2019 ஆண்டில் தரம் 1 வகுப்புக்களுக்கு அரச உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் பாடசாலைகளில் உள்வாங்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு முறையாக வகுப்புக்களை ஆரம்பிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு ஜனவரி 17 ஆந்திகதியன்று நடாத்தப்படவேண்டுமென கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் சுற்றுநிருபம் மூலமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள் பிரதி மற்றும் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், ஆரம்ப பிரிவு வகுப்புக்கள் நடைபெறும் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குமாறு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் அ. விஜயானந்தமூர்த்தி சகல வலயக்கல்விப்பணிப்பாளர்களையும் கேட்டுள்ளார்.
இச்சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-- புதிய மாணவர்களை பாடசாலைக்கு உள்வாங்கும் பணிகள் ஜனவரி 17 ஆந்திகதிக்கு முன்னர் நிறைவுசெய்யப்படவேண்டும்.
வகுப்புக்களை ஆரம்பிக்கும் தினமான ஜனவரி 17 அன்று புதிய சிறார்கள், பெற்றார்கள் மற்றும் அதிதிகளை வரவேற்றல், தேசிய மற்றும் பாடசாலைக்கொடிகளை ஏற்றுதல், கீதம் இசைத்தல், அத்துடன் புதிய சிறார்களை வரவேற்க சிறப்பான கலை நிகழ்வுகளையும் நடாத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.
எல்லாச்சந்தர்ப்பங்களிலும் புதிய மாணவர்களுக்கும் முன்னுரிமை கிடைக்கும் விதத்த்pல் வேலைத்;திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன் விழா ஒழுங்கமைப்பின்போது சிறார்களுக்கும் பெற்றார்களுக்கும் வசதியீனங்கள் ஏற்படாதவகையில் நடைபெற கவனஞ்செலுத்தப்படவேண்டும் எனவும் அச்சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரம் 1 இற்கு உள்வாங்கப்படும் சிறார்களது பெற்றாருக்கு ஆரம்பக்கல்வி தொடர்பாகவும் முதலாந்தரத்தின் கலைத்திட்டம் குறித்தும் அறிவூட்டல் செய்தல் வேண்டும்.
அதேபோன்று ஜனவரி 17 ஆந்திகதிக்கு முன்னர் தரம் 1 இற்கு பிரவேசிக்கும் மாணவர்களை இனங்காணும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தினை சிறப்பாக நடாத்துவதற்கு பாடசாலையின் பிரிவுகள் பாடசாலை அபிவிருத்திச்சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் போன்ற அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 76 பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு இயங்கும் 65 பாடசாலை அதிபர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாக வலயக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்எம்எம்எஸ். உமர் மௌலானா தெரிவித்தார்.
குறித்த தினத்தில் சில பாடசாலைகளுக்கு தரிசிப்புச் செய்யவுள்ளதாவும் அவர் கூறினார்.
அதேவேளை கல்வி வலயத்திலுள்ள அதிகாரிகள் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் இணைப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ள பாடசாலைக்கு சமுகமளித்து வேலைத்திட்டத்தினை கண்காணிக்குமாறு வலயக் கல்விப்பணிப்பாளர் உமர் மௌலானா கேட்டுள்ளார்.