பிறப்பு, திருமண மற்றும் மரண சான்றிதழ்களை இந்த நாட்டின் எந்தப் பகுதியில் வாழும் பிரஜைகளுக்கும் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை, பத்தரமுல்லையிலுள்ள பதிவாளர் நாயகம் அலுவலகம் மேற்கொண்டுள்ளது.
பொதுமக்கள், 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை உள்ள காலப்பகுதிக்கான சான்றிதழ்களை, சுமார் ஐந்து நிமிடங்களில் இங்கு பெற்றுக்கொள்ள முடியும் என்று, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் பிறப்பு, திருமணம் மற்றும் மரண சான்றிதழ்கள், கடந்த 17 ஆம் திகதி முதல் மிகக் குறுகிய நேரத்திற்குள், பத்தரமுல்லையில் விநியோகிக்கப்பட்டு வருவதாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சான்றிதழ்களை வழங்குவதற்காக, பத்தரமுல்லையில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில், புதிய விநியோக பீடங்கள் இயங்கி வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலாளர் அலுவலகங்களில் நிலவும் வேலைப்பழுவைக் குறைக்கும் நோக்கில், இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
தற்சமயம், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 332 பிரதேச செயலகங்களில் 183 செயலகங்கள், குறித்த இந்தச் சான்றிதழ்களை விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.