமானதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
‘இன்றைய சூழ்நிலையில் அரபுக் கல்லூரிகள் சிலவற்றின் மீது ஏனைய சமூகம் சந்தேகம் கொண்டுள்ளது. முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுள்ளவர்கள், தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள், இஸ்லாம் நல்லிணக்கத்தையும், நல்லுறவையுமே வலியுறுத்துகிறது என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்’

இவ்வாறு அமைச்சர் ஹலீம் கூறுவது ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்பதற்கு ஒப்பானதாகும். இவ்வாறானதொரு தீர்மானமானது எதிர்காலத்தில் பிழையான வழிகாட்டல்களுக்கு நதிமூலமாக அமைந்து விடும்.

இன்றைய சூழ்நிலையில் அரபுக் கல்லூரிகள் சிலவற்றின் மீது ஏனைய சமூகம் சந்தேகம் கொண்டுள்ளது என்பதற்காக புதிதாக அரபுக் கல்லூரிகளை நிறுவத் தடை விதிப்பது என்பது கோழையான, தொடை நடுங்கித் தனச் செயல்.
மேலும், ‘முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுள்ளவர்கள், தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள், இஸ்லாம் நல்லிணக்கத்தையும், நல்லுறவையுமே வலியுறுத்துகிறது என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்’ என்றும் அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார். இந்த நாட்டு முஸ்லிம்களின் நாட்டுப்பற்றையும் தீவிரவாதத் தன்மையற்ற போக்கையும் பிற சமூகத்தினர் மத்தியில் தெளிவடையச் செய்வதற்கு அரபுக் கல்லூரிகளை நிறுவத் தடை விதிப்பதுதான் ஒரே வழியென்றால் அது முஸ்லிம் சமூகத்தின் மீதே கோழைத்தனத்தை திணிக்க முயற்சிக்கும் செயலாக அல்லவா அமையும்? இதுதானா முஸ்லிம் காலாசார அமைச்சின் பணிகள்.?
முஸ்லிம் இன வெறுப்பாளர்கள் எம்மீது சுமத்தும் அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு காண்பதற்கு, இல்லாமல் செய்வதற்கு இதுதானா பரிகாரம்? மற்றவர்களிடம் காணப்படும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கும் அவர்களிடம் நல்ல பெயர் பெற்றுக் கொள்ளவும் இன்று அரபுக் கல்லூரிகளை நிறுவத் தடை விதிக்கும் தீர்மானமானது, நாளை எமது சமூகக் கட்டமைப்பு, கலாசாரத்திலும் வெவ்வேறு வழிகளிலும் முஸ்லிம் இன வெறுப்பாளர்கள் கைவைக்கும் நிலைமையை நாமே தோற்றுவித்துக் கொடுக்கும் செயலாக அமையாதா?
முஸ்லிம் இன வெறுப்பாளர்கள் இன்று அரபுக் கல்லூரிகள் மீது சந்தேகம் கொள்கிறார்கள் என்பதற்காக அரபுக் கல்லூரிகளைப் புதிதாக நிறுவதற்குத் தடை விதிப்பது என்றால் நாளை அவ்வாறானவர்கள் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் பெண்களின் உடைகளிலும் பாரிய சந்தேகங்களைக் கொண்டால் (இப்போதும் உள்ளன) பள்ளிவாசல்களை நிர்மாணிக்கவும் முஸ்லிம் பெண்கள் தங்கள் கலாசார உடைகளை அணிவதற்கும் இன்ன பிறவற்றுக்கும் முஸ்லிம் சமய கலாசார அமைச்சே தடை விதிக்கும் தீர்மானங்களைக் கொண்டு வரலாம்.
இந்த நாட்டு முஸ்லிம் மக்கள் தொடர்பில் பேரினவாதச் சிந்தனை கொண்ட சிங்கள சக்திகளுக்கு நிறையவே சந்தேகங்கள் உள்ளன. அதனை நான் இங்கு மறுக்கவில்லை. அவற்றை அவர்களிடமிருந்து நாம் களைய வேண்டிய வழிவகைகளைக் கண்டு அவற்றின் ஊடாக அணுகித் தீர்க்க வேண்டுமென்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதற்காக அரபுக் கல்லூரிகளை புதிதாக நிறுவுவதற்குத் தடை விதிப்பது போன்ற செயற்பாடுகள் பரிகாரங்களாகாதே?
முஸ்லிம் காலாசார அமைச்சு என்பது, ஹஜ்ஜுக்கு கோட்டா பெறுவதும், ஆட்களை அனுப்புவதும் ஏஜென்ஸிகளுக்கு கோட்டா வழங்குவதற்கு மட்டுமான அமைச்சு அல்ல.. அதன் சமூகப் பணிகள் பாரியன. பொறுப்புமிக்கன.
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் மாற்று இனத்தவர்கள் கொண்டுள்ள சந்தேகங்கள், அதிருப்தியான தன்மைகள் குறித்து ஆராய்ந்து அதற்கான பரிகாரங்களைக் காண்பதும் இந்த அமைச்சுக்கும் பொறுப்பான ஒரு விடயமாகக் கொள்ளப்பட வேண்டும்.
தென்னிலங்கையில், அதவாது, சிங்களவர்கள் மத்தியில் எமது சமூகம் தொடர்பில் காணப்படும் சந்தேகங்களுக்கான தெளிவுகளை சம்பந்தப்
பட்டவர்களைச் சந்தித்து வழங்க வேண்டும், கருத்தரங்குகள், விழிப்புணர்வு நடவடிக்கைகளை சிங்களப் பிரதேசங்களில் முன்னெடுத்து எம்மீதான தப்பான அபிப்பிராயங்களை இல்லாமல் செய்ய வேண்டும். இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இன்றைய நிலையில், இவைகளை முன்னெடுப்பம்து முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் முக்கிய கடமையாகும். வெறும் ‘பெயர்ப் பலகை’யில் அமைச்சின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தக் கூடாது.
மல்வத்தை –அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்து தலைவணங்கி ஆசி பெறும் போதாவது எமது சமூகம் தொடர்பில் அவர்களுக்குத் தெளிவான விளக்கங்களை வழங்காமல் அரசியல் பேசி விடடு வருவதால் என்ன பயன்?
இவற்றை எல்லாம் விட்டு, விட்டு மற்றையர்வகள் எம் சமூகத்தைச் சந்தேகிக்கிறார்கள் என்பதற்காக அரபுக் கல்லூரிகளின் புதிததாக உருவாவதற்குத் தடை விதிப்பது என்பது கோழைத்தனமான பின்னடைவுத் தீர்மானம். முஸ்லிம் இன வெறுப்பாளர்கள் எம்மீது சுமத்தும் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் எமது மத, கலாசார, விழுமியங்களுக்குள்ளேயே பரிகாரம் காண முஸ்லிம் கலாசார அமைச்சு தலைப்பட்டால் அது முஸ்லிம் கலாசார அமைச்சினாலேயே இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களின் சமய கலாசாரங்களில் அழிவைக் கொண்டுவரும் விடயமாக அமையும் என்றால் மிகையாகாது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -