கல்முனையின் பாரிய அபிவிருத்தி முன்னெடுப்புக்கு மாநகர சபை ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பங்காற்ற வேண்டும்;

மாநகர ஆணையாளர் அன்சார் அறைகூவல்
அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகரின் பாரிய அபிவிருத்தி முன்னெடுப்புக்கு எமது மாநகர சபை ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பங்காற்ற தயாராக வேண்டும் என்று கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தெரிவித்தார்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகின்ற அரசாங்க ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுகின்ற போதே அம்மக்கள் தமக்கான சேவைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் நாடும் எமது பிராந்தியமும் முன்னேற்றமடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்முனை மாநகர சபையின் புதுவருட வரவேற்பும் ஊழியர் சத்தியப்பிரமாண நிகழ்வும் இன்று முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை மாநகர சதுக்கத்தில் நடைபெற்றபோது தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் இவற்றைக் குறிப்பிட்டார்.
இங்கு மாநகர ஆணையாளர் அன்சார் மேலும் கூறியதாவது;
"போதைப்பொருட்களற்ற, சுற்றாடல் நேயமிக்க மற்றும் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புதல் என்பதே இப்புதுவருடத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது. இது விடயத்தில் எமது மாநகர சபை மிகக்கரிசனையுடன் செயற்படும் என்று உறுதி பூணுகின்றோம்.
எமது பிரதேசம் ஒரு மாநகரமாகும். அதனால் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது. அதற்காக எமது மாநகர சபை ஊழியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் தமது கடமைகளையாற்ற வேண்டிய பாரிய பொறுப்பை சுமந்திருக்கிறோம். கடந்து சென்ற வருடத்தில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய ஊழியர்களையே சிறந்த ஊழியராக தேர்ந்தெடுத்து சான்றிதழ் வழங்கி கௌரவிக்கின்றோம். இது இவ்வூழியர்களை மாத்திரமல்லாமல் ஏனைய ஊழியர்களையும் ஊக்குவிக்கின்ற ஒரு நடவடிக்கையாக பார்க்கின்றோம்.

எமது மாநகர சபைக்கு விவேகமும் ஆற்றல், ஆளுமையும் நிறைந்த முதல்வர் கிடைத்திருக்கிறார். இந்த மாநகர அபிவிருத்தி தொடர்பில் தூரநோக்கு சிந்தனையுடன் எமது முதல்வர் செயலாற்றி வருகின்றார். அவர் பதவியேற்று குறுகிய காலத்தினுள் திண்மக்கழிவகற்றல் சேவையில் எதிர்நோக்கப்படுகின்ற சவால்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்காக சில மூலோபாய திட்டங்களை வகுத்து, செயற்படுத்த கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றார். இவ்வாறான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு நாம் அனைவரும் முதல்வருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.
அதேவேளை, இப்போது எமது மாநகர சபையையும் இப்பிராந்தியத்தையும் அபிவிருத்தி செய்யக்கூடிய பொறுப்பு வாய்ந்த, நிறைவான அமைச்சுப் பதவியொன்று எமது தொகுதிக்கு கிடைத்திருக்கின்றது. அதனூடாக பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு எமக்கிருக்கிறது என்பதை எமது மாநகர சபை ஊழியர்கள் மனதிற்கொண்டு செயலாற்ற தயாராக வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றேன்.
ஓர் அரசாங்க திணைக்களத்தை பொறுத்தமட்டில் தலைமை அதிகாரிகளினால் மாத்திரம் எல்லாவற்றையும் செய்து விட முடியாது. அவை சிறப்பாக நிறைவேற்றப்படுவதற்கு எல்லா மட்டங்களிலும் கடமையாற்றுகின்ற அனைத்து ஊழியர்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகும். அந்த வகையில் எமது மாநகரத்தை சுத்தம், சுகாதாரத்துடன் கூடிய பசுமையான எழில்மிக்க மாநகரமாக கட்டியெழுப்புவதற்கு கைகோர்த்து செயற்படுவோம் என்று அனைத்து ஊழியர்களும் இப்புதுவருட தொடக்கத்தில் திடசங்கற்பம் பூணுவோம்" என்று மாநகர ஆணையாளர் அன்சார் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், மிருக வைத்திய அதிகாரி வட்டப்பொல உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது கடந்த வருடத்தில் மிகச்சிறப்பாக கடமையாற்றிய ஊழியர்கள் பலர் ஆணையாளரினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -