ஏமாற்றிய உலக அரசியலுடன் உடன்பட்டு வாழ்வதை விடவும், தமிழரின் தனித்துவ விடுதலைக்கான அரசியலுக்காய் உயிர் துறப்பதே மேல் என எண்ணிய பிரபாகரனை சுய நலன் துறந்து தொடர்வதே சுமந்திரன் போன்றோர் செய்கின்ற நன்றி கடனும், கைம்மாறும் ஆகும் என்றும் ஈரோஸ் இயக்கியத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், உற்பத்தி திறன்கள் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்து உள்ளார்.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை ஒட்டி இன்று (26) திங்கட்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
இவரின் செய்தி குறிப்பு வருமாறு:-பிரபாகரனின் பிறந்த நாள் அன்று தமிழ் தேசிய தலைமைகள் தமிழ் மக்களுக்கான அரசியலில் கடந்த வருடத்தில் நடந்தேறிய சாதக பாதக நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்தல் வேண்டும். சுய விமர்சன அடிப்படையில் கருத்துக்களை பரிமாறி எதிர்வரும் ஆண்டுக்கான வியூகங்களை தமிழ் மக்களின் தேச நலன் சார்ந்து வகுத்தல் வேண்டும்.இப்படி செயற்படுவதே தமிழ் தேசகட்டுமானம் என்கிற கட்டுமரத்தின் துடுப்பாக துடிப்புடன் இயங்கிய பிரபாகரனுக்கு செய்கின்ற கைம்மாறாகும்.
பிரபாகரனின் பெயரை கட்சி மற்றும் தனி நபர் அரசியலுக்காக பயன்படுத்தும் கட்சிகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் ஒரு தேர்தலில் வெற்றி பெற்ற அன்றில் இருந்து அடுத்த தேர்தல் வெற்றிக்காக எப்படி பிரபாகரனதும், மாவீரர்களதும் பெயர்களை பாவிக்கலாம் என்கிற உத்தியை கை விடல் வேண்டும். இதனை கை விட்டால்தான் தமிழ் மக்கள் தத்தி தத்தியாவது விடுதலையை அடைவர்.
பிரபாகரன் அவரது ஆதிக்க காலத்தில் உலக அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தை ஒரு தசாப்த காலமாக கணக்கில் எடுக்க தவறியதன் விளைவையே 2009 இல் சந்தித்தார்.அவர் எப்போதும் தவணை முறை அரசியல் செய்தவர் அல்லர். அப்படி செயல்பட்டிருந்தால் காட்டி கொடுத்த உச்ச நிலை தலைவராக இன்றும் உயிர் வாழ்ந்திருப்பார். அபிவிருத்தியை அள்ளி தந்திருப்பார்.
ஏமாற்றிய உலக அரசியலுடன் உடன்பட்டு வாழ்வதை விடவும் தமிழரின் தனித்துவ விடுதலைக்கான அரசியலுக்காய் உயிர் துறப்பதே மேல் என எண்ணிய பிரபாகரனை சுயநலன் துறந்து தொடர்வது சுமந்திரன் போன்றோரின் கடன் ஆகும்.
இன்று பிரபாகரனின் பிறந்த நாள் மட்டுமல்ல; அவர் இறந்த பின்னர் தமிழரின் உறுதியான அரசியல் விடுதலை போராட்டம் பிறழ்ந்த நாளும் ஆகும்..
தந்தை செல்வா உட்பட எந்தவொரு தமிழ் தலைவரும்விடுதலைக்காக குடும்பத்தையே பலி கொடுத்தார்களா? இந்த பலியை ஒரு யாகமாக நண்பன் பிரபாகரன் செய்தான். அவனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நண்பா! முஸ்லிம்கள் தொடர்பாக உனது இயக்கம் விட்ட தவறுகளை நீ திருத்த முயலவில்லை என்பதை தவிர உன்னோடு வேறேதும் கோபங்கள் எனக்கு இல்லை.
வரலாற்றில் காலக்கெடு என்கிற உத்தியை பிரபாகரன் பயன்படுத்தவே இல்லை. அவர் வெல்லவில்லை. ஆயினும் இன்னும் அவர் தோற்கவில்லை என்பதை நிரூபிக்க முடியும்.
தமிழ் தேசிய ஜனநாயக சக்திகளே பிரபாகரனை தோற்கடித்து விடாதீர்கள்.