- முபாறக் அப்துல் மஜீத் உலமா கட்சித்தலைவர்-
இஸ்லாம் இறைவன் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்கிறது. வணக்கத்தை இறைவன் வேறு எவருக்கும் எவற்றுக்கும் வழங்க கூடாது என்கிறது. அது உயிரோடு இருப்பவராக இருந்தாலும் சரி உயிரற்ற சிலையாக இருந்தாலும் சரி, இறந்தவர் சமாதியாக இருந்தாலும் சரி, மரம், செடி, கொடியாக இருந்தாலும் சரி எவற்றையும் வணங்க கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை.
இந்த நிலையில் இஸ்லாம் சிலைகளை மட்டும் உடைக்க சொல்லியுள்ளதா?
சிலைகளை வணங்குவது கூடாது என சொல்லும் இஸ்லாம், முஸ்லிம்களின் அரசியல் அதிகாரம் இல்லாத போது மாற்று மதத்தோரால் வணங்கப்படும் சிலைகளை உடைக்கும்படி வழிகாட்டலை செய்யவில்லை.
இஸ்லாத்தின் இறுதி தூதர் முஹம்மது நபி (சல்) அவர்கள் தமது நாற்பதாவது வயதில் இஸ்லாமிய பிரச்சாரத்தை மக்காவில் ஆரம்பித்தார்கள். அந்த வேளையில் மக்காவில் கண்ட இடமெல்லாம் சிலைகள் இருந்தன. நபியவர்கள் சுமார் 13 வருடங்கள் தமது சொந்த ஊரான மக்காவில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்ட போதும் அவர்கள் எந்தவொரு சிலையையும் உடைக்கவில்லை. அப்போது இஸ்லாத்தை ஏற்றோரும் இருந்தனர். அவர்களில் சிலரை ஏவி இரகசியமாக சிலைகளை உடைக்க சொல்லியிருக்க முடியும். மின்சாரமோ, சி சி டி வி கமெராக்களோ, பொலிசோ இருக்காத அந்த காலத்தில் மிக இலகுவாக சிலைகளை உடைத்திருக்க முடியும். ஆனாலும் முஹம்மது நபியவர்கள் அந்த வழி காட்டலை செய்யவில்ல்லை. மாறாக சிலைகளை விடுத்து இறைவன் ஒருவனை மட்டும் வணங்க வேண்டும் என்பதை உள்ளத்தில் விதைப்பதையே மேற்கொண்டார்கள்.
அதன் பின் 23 வருடங்களின் பின் மக்காவை வெற்றி கொண்டு முழு மக்காவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னரே மக்காவில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டன. அதுவும் யாரெல்லாம் அச்சிலைகளை வணங்கினார்களோ அவர்களே அச்சிலைகளை வெறுத்து உடைத்தார்கள் என்பதுதான் இங்குள்ள விசேசம்.
ஆகவே முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் மாற்று மதத்தவர்களால் வணங்கப்படும் சிலைகளை உடைப்பது கூடாது என்பதையும் இறைவன் ஒருவனை மட்டும் வணங்க வேண்டும் என்பதை அழகிய முறையில் எடுத்து சொல்ல வேண்டும் என்பதையே இஸ்லாம் முஹம்மது நபி வாழ்வின் மூலம் நமக்கு காட்டியுள்ளது.